19.11.14

உலக கழிவறை தினம் இன்று....உலகின் 700 கோடி மக்களில் 250 கோடி மக்கள் மேம்பட்ட சுகாதாரமான கழிப்பறை வசதி பெறாமல் உள்ளனர்.

இன்னமும் 100 கோடி மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

கழிவறை வசதி இல்லாததால், சில வேளை பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவும் நேரிடுகிறது.

இந்த நிலையை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது.

சர்வதேச வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும் முதன்மையானதுமாக சுகாதாரம் வலியுறுத்தப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டே ஐநா மன்றம் நவம்பர் 19 ந்தேதியை உலக கழிவறை தினமாக அறிவித்துள்ளது.

இந்த தினத்தில் கிராமப்புறங்களில் சுத்தமான சுகாதாரமான கழிவறையை பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஊட்ட ஒவ்வொரும் முயற்சி எடுப்போம்.#worldtoiletday #opendefecation #sanitation

10.10.14

இன்று உலக மனநல நாள்...

மனச்சிதைவு நோய்
உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி பிறரிடம் பேசுங்கள். 
பிறர் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள். 
மற்றவர்களுடன் பேசி மகிழுங்கள். 
உங்களுக்கு எது பிடிக்குமோ அவற்றில் ஈடுபாடு செலுத்துங்கள்..... 

உங்களின் திறமை எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல்படுங்கள்.
உடற்பயிற்சி மூலம் செயல்துடிப்புடன் இருங்கள். 

இவையெல்லாம் உங்களை நல்ல மன நிலையில் வைத்திருக்க உதவும்.

அனைவரும் மனநலத்திற்கு முன்னுரிமை அளிப்பதை மனநல தினத்தில் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
இந்த ஆண்டிற்கான கருத்துருவாக “மனச்சிதைவு நோயுடன் ஆரோக்யமான வாழ்வை வாழுதல்” என்பதை வலியுறுத்துகிறது உலக சுகாதார அமைப்பு. 

உலகளவில் மனச்சிதைவு நோயினால் 2 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களின் இறப்பு சாதாரண மக்களை விட 10-இருந்து 25 ஆண்டுகள் முன்னதாகவே நிகழ்ந்துவிடுவதாக  உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

எனவே, மனச்சிதை உள்ளிட்ட கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ உதவிட வேண்டும் என உலக மக்களுக்கு கேட்டுக்கொண்டுள்ளது. 

மனச்சிதைவு நோய் என்றால் என்ன..?

உளநோயினால் பாதிப்புக்குள்ளானவர்களுள் பெரும்பாலோர் ஸ்கிசோப்ரென்யா (Schizophrenia) எனப்படும் மனச் சிதைவு நோய்க்கு ஆளானவர்.  இந்த ஸ்கிசோபெரன்யா என்பதன் பொருள் மனம் உடைந்துபோதல் என்பதாகும். மனச்சிதைவு அல்லது ஆளுமைச் சிதைவு (Splitting of Mind or Personality) இதன் விளக்கமாகும். இந்த நோயினை, கிரெப்ளின் என்பவர் 1896ஆம் ஆண்டு டிமென்சியா பிரேகாக்ஸ் (DementiaPraecox) எனக் குறிப்பிட்டார். இதனை புலுலர் (1950) என்பார் ஸ்கிசோபெரன்யா என அழைத்தார்.


இந்த மனச்சிதைவு நோயாளிகள் இயற்கை மீறிய அல்லது இயல்பு நிலை தாழ்ந்த (Abnormal) நிலையில் காணப்படுவர். இவர்கள், உலகெங்கும் அங்கிங்கெனாதபடி, நிறைந்துள்ளனர். இவர்கள், பகுத்தறிவு மனப்பான்மைக்கும், காரண_காரிய விளைவுகளுக்கும், உலகியல் நடைமுறை (Worldliness)க்கும் அப்பாற்பட்ட விந்தை வேடிக்கை மனிதர்கள்!!

மனச்சிதைவு நோயாளர்களின் மூளையில் இரசாயன மாற்றங்கள் நடைபெறுகின்றன என்று சொல்வதைவிட, அவர்கள் சமூகத்தால் பழிவாங்கப்பட்டவர்கள் என்று சொல்வதே மிகப் பொருத்தமாக உள்ளது. மனிதர்களின் முழு ஆளுமையையும் சிதைக்கும் மிகக் கடுமையான மனநோய் தான் மனச் சிதைவு நோயாகும்.

மனச்சிதைவு நோயாளர்கள் இரவில் நீண்ட நேரம் கண்விழித்துக்கொண்டு எதையாவது படித்துக்கொண்டு இருப்பார்கள் அல்லது ஏதாவது வெட்டி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் காணப்படும் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், இவர்கள் சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதேயாகும். 

மனச்சிதைவு நோய் என்பது எல்லோருக்கும் புரியக்கூடிய சில நோய்க்குறிகளின் சேர்க்கையாகவே உள்ளது.

அந்நோய்க்குறிகளாவன :
 தர்க்கரீதியற்ற சிந்தனைகள்.
 விநோதமான உணர்வுகள்.
 பிறழ்வு நம்பிக்கைகள்.
 மாயக்குரல்கள் மற்றும் மாயக்காட்சிகள்.
 இயக்கங்களில் ஏற்படும் தடைகள்.

தொடர் துக்கமின்மை
தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல்
தனக்குத்தானே சிரித்துக் கொள்ளுதல்
காதில் மாயக்குரல்கள் கேட்டல்
அதிகமாக சந்தேகப்படுதல்
அனைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு
சுற்றத்தார்கள் அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான எண்ணம்
உடல் தூய்மை படிப்படியாகக் குறைதல்

சில எடுத்துக்காட்டுகள்:

இவர்கள், தமக்கு எல்லாம் வல்ல இறையாற்றல் இருக்கிறது; தாங்கள் கடவுளின் அவதாரம்; என்றெல்லாம் எண்ணி அவ்வாறே நடந்துகொள்வர். தங்களை பகவான் என்று அழைத்துக் கொள்வர். பிறரும் அவ்வாறே தம்மை அழைக்க வேண்டும் என் விரும்புவர். இன்றும் பலர், தாங்கள் இறையடியார்கள், கடவுள் பக்தர்கள்; கடவுளோடு உரையாடுபவர்கள் அவரின் அருளுக்குப் பாத்திரமானவர்கள் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பவர்கள்.

இவர்கள் திடீரென சிரிப்பார்கள். அதே போல் சற்று நேரத்திற்கெல்லாம் திடீரென அழுவார்கள். இதே போல அழவேண்டிய தருணங்களில் சிரிப்பார்கள். சிரிக்கவேண்டிய சூழ்நிலையில் அழுவார்கள். இப்படி தாறுமாறான உணர்வுகள் அடிக்கடி இவர்களுக்கு ஏற்படும். இவர்களுடைய உள் உலகம் விநோதமானது. இவர்களால் புறஉலகில் உள்ளவர்களுடன் இயல்பான முறையில் தொடர்பு கொள்ள இயலுவதில்லை. சில சமயம் இவர்கள் சொன்ன ஒரு கருத்தையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பிறருடைய கேள்விகளை இவர்கள் புரிந்துக் கொள்வதில் சிக்கல் ஏற்படுவதால், கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பதில் அளிப்பார்கள். இவர்கள் மனதில் ஒரே நேரத்தில் பல சிந்தனைகள் தோன்றுவதால், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் பதில் அளிப்பார்கள். இவர்கள் சிந்திக்கும் போது சட்டென்று தடை உண்டாவதால், சில சமயங்களில் பிறர் கேட்ட கேள்விகளுக்கு பதிலே சொல்லாமல் பேந்தப் பேந்த விழிப்பார்கள்.

மனச்சிதைவு நோயாளர்களின் காதுகளில் சில மாயக்குரல்கள் கட்டளையிட்டுக் கொண்டேஇருக்கும். இக்கட்டளைக் குரல்களால் மனச் சிதைவு நோயாளர்கள் படும் துன்பங்கள் சொல்ல முடியாதவை. இவை சில சமயம் நோயாளர்களை மிரட்டும். அவர்களை விமர்சனம் செய்யும். தவறான செயல்களில் ஈடுபட வைக்கும். சில சமயங்களில் இக்குரல்களுக்கு நோயாளர்கள் பதில் அளிக்கவும் செய்வார்கள். இம்மாயக்குரல்கள் இவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளவும் மற்றும் கொலை செய்யவும் தூண்டும்.

மாயக்காட்சிகளும் சில மனச்சிதைவு நோயாளர்களுக்கு தோன்றுகின்றன. தனக்கு அருகில் யாரோ படுத்து இருப்பது போலவும், தங்களை கொலை செய்ய சிலர் ஓடிவருவது போலவும், இறந்து போனவர்களின் ஆவி தங்களுடன் சேர்ந்து உணவு உண்பது போலவும் மாயக்காட்சிகள் தோன்றும். சில அசாதாரணமான காட்சிகளையும், சில அருவருப்பான காட்சிகளையும் சில மனச்சிதைவு நோயாளர்கள் பார்த்ததாகக் கூறியுள்ளனர். மாயச் சுவையுணர்வுகளையும், மாய வாசனை உணர்வுகளையும் கூட சில நோயாளர்கள் அனுபவித்துள்ளனர்.

24.9.14

பெண்களிடையே இணையம் தொடர்பான கல்வி

கூகுள் இந்தியா, பெண்கள் இணையத்தை பயன்படுத்த் வேண்டும் என்பதற்காக பரப்புரை இயக்கத்தை தொடங்கியுள்ளது.
இந்தி நடிகர் பர்ஹாந் அக்தர் உடன் இணைந்து, இதற்காக சமுக ஊடகங்களில் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பெயர்.. #ReachForTheSky (fb.com/hashtag/ReachForTheSky)
இதன் நோக்கம் பெண்களிடையே இணையம் தொடர்பான கல்வியை/அறிதலை அதிகரிக்க செய்தல்.
கடந்த ஆண்டு மின்கல்வி திட்டத்தை தொடங்கிய கூகுள் HelpingWomenGettingOnline என்ற இயக்கத்தை செயல்படுத்தியது. இதற்கு உதவியாக இண்டெல், எச்.யூ.எல்., ஆக்சிஸ் வங்கி இருந்தது.
இதன் விளைவாக கடந்த ஓராண்டில் மட்டும் இணையத்தை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 35 விழுக்காடு உயர்ந்துள்ளது.. ஆண்களின் எண்ணிக்கை 31 % தானாம்.
கூகுள் சொல்கிறது... உலகில் இணையம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா கிட்டத்தட்ட இரண்டாவது இடத்தில் உள்ளது என்று. ஆனால், இணையத்தை ப்யன்படுத்துவோரில் பெண்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட குறைவு என்று கவலைக்கொள்கிறது கூகுள்.
இதற்கு என்ன செய்யலாம் என்ற திட்டத்தில் மேலே குறிப்பிட்ட நடிகரின் MARD என்ற் அமைப்பு மூலம் ReachForTheSky என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது கூகுள்.
பாலின பாகுபாடின்றி பெண்களின் வளர்ச்சிக்கு , உதவ வேண்டும்... குறிப்பாக இணையத்தில் பெண்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள , ப்யன்பாடுகளை அறிந்துக்கொள்ள உதவ வேண்டும்.
தகவல் மற்றும் இணைய கருவிகள்ன் பயன்பாடுகளை இளம்பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் .
இதன் மூலம் இந்தியாவின் எதிர்காலம் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்பதில் ஐயமில்லை.... என்று கூகுள் நம்பிக்கை தெரிவிக்கிறது.
இந்த வேலைகளில் கூகுள் ஈடுபடுவது சரி... அது என்ன இந்தி நடிகரோடு கூட்டு.... என்று எண்ணியிருந்தால் உங்களுக்காக நொறுக்கு தகவல்..
அந்த நடிகரின் MARD அமைப்பு பெண்களுக்கு ஆதரவான ஆண்கள் அமைப்பு... Men Against Rape & Discrimination பாலியல் வன்கொடுமை & பாகுபாடுக்கு எதிரான ஆண்கள்...
குறிப்பு: இது செய்தி மட்டுமல்ல செயல்பாட்டுக்கானதும் கூட. தகவல் புரட்சியில் சமபங்காற்றுவோம்.!

10.8.14

கூகுளின் 2 படி சரிபார்ப்பு: பாதுகாப்பின் அடுத்தக்கட்டம்

ஒவ்வொரு முறையும் நம்ம ஜிமெயிலை யாராவது பார்த்திருப்பாங்களோ... நம்ம பாஸ்வேர்ட் தெரிஞ்சிருக்குமோ... என்ற கவலையா உங்களுக்கு ?

இப்படி சதா சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கும் ரகசிய மனிதர்களுக்கு பயமே இல்லாத வசதி இருக்கிறது... 

அது என்னன்னு தெரிஞ்சுக்கனுமா.. 

காத்திருங்க .. அப்படின்னு சில வாரங்களுக்கு முன் சொல்லியிருந்தேன்....

கொஞ்ச நாள் இணைய சிக்கலால் உங்களுடன் இணையமுடியவில்லை.

இப்ப நம்ம தகவலுக்கு வருவோம்.

நம்மில் பல பேர் ரகசிய வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்... நமக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை யாருக்கும் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.  

கடவுச்சொல்லால் அனைத்தும் யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுகிறோம். இதையும் சிலர் உடைத்து உள்ளே சென்று நம்ம தகவல்களை அறிந்துக்கொள்கிறார்கள்.

இவற்றை தடுக்க என்ன தான் வழி என்பவர்களுக்கு எண்ணினா தான் வழி.. !

புரியவில்லையா...? சிந்திச்சா தான் வழி என்றேன்.

நாம சிந்திப்பதற்கு முன்னே கூகுள் சிந்தித்து விட்டது.

நாம் மட்டுமே அணுகமுடியுங்கிற வழிமுறைகளை வைத்துள்ளது.

அதற்கு பெயர் 2-படி சரிபார்ப்பு மூலம் உள்நுழைதல்

 அதாவது  2-Step Verification


உங்கள் கடவுச்சொல் மற்றும் உங்கள் தொலைபேசி ஆகிய இரண்டையும் பயன்படுத்துவதன் மூலம் வெளிநபர் உங்கள் கணக்கில் உள்நுழைவதிலிருந்து தடுக்கலாம்.


1.  ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்துதல்
2. இணையத்திலிருந்து மென்பொருளைப் பதிவிறக்குதல்
3. மின்னஞ்சல் செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்தல்
இதுபோன்ற செயலின் போது, தீங்கிழைப்பவர்கள் உங்களுடைய கடவுச்சொல்லை அறிந்து உள்நுழைந்துவிடுவார்கள். அவர்கள் கடவுச்சொல் வைத்திருந்தாலும் அவர்களை  2 படி சரிபார்ப்பு மூலம் தடுக்க முடியும்.

உங்கள் கடவுச்சொல்லை தீங்கிழைப்பவர்கள் திருடும்போது, அவர்கள் சிலவற்றைச் செய்ய கூடும்...

1. உங்களுடைய எல்லா மின்னஞ்சல்கள், தொடர்புகள், புகைப்படங்கள்  பார்க்கலாம் அல்லது நீக்கவும் செய்யலாம்.
2. தேவையற்ற அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய மின்னஞ்சல்களை உங்கள் தொடர்புகளுக்கு அனுப்பலாம்
3. உங்களுடைய பிற கணக்குகளுக்கான (வங்கி, ஷாப்பிங், போன்றவை.) கடவுச்சொற்களை மீட்டமைக்க உங்கள் கடவுச்சொல்லைப் பயன்படுத்தலாம்.

இவற்றை தடுக்க 2 படிநிலை சர்பார்ப்பு மிகவும் அவசியமாகிறது.எப்படி இந்த முறையானது செயல்படுகிறது..?

1 கூகுள்-ல் உள்நுழையும் போது, வழக்கம்போல் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுவீர்கள்.
2. பிறகு, உங்கள் தொலைபேசிக்கு உரை, குரல் அழைப்பு அல்லது செல்பேசி பயன்பாடு வழியாக அனுப்பப்பட்ட குறியீடு கேட்கப்படும். அதனை உள்ளிட வேண்டும்.

இப்பொழுது தான் ஜிமெயில் அல்லது கூகுளின் மற்ற பயன்பாடுகள் திறக்கும்.

சரி. இப்ப உங்களுக்கு இன்னொரு கேள்வி கேட்க தோன்றும்...

நான் என் கணினியில் பயன்படுத்தும் போது ஏன் நான் 2 படிநிலை சரிபார்ப்பு வைத்துக்கொள்ள வேண்டும். நான் பயன்படுத்தாத கருவிகளில் நுழையும்போது மட்டும் சரிபார்ப்பு இருந்தால் போதுமே என்று எண்ணுவீர்கள்...

உள்நுழையும்போது, குறிப்பிட்ட கணினியில் 2ம் படிநிலை குறியீடு கேட்கப்படாமல் இருக்க வழி உள்ளது. அப்படி செய்யும் போது, நீங்கள் உள்நுழையும்போது கணினியானது உங்கள் கடவுச்சொல்லை மட்டுமே கேட்கும்.

இதே வழிமுறைதான் செல்பேசியில் மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கும்.

சரி இதை எப்படி செயல்படுத்துவது..?

இதை சொடுக்கவும்: https://accounts.google.com/SmsAuthConfig அல்லது https://www.google.com/settings/security என்ற இணைப்பிற்கு சென்று 2 படிநிலை சரிபார்ப்பு வசதியை நிறுவிக்கொள்ளலாம்..

அதற்கான வழிமுறைகள் படங்களாக கீழே உள்ளன..

மேற்கண்ட  1, 2 வது நிலைகளை அடுத்து, 3 மற்றும் 4வது நிலைகளில் இந்த பாதுகாப்பு முறை பற்றிய விளக்கம் இருக்கும்.

அனைத்து முடிந்தாயிற்றா..?

இப்போது நீங்கள் பாதுகாப்பு வலையத்திற்குள் கூகுள் கணக்கை கொண்டு வந்துவிட்டீர்கள்..

சரி . இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றாலும், நிறுத்திக்கொள்ளலாம். அதற்கும் அங்கேயே இணைப்பு இருக்கும்..


2 படிநிலை சரிபார்ப்பின் சிறப்பம்சங்கள்


உரைச் செய்தி வழியாக குறியீடுகளை பெறுதல்
உங்கள் செல்பேசிக்கு சரிபார்ப்பு குறியீடுகளை கூகுள் குறுஞ்செய்தி வழியாக அனுப்பும். 

மாற்று தொலைபேசி எண்கள்
மாற்று தொலைபேசி எண்களைச் சேர்க்கவும், ஏனெனில் முதன்மை தொலைபேசி கிடைக்காத நேரத்தில் Google சரிபார்ப்பு குறியீடுகளை உங்களுக்கும் அனுப்புவதற்கான மற்றொரு வழியாகும்.
 தொலைபேசி அழைப்பை விரும்புகிறீர்களா?
உங்கள் சரிபார்ப்பு குறியீடு மூலம் உங்களுடைய  தொலைபேசிக்கு Google அழைக்கும்

பிரதி குறியீடுகள்
உங்கள் தொலைபேசிகள் கிடைக்காத நேரங்களில், அதாவது பயணம் செய்யும்போது ஒரு முறை பயன்படுத்தும் பிரதி குறியீடுகளை பதிவிறக்கிக்கொள்ளலாம்.

இணைப்பும் இல்லை, சிக்கலும் இல்லை
Android, iPhone அல்லது BlackBerry ஆகியவற்றிற்கான Google Authenticator பயன்பாடானது சரிபார்ப்புக் குறியீடுகளை உருவாக்கி தரும். உங்கள் சாதனத்தில் தொலைபேசி அல்லது தரவு இணைப்பு இல்லாத நேரங்களிலும் இது வேலைசெய்யும்.

உங்கள் கணினிகளைப் பதிவுசெய்யவும்
உள்நுழையும்போது, உங்கள் கணினியில் மீண்டும் குறியீடு கேட்கப்படாமல் இருக்க அமைப்புகளில் தேர்வு செய்துக்கொள்ளலாம்.


நினைவிற்கொள்க... இந்த இரண்டு படிநிலை சரிபார்ப்பு மூலம் உள்நுழைதலுக்கு.. செல்பேசி அவசியம். அதில் தான் ரகசிய குறியீடு ஒவ்வொரு முறையும் வரும்.

சந்தேகங்களுக்கு YourRaajV@Gmail.com அல்லது fb.com/YourRaajv என்ற முகநூல் முகவரிக்கு செய்தி இடவும்.இன்னும் தொழில்நுட்பம் பேசுவோம்....  

22.7.14

சிறிய ரக இன்வெர்டர்களை தயாரிக்க அழைக்கிறது கூகுள்..!மின்னியல் பொறியாளர்களே... உங்களால் சிறிய அளவில் இன்வெர்ட்டர் தயாரிக்க முடியுமா.. அல்லது அதற்கான திட்டத்தில் இருக்கிறீர்களா..?

கூகிளின் லிட்டில் பாக்ஸ் சேலஞ் - ல் இணைந்திடுங்கள்..
பெரிய பெரிய கருவிகளெல்லாம்.. சிறிய பேட்டரியில் இயங்கும் போது.. அதைவிட சிறிய ரகத்தில் உருவாக்கி மின்சாரத்தை பயன்படுத்த நம்மால் ஏன் முடியாது..

இப்படி கேட்கிறது கூகுள்..

ஏன் முடியாது..?
இந்த சுட்டியை தட்டி விவரத்தை படித்து, தயாராகுங்கள் மின்னியலில் புரட்சியை ஏற்படுத்த.....

ம்... கிளப்புங்கள்...

The Little Box Challenge
தலைப்பைச் சேருங்கள்

7.7.14

ஜிமெயிலை லாக் அவுட் செய்ய மறந்துவிட்டீர்களா....?

கடந்த வாரம் ஜிமெயிலில் இருந்துக்கொண்டே அலுவலக மின்னஞ்சல்களை பெறுவது, பதில் எழுதுவது பற்றி விளக்கமாக பார்த்தோம்...

இன்று, தேவையில்லாமல் வெவ்வேறு இடங்களில் சைன் இன் செய்துவிட்ட ஜிமெயிலை சைன் அவுட் செய்வது பற்றி பார்ப்போம்.

ஏற்கனவே சொன்னது போன்று, உங்கள் ஜிமெயில் சைன் அவுட் செய்யாமல் சென்றுவிட்டீர்கள்...


உடனே அதனை யாருக்கும் தெரியாமல் சைன் அவுட் செய்ய வேண்டும்... என்ன செய்யலாம்... என்று யோசிப்பவர்களுக்கு பதில் இருக்கிறது.

செல்பேசியிலோ, வீட்டு கணினிலேயோ அல்லது இணைய வசதி உள்ள ஒரு கணினியில் அமர்ந்துக்கொள்ளுங்கள்...

உடனே ஜிமெயிலை திறந்து உள் நுழையுங்கள்....

எதற்காக ஜிமெயிலை திறந்தோம் என்ற சிந்தனையே இல்லாமல், இன்பாக்சில் மெயில் படித்துக்கொண்டிருக்காதீர்கள்... ஆன்லைனில் இருக்கிறவங்க வெட்டியா ஏதாவது செய்திட்டிருப்பாங்க....அவங்களோடு அரட்டை செய்துக்கொண்டிருக்காதீர்கள்...

உங்கள் அஞ்சல் பெட்டியின் கீழ் பகுதிக்கு வாங்க...

அங்கு கீழ் காணும் படித்தில் இருப்பது போன்று தெரிகிறதா... ?

அங்க last activity கீழ் details என்பதை சொடுக்கவும்....

இப்போது இன்னொரு திரை தோன்றும்...


அதில், இதற்கு முன் எங்கெங்கு உங்கள் ஜிமெயில் திறக்கப்பட்டது... தற்போது எந்தெந்த கணினியில் திறந்திருக்கிறது என்பதை காட்டும்..

அங்கு sign out of all other sessions என்பதை சொடுக்கினால்...

உலகின் எந்த மூலையில் உங்கள் ஜிமெயில் திறந்திருந்தாலும்.... உடனே மூடப்படும்....

இது பாதுகாப்பு தொடர்பான விஷயமும் கூட. அதாவது... உங்கள் கடவுச்சொல்லை அறிந்த வேறுயாரேனும் உங்கள் ஜிமெயிலை திறந்திருந்தாலும் இந்த முறை மூலம் கண்டறியலாம்.

மேற்காணும் படத்தில் location என்ற பகுதியில் IP எண்கள் இடம்பெற்றிருக்கும். அதன் மூலம் வெளி நபர் அணுகலை கண்டறியலாம்.


சரிங்க.... பாதுகாப்பு முக்கியம்... அதனால இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்...


ஒவ்வொரு முறையும் நம்ம ஜிமெயிலை யாராவது பார்த்திருப்பாங்களோ... நம்ம பாஸ்வேர்ட் தெரிஞ்சிருக்குமோ... என்ற கவலையா உங்களுக்கு ?

இப்படி சதா சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கும் ரகசிய மனிதர்களுக்கு பயமே இல்லாத வசதி இருக்கிறது... 

அது என்னன்னு தெரிஞ்சுக்கனுமா.. 

காத்திருங்க.....


-வெ.யுவராசன்.

2.7.14

அலுவலக மின்னஞ்சல்களை, சொந்த மின்னஞ்சல் பெட்டியில் பெற வேண்டுமா..?


கூகுள் !!!

இந்த சொல் இன்றைய தலைமுறைக்கு இன்றியமையாத சொல்....

கூகுள் நிறுவனம் வழங்கியுள்ள தேடுபொறி... மூலைமுடுக்கெல்லாம் தேடி குப்பையாக இருந்தாலும், சீராக கொடுக்க வல்லது.

இந்த கூகுளின் தயாரிப்புகள் ஏராளம்...

அவற்றை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் ஏராளம்...

ஆனால், நம்மவர்கள் கூகுள் தயாரிப்புகளில் உள்ள மேம்போக்கான பயன்களை அனுபவித்து, உள்ளார்ந்த சேவைகளை பயன்படுத்தாமலே இருந்து விடுகின்றனர்...


அப்படி மறைந்து கிடக்கும் பல உண்மை தகவல்களை உங்களுக்கு அளிக்கலாம் என்றிருக்கிறேன்....

சரி... 

இன்னைக்கு என்ன பார்க்கலாம்....?


உங்களுக்கு என தனி  ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பீர்கள் தானே.. 

அதுவும் கூகுள் வழங்கும் ஜிமெயிலை தான் பொதுவான பயன்பாட்டிற்கு வைத்திருப்பீர்கள் என்று நான் எண்ணுகிறேன்...

அதைப்பற்றிய ஒரு தகவலை அறிந்துக்கொள்வோம்......


அதுக்கு முன்னாடி கீழ்காணும் கேள்விக்கு பதில் அளியுங்கள்...

1. ஜிமெயில் அதிகம் பயன்படுத்தினாலும், எனக்கு யாஹூ, ரெடிஃப், ஆஃபிஸ் மெயில் என 2 அல்லது 3 மின்னஞ்சல்கள் இருக்கிறது.

2. ஜிமெயிலை அடிக்கடி பார்ப்பேன்.. ஆனால், ஆஃபிஸ் மெயிலை கூட மெயில் அனுப்பி இருக்கேன்னு யாராவது சொன்னாதான் திறந்துபார்ப்பேன்...

3. எல்லா மெயிலும் ஒரே இன்பாக்சில் கிடைக்கிறதா இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்.

4. ஒரே இன்பாக்சில் எல்லா மெயிலும் கிடைக்கிற மாதிரி, ஒரே இடத்தில் இருந்து வெவ்வேறு மெயில் ஐடியில் மெயில் அனுப்புற மாதிரியான வசதி இருந்தா கோடான கோடி புண்ணியம்...


என்ன மக்களே... 

மேலே இருக்கிற யோசனை தான் உங்களுடையதுமா..?

....

ஆமாம்ங்கிற உங்கள் குரல் என் காதுக்கு கேட்டிருச்சு...


சரி சுருக்கமா விசயத்திற்கு வருவோம்...


ஜிமெயில்  சேவையில் உங்களுடைய மற்ற மின்னஞ்சல்களையும் பெறும் வசதி உள்ளது.

அதை எப்படி செயல்படுத்துவது பற்றி படிப்படியாக பார்க்கலாம்..


முதலில் உங்கள் அலுவலக மின்னஞசல்களை ஜிமெயிலில் பெறும் வசதியை செய்து பார்க்கலாம்....

1. ஜிமெயிலை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.
2. இன்னொரு இடத்தில் அலுவலக மின்னஞ்சலையும் திறந்துவைத்துக்கொள்ளுங்கள்.
3. உங்கள் ஜிமெயிலின் வலது மேல் மூலையில் Settings (அமைப்புகள்) சின்னத்தை சொடுக்கவும்.
4. அங்கு Settings என்பதை சொடுக்கவும்
5. இப்போது திறக்கப்படும் திரையில், Forwarding and POP/IMAP என்பதை சொடுக்கவும்.

6. இங்கு POP Download பகுதியில்,  Enable POP for all mail. தேர்வு செய்யவும்.

அடுத்து Save Changes சொடுக்கவும்.


7. தற்போது  Accounts and imports என்பதை சொடுக்கவும்.
8. Check mail from other accounts என்ற இடத்தில் Add a POP3 mail account you own என்பதை சொடுக்கவும்

9. தற்போது தோன்றும் திரையில் உங்கள் அலுவலக மின்னஞ்சலை இடவும்.
10. Next என்பதை சொடுக்கி அடுத்த பக்கத்திற்கு வரவும்.
11.  இப்போது User Name, Password பகுதியில் அலுவலக மின்னஞ்சல் முகவரி மற்றும் அதன் கடவுச்சொல்லை இடவும்...
12. அதற்கு கீழுள்ள, Leave a copy of retrieved message on the server. என்பது உங்கள் மின்னஞ்சல் பெறப்பட்ட உடன், அலுவலக மின்னஞ்சல் பெட்டியில் அந்த அஞ்சல் இருக்க வேண்டுமா...அல்லது நீக்கிவிட வேண்டுமா என்ற கேட்கப்படுகிறது. அஞ்சலின் அசல் அலுவலக அஞ்சல் பெட்டியில் இருக்க வேண்டும்என்றால், அதனை தேர்வு செய்ய வேண்டாம்.
13. Always use a secure connection (SSL) when retrieving mail. இதனை தேர்வு செய்துக்கொள்ளவும்.
14. Label incoming messages: என்பது உங்கள் ஜிமெயிலில் , அலுவலக அஞ்சல் வருகிறது என்றால், அதற்கான குறியீடு வேண்டுமல்லவா... தேவையெனில் அதனை தேர்வு செய்துக்கொள்ளவும்.
15. Archive incoming messages (Skip the Inbox) என்பது, உங்கள் ஜிமெயிலில் அலுவலக அஞ்சல் இடம்பெறும் இடம் சம்பந்தமானது... இன்பாக்ஸில் வரவேண்டும் என்றால் தேர்வு செய்ய வேண்டாம். இல்லையெனில், தேர்வு செய்துக்கொள்ளவும்.
16. அடுத்து Add Account சொடுக்கவும்.
17. தற்போது, உங்களது அலுவலக மின்னஞ்சல் ஜிமெயிலோடு சேர்ந்துவிட்டது.
18. இறுதியாக, if you want to be able to send mail as this address என்று கேட்கும் அதனை தேர்வு செய்தால், அலுவலக மின்னஞ்சல் முகவரியிலேயே பதிலளிக்கலாம்.

முயற்சி செய்து பாருங்கள்....

மேற்கண்ட வழிமுறைகளில் சிக்கல் ஏற்பட்டால், கீழுள்ள கருத்துப்பெட்டியில் குறிப்பிடவும்.. உடனே பதிலளிக்கிறேன். 


அடுத்து.....

உங்கள் மின்னஞ்சலை அலுவலகத்தில் திறந்து வைத்து பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்... உடனே ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது... அதில் கவனம் செலுத்திக்கொண்டு எழுந்து சென்று விடுகிறீர்கள்... வீட்டுக்கு போன உடனே, மின்னஞ்சலை மூடாமல் வந்துவிட்டோமே என்ற ஞாபகம் வருகிறது...

யாரிடமாவது சொல்லி லாக் அவுட் செய்ய சொல்லலாம் என்றால் நாமே மூன்றாவது மனிதருக்கு மின்னஞ்சலை பார்க்க அனுமதிப்பது போல் ஆகிவிடும்...

யாருக்கும் தெரியாமல் லாக் அவுட் செய்ய வேண்டும்... எப்படி சாத்தியம்....?

சாத்தியப்படுத்துவோம்... விரைவில்....

- யுவராசன். வெ

22.6.14

தமிழர் தம் அடையாளங்களை அழித்தொழித்து ஆண்டென்ன வாழ்ந்தென்ன..

மொழி என்பது தொடர்புகளுக்காகவும், கருத்து பகிர்வுக்காகவுமான ஊடகம்...

மொழியாலே இனம் அடையாளம் காட்டப்படுகிறது...

உலகமயமாக்கலில் அறிவியலை நோக்கி பயணிக்கிற இனங்கள்... அறிவியலை பயன்படுத்தும் இனத்தோடு, அதன் மொழியோடு ஒன்றிணையவே விரும்புகிறது... காரணம் அங்கு வளர்ச்சி இருப்பதாக நம்பப்படுகிறது..

இங்கு தான் தாய்மொழிகள் அழிக்கப்படுகின்றன...

மொழிகளை அழிப்பது இனங்களை அழிப்பதற்கு இணை...

அறிவியலில் சாதனைகள் புரியும் தமிழர்... அவரின் ஆக்கங்களை தமிழில் தந்துதவுவதில்லை...

அடுத்த தலைமுறைக்கு தாய்மொழியிலேயே அறிவியலை அறியும் வாய்ப்பை கொடுத்துதவும் நிலை இருந்தால்....

அறிவியலின் அடுத்த இலக்கை நோக்கி நமது பயணம் இருக்கும்....

நம்மை நோக்கி இந்த உலகம் இருக்கும்...

இதே நிலையில் தான் அனைத்து மொழிகளும் களமாடுகின்றன..

ஆனால் அவற்றில் போராடி வெல்வது.. அரசியல்.

அறிவியலிலும், அரசியலிலும் தமிழை நிலைநாட்ட, நிலைநிறுத்த, நமக்குள் தமிழை ஒருநிலைப்படுத்துங்கள் தமிழர்களே...!

தமிழர் தம் அடையாளங்களை அழித்தொழித்து ஆண்டென்ன வாழ்ந்தென்ன..

11.6.14

வாட்ஸ் ஆப் தமிழில்...

இன்றைய தகவல் நுட்பவியல் வளர்ச்சியில் மனிதர்கள் உலகம் முழுவதும் பரவியிருந்தாலும்.. இணைந்தே இருக்கின்றனர்...

சமூக இணையங்களால் பிண்ணப்பட்டுள்ள உறவுகள் மொழிகளை கடந்து உறவாடுகின்றன...

மொழி தடையால் ஓருமொழி கொள்கை சிலகாலம் கோலோச்சியது...

இனி அதற்கில்லை பணி...

பன்மொழி கொள்கையை பயன்படுத்த தொடங்கிவிட்டன இணையதளங்கள்...

தொடர்புகருவிகளும் செம்மையாக்கப்பட்டுவிட்டன....

இனி தமிழ் இல்லாத இடமில்லை என்றாக போகிறது...

கூகுள், விக்கிப்பீடியா, ஃபேஸ்புக், ... சாம்சங், ஆப்பிள், நோகியா, மைக்ரோமேக்ஸ் ... தமிழாகி விட்டன...

வாட்ஸ் அப் மட்டும் விதிவிலக்கா என்ன...?

அதுவும் தமிழாகி வருகிறது...

இதற்கெல்லாம் யார் காரணம்... நம்மை போன்ற பயன்பாட்டாளர்களால் தான் சாத்தியமாக்கப்பட்டிருக்கின்றன...அன்பர்களே... உங்கள் ஒவ்வொருவரின் முயறசி , ஈடுபாடு தேவை இக்கணம்...

வாட்ஸ் அப்பின் தமிழாக்கம் முழுமை பெற
http://translate.whatsapp.com/ ல் இணைந்து தினம் ஒரு சொல்லை தமிழாக்குங்கள்....

இனி தமிழ் மெல்ல வளரும்..

தமிழிற்கினிய தங்களின் பங்களிப்பை எதிர்நோக்கி....

யுவராசன்....

(படம்- பகுதியாக மொழி பெயர்க்கப்பட்ட வாட்ஸ் அப்..)

விக்கிப்பீடியா...!


தகவல் புரட்சியால், அறிவு வளர்ச்சி பன்மடங்காகி விட்டது..

 "நான் படித்தேன்... நான் மட்டுமே அறிந்துக்கொண்டேன்... " என்றில்லாமல், " நான் படித்தேன்... நான் அனைவரிடமும் பகிர்ந்துக்கொண்டேன்" என்ற நிலைமை முகநூல் போன்ற சமூக ஊடகங்களால் சாத்தியமாகிவிட்டது... 

இணையத்தின் ஊடுருவலால்... தனியுடமையெல்லாம் பொதுவுடைமையானது .(வரம்புக்குட்பட்டது)

 கூகுள் தேடுபொறியில் தேடினால் எதுவும் நொடிகளில் கிடைத்துவிடுகிறது.... இப்படி தகவல் பொதியத்தில் எல்லாமே இருக்கிறதா...

குறிப்பாக தமிழில்....

 நூற்றுக்கு நூறு சரி என்று சொல்லிவிட முடியாது...

 அறிவியல் துறையில் எண்ணற்ற ஆய்வுகளும் , தகவல்களும் இணைய உலகில்..... தமிழில் பதியப்படாமலே உள்ளது...

 ஆம்...

 அறிவியலில் மேலோங்கிய இனமும் மொழியும் தான் நீண்ட காலம் வாழும்...

இல்லையெனில்.. 

எளிதில் காணாமல் போய்விடும் என்பதில் ஐயமில்லை....

 சரி என்ன தான் செய்யவேண்டும் என்கிறீர்களா...

 இணையத்தில் ஒரு தகவல் பற்றி தேடும் பொழுது ...

முதல் முடிவாக , விக்கிப்பீடியா தான் கூகுள் பொறி காண்பிக்கும்... அங்கு சென்று அள்ளிக்கொள்வீர்கள் தகவலை....

 அங்கு எல்லாவற்றிற்கும் தமிழாக்கம் இல்லாததை எண்ணி..... வருத்தப்பட்டீர்களானால்....

 அந்த வெறுமையை போக்க இன்றே சபதமெடுங்கள்... இந்த நிலை புதிய தலைமுறைக்கும் வர கூடாது...

 அனைத்து மனித அறிவும் கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உருவானது விக்கிப்பீடியா...

 இத்திட்டம் இலாப நோக்கமற்றது, பக்க சார்பற்றது.....

 இத்திட்டத்தின் வழி இதுவரை, தமிழில் 61,256 கட்டுரைகள் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியா முயற்சியானது 2003 ஆம் ஆண்டு ஆரம்பமானது.

விக்கிப்பீடியா 260 உக்கும் மேலானான மொழிகளில் மொத்தமாக 9,000,000 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.

தமிழில் உள்ள 61,256 கட்டுரைகள் இதில் அடக்கம். ஆனால் ஆங்கிலத்தில் 45 லட்ச கட்டுரைகளை கடந்து செல்கிறது....

 இங்கு லட்சங்களில் தமிழ் கலைக்களஞ்சிய தொகுப்புகளை உருவாக்க லட்சியம் கொள்வோம்... 

அறிவியல் தமிழ் மேம்பட கரம் கோர்ப்போம்...
 ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்த வோ...
ஆங்கில கட்டுரைக்கு தமிழாக்கம் செய்யவோ...
புதிதாக தகவலை பதிவிடவோ....


 விக்கிப்பீடியாவுக்கு சென்று , கணக்கை தொடங்குங்கள்...
 அறிவு சமூகத்தை அடையாளங்காட்டுங்கள்....

 தமிழிற்கினிய தங்களின் பங்களிப்பை எதிர்நோக்கி...
 யுவராசன்...

8.5.14

தமிழ் இணைய மாநாடு 2014: ஆய்வுச் சுருக்கங்கள் அனுப்புவதற்கான முதல் அறிவிப்பு


உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) அடுத்த (13வது) தமிழ் இணைய  மாநாடு 2014 புதுச்சேரியில் செப்டம்பர் மாதம் 19-21 தேதிகளில் நடத்த உள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது.

உத்தமம் தமிழ் இணைய மாநாட்டைப்  புதுச்சேரியில் புதுவை பல்கலைக்கழகம், புதுவை தமிழ்ச் சங்கம், புதுவை மொழியியல்  மற்றும் பண்பாட்டு நிறுவனம், பல்லவன் கல்வி நிறுவனங்கள், இந்திய மொழிகளுக்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்த உள்ளது.

மாநாடு நடைபெறுவதற்கான செயற்குழுக்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில்  ஒன்றான "மாநாட்டு நிகழ்ச்சிக் குழு"விற்கு மாநாட்டின் தொழில்நுட்ப அரங்குகளில் படைக்க உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஒன்றுசேர்த்து, பரிசீலனை செய்து,  தக்க கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மைத்  தலைப்பாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2014 மாநாட்டிற்குத் “தமிழ் மொழியில் இயல்மொழிப் பகுப்பாய்வு” முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்-பட்டுள்ளது.

மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இயல்மொழிப் பகுப்பாய்வு - தமிழ்ச் சொல்லாளர்(சொற்பிழை திருத்தி,     சந்திப்பிழை திருத்தி…) ஒளியெழுத்துணரி, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு  பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த்திறனாய்வு நிரல்கள்,     இலக்கணத் திருத்திகள், மின்னகராதி அமைத்தல்...
கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தல்,     இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க் கணினி குறுஞ்செயலிகள்   (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்)
திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
கணினி மற்றும் இணையவழி தமிழ்க் கல்வி கற்றல், கற்பித்தல்.
தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள்
தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ் நூல்கள் ஆய்வு,     கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள்….
தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்-பட்ட     கணினி மென்பொருள்கள்.

மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையின் சுருக்கத்தை A4 தாள் அளவில் 1-2 பக்கங்களில் ஜூன் 30ஆம் தேதிக்குள் cpc2014@infitt.org  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரை தமிழ் ஒருங்குறியில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கம் ஆங்கிலத்திலோ
 (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம்.

மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை மிகக் கவனமாக ஆய்ந்தறிந்து மாநாட்டில்  படைக்கும் தரம் கொண்ட கட்டுரைச் சுருக்கங்களைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு  ஜூலை 31ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.  கட்டுரை பரிசீலனைக்கு தேவையெனில் ஆய்வுக்குழு கட்டுரை ஆசிரியர்களிடம் முழுக்கட்டுரையை அனுப்பிக்க கேட்கலாம்.

தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச் சுருக்கங்களின் முழுக்கட்டுரைகள் 4-6 பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வகையில் கட்டுரைச் சுருக்கம் மற்றும் முழுக்கட்டுரை பற்றிய நிகழ்ச்சிகள் குழுவின் கருத்தே கடைசி முடிவாக இருக்கும்.  

ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டுரையாளர்கள் எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்க வேண்டும்.
மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறொம்.

மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட-வுள்ளது.  இம்முறை மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர் திரவு(ISSN) எண்ணுடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  இவ்வாறான எண்ணுடன் வெளியிடப்படும் புத்தகங்கள்  உலகின் முக்கிய/பெரிய  நூலகங்களில் தக்க முறையில் நூல்கள் பட்டியலில் உள்ளிடப்பட்டு ஆய்வுக் கட்டுரைகளில் தரமான முறையில் கூர்வு செய்யப் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ் இணைய மாநாடு 2014இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2014@infitt.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முனைவர் கு. கல்யாண சுந்தரம்
தலைவர், மாநாட்டு நிகழ்ச்சிகள் குழு

13 ஆவது உலகத் தமிழிணைய மாநாட்டிற்கான முக்கியமான  இறுதி நாட்கள்:
கட்டுரையின் ஆய்வுச்சுருக்கம் அனுப்ப     : 30 ஜூன் 2014
தேர்வு செய்யப்பட்ட கட்டுரைச்  சுருக்கங்கள் பற்றிய அறிவுப்பு  : 31 ஜூலை 2014
முழுக்கட்டுரை அனுப்ப    : 30 ஆகஸ்ட் 2014
மாநாடு நடைபெறும் நாட்கள்  :  19-20 செப்டம்பர் 2014


உள்நாட்டு தொடர்புகளுக்கு
——————————
தமிழ் இணைய மாநாட்டு அலுவலகம்:
234, ரங்கப்பிள்ளை தெரு, புதுச்சேரி – 605 001
பேசி: 0413 233 692
செல்பேசி : 0091 9442029053, 0091 944343448
மின்னஞ்சல்: muelangovan@gmail.com---------

Tamil Internet 2014  (13th International Conference)
Puducherry, India  - September 19- 21, 2014
CALL FOR PAPERS

The International Forum for Information Technology in Tamkl (INFITT) is pleased to inform that arrangements are currently underway to hold the next Tamil Internet Conference 2014 at Puducherry (aka Pondicherry), India (Pondicherry University campus) during 19-21 September 2014.

The INFITT annual conference is being co-hosted by the following institutions: Pondicherry University, Puduvai Tamil Sangam, Puducherry Institute of Linguistics and Cultures (PILC), Puduvai Tamil Sangam, Pallavan Group of Institutions and the Central Institute of Indian Languages (CIIL).

One of the committees formed to organize "Tamil Internet 2014, the "Conference Program Committee" (CPC)* has been given the task to collect, review and select papers for presentation in various technical sessions of the conference. "Natural Language Processing (NLP) as applied to Tamil" has been chosen as the principal theme for the Tamil Internet Conference 2014.

The CPC is pleased to release the following "Call-for-Papers for presentation at the Tamil Internet 2014".  We welcome research papers on the following topics to be addressed at various technical sessions of the Conference.

NLP applications in Tamil: Spellchecker, OCR, Voice recognition,    speech synthesis, Search engines, Machine Translation, Data-mining, etc.
Tamil "enabling" in mobile platforms (smartphones, tablets,..) with    particular emphasis for Tamil Apps for use on iOS, Android and Windows 8 platforms
Open Source Tamil softwares and Tamil Localization
Computer- and online-assisted Teaching, Learning of Tamil
Tamil content and delivery via Internet:  Blogging, microblogging,      Wikipedia, Podcasting, social networks,...
Tamil Digital Library and e-content delivery across various handheld     devices (ebooks, ezines,..)
Tamil Databases and e-commerce
Any other hardware, software development related to Tamil computing technology

All those interested to make an oral presentation at the conference are requested to submit a 1-2 page (A4) summary/abstract of their planned presentation to the CPC (email ID: cpc2014@infitt.org) on or before 30 June 2014.
The conference program committee will send an acknowledgement mail on the receipt of the abstract.

The abstracts can be in Tamil, English or bilingual (Tamil and English) but all abstracts must be based on Unicode encoding. The abstract submission can be in the form of plain text (.txt), Microsoft Word (.doc or .docx), Open office and html formats (formats where the content can be extracted).
Please try to be as precise on what you want to present.

Submission of an abstract implies that at least one author of the paper attends the conference to present the work in person. Proxy or remote presentation is not permitted. In cases where the message from the abstract  is not clear, CPC may request more details in the form of an expanded abstract (4-6 pages) to judge adequately the submission.

Authors of papers accepted for oral presentation will be informed on or before 31 July 2014. As with the abstracts, the full paper of the presentation (4-6 A4 size pages inclusive of all graphics and tables) is to be submitted
in the form of Plain Text, HTML, Microsoft Word or Open Office format file.
To ensure proper formatting, full paper may be submitted "additionally" in the form of PDF (with font embedding). Only the quality of the final paper will determine the participation in the conference and the decision of the Conference Program Committee will be final in all respects.

The Conference Proceedings will be published in printed paper format and as an e-book. Arrangements are being made to have the Conference Proceedings of the annual Tamil Internet Conferences published with an ISSN (International Standard Serial Number). ISSN will permit routine indexation of the Conf. Proceedings in bibliographic databases of all leading libraries across the globe and proper referencing of the content of the Proceedings in academic journal publications.

We look forward to your active participation in the Tamil Internet 2014 conference. If you have any questions or need further clarifications, feel free to  send us a note to .

(sd.). K. Kalyanasundaram
Chair, CPC, Tamil Internet 2014
http://www.infitt.org/ti2014/ (cpc2014@infitt.org)

Some Key Deadlines to observe:
Paper abstract: 30th June 2014
Paper acceptance notification      : 31st  July 2014
Camera ready copy submission     : 31st August 2014
Conference Dates   : 19-21 Sept. 2014International Tamil Internet Conference Office
234, Rangapillai Street, Puducherry – 605 001
Phone: 0413 233 692
Mobile: 0091 9442029053, 0091 944343448
E-mail: muelangovan@gmail.com

For more information http://www.infitt.org/ti2014/

7.5.14

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும், புதுவைத் தமிழ்ச்சங்கமும் இணைந்து புதுச்சேரியில் நடத்தும் 13வது உலகத் தமிழ் இணைய மாநாடு


உத்தமம் நிறுவனம் தனது பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21 ஆம் நாட்களில் நடத்தத் திட்டமிட்டிருப்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.

உத்தமம் நிறுவனம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களை இணைப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனம் தொடங்கிய கடந்த பதினாறு வருடங்களில் பன்னிரண்டு மாநாடுகளைப் பல்வேறு நாடுகளில் நடத்தி உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளமை தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தியாகும்.

தமிழகம்¸ சிங்கப்பூர்¸ மலேசியா, செர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் மாநாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தி உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்நாடுகளில் ஒருங்கிணைய வைத்துள்ளது.

உத்தமம் நிறுவனத்தின் பதின்மூன்றாவது தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை மாநகரில் முதல் முறையாக நடத்துவதில் தமிழர்கள் நாம் அனைவரும் பெருமையடைய வேண்டும்!

மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த இம்மண்ணில் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் மற்றும் இணையம் குறித்துத் தங்களின் முயற்சிகளை எடுத்தியம்ப ஒருங்கிணைய உள்ளனர்.

இம்மாநாட்டைச் சிறப்புற நடத்த பேராதரவு அளித்திட முன் வந்திருக்கும் புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்களுக்கும்¸ புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. வி. முத்து அவர்களுக்கும் பல்லவன் கல்வி நிறுவனங்கள், அரசு சார், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் உத்தமம் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் மு. அனந்தகிருட்டிணன் ஆகியோருக்கும், ஏனைய தமிழ் நல்லுள்ளங்களுக்கும் உத்தமம் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த மாநாடு ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி என்ற மூன்று நிலைகளில் நடைபெறும். உலகின் பல பாகங்களிலிருந்தும் 300 மேற்பட்ட ஆய்வாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாட்கள் குறித்த செய்திகளை உத்தமம் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் (http://home.infitt.org/) வெளியிடுவோம்.

மேலதிகச் செய்திகளுக்கு உத்தமம் நிறுவனத்தின் தலைவர் வாசு அரங்கநாதனைத் தொடர்புகொள்ளலாம்.

புதுச்சேரியில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உத்தமத்தின் முன்னாள் செயல் இயக்குநர் மணியம்(சிங்கப்பூர்), புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து, முனைவர் மு.இளங்கோவன் இந்தச் செய்திகளைத் தெரிவித்தனர்.

2.5.14

எரிதங்களை பொறுக்கும் முகநூல்...

கடந்த மாதம் முகநூல் ஓர் அறிவிப்பை வெளியிட்டது..

இனி உங்கள் முகநூல் பக்கத்தில் எரித செய்திகள் (வீண்செய்திகள்-ஸ்பேம்-SPAM) வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று..

அதன்படி, ”எரிதம்” என்று கருதப்படும் நிலைத்தகவலை அடையாளங்காணும் பொருட்டு மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது முகநூல்...

அதன்படி,
1. விருப்ப வேட்டை
 விருப்பங்களை அதிகம் பெறவோ, அல்லது, பார்ப்போரை விரும்பு, கருத்துக்கூறு, பகிர் என்று வலியுறுத்தி பதியப்படும் நிலைத்தகவல்..


2. ஒரே பதிவை மீண்டும் மீண்டும் வெளியிடுவது
நல்ல நிலைத்தகவலை பகிரலாம்... ஆனால், ஒரே தகவலை(படம்/காணொளி) மீண்டும் மீண்டும் பதிவேற்றி பார்வையாளர்களை (நண்பர்களை) எரிச்சலூட்டுவது(?!).... போன்ற நிலைத்தகவல்கள்...

3. எரித இணைப்புகள்
சில நிலைத்தகவல் எல்லாம் புரியாது... அதாவது.. நமக்கு சம்பந்தப்பட்டதாகவோ... அல்லது விளம்பர உள்ளடக்க இணையதள இணைப்பாகவோ இருக்கலாம்... எதையோ விளக்கி படிப்பவரை கவர்ந்து.. மேலும் அறிய என்று இணைப்பை கொடுத்திருப்பார்கள்.. ஆனால், அது தேவையில்லாத இடத்திற்கு நம்மை அழைத்து செல்லும்.. இதுப்போன்ற நிலைத்தகவல்கள்..

இவையெல்லாம் எரிதமாக கருதும் முகநூல்... அவற்றை தடுக்க பயனர்களை உதவிக்கு அழைக்கிறது..நீங்கள் ஒரு பதிவை பார்க்கிறீர்கள்.. அதனை எரிதம் என்று கருதினால் உடனே அதனருகில் உள்ள அம்புக்குறியை சொடுக்கி அது எரிதம் என்று சொல்லி விடலாம்....
புகார் பதியப்படும்....

25.4.14

செய்திகளை ஒருங்கிணைக்கும் முகநூல்...

முகநூல் சமூகங்களை இணைப்பது மட்டுமல்ல...
செய்திகளை ஒருங்கிணைப்பதிலும் களமிறங்கியிருக்கிறது..


FB Newswire என்ற பெயரில்  செய்திச்சேவையை தொடங்கியுள்ளது முகநூல்.

இந்த சேவை செய்தியாளர்களுக்கும், செய்தி ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ள முகநூல், அதற்கான பக்கத்தின் முகவரியையும் வழங்கியிருக்கிறது.

https://www.facebook.com/FBNewswire

மேலும், நிகழ் நேரத்தில் வங்கப்படும் இந்த சேவையில் உள்ள செய்திகள் தனி நபர், செய்தி நிறுவனம் ஆகியவற்றால் முகநூலில் பதிவிடப்படும் செய்திகளாகும்..

இவற்றை தெரிவு செய்து மேற்கண்ட முகவரியில் பகிரப்படும் என்று முகநூல் கூறியுள்ளது.

முகநூலில் பெரும்பாலும், செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாலும், அதற்கு வாசகர்கள் கூடியிருப்பதாலும், இந்த சேவை பெரும் வரவேற்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, செய்தி நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களுக்கான பார்வையாளர்களை கூட்ட முகநூலில் பதிவிடுவதை விரும்புவதால், செய்திகளுக்கான நியுஸ்வைர் சேவை, முகநூலுக்கும், ஊடக நிறுவனங்களுக்குமான தொடர்பை மேம்படுத்தும் என்று முகநூல் நம்புகிறது.

மேற்கண்ட சேவை ஸ்டோரிபுல் என்ற செய்தி நிறுவனத்துடன் இணைந்து முகநூல் வழங்குகிறது.

Facebook launches Newswire for journalists

13.4.14

சித்தரையா ? தையா?


பொதுவாக நமக்கு இருக்கும் அக்கறைகளில் மொழி கடைக்கோடி தான்....
பொது இடத்தில் தமிழில் பேசுவதை வெட்கமாக கருதுகிறோம்... நாம் தமிழ்தானே பேசுகிறோம்... என்பார் சிலர்.. கொஞ்சம் விளக்கி சொன்னால் ... ஓ தூயத்தமிழா என்கிறார்கள்....
தமிழே தூய்மை தான் என்பதை உண்ர்கிற அறிதல் யாருக்குமே இல்லை...
பிற மொழி கலப்பு கூட தெரியாமல் தமிழ் பேசுவதாக தான் பேசிக்கொண்டிருக்கிறோம்...
நண்பர்களே... மொழி என்பது இயல்பான ஒன்றல்ல... அது நம் அடையாளம்... நம் வரலாறு... நம் உயிர்...
நம் மொழி தமிழ் கடந்தகாலங்களில் எழுத்துருவில் தான் மாற்றம் கண்டது... இன்று தொழில்நுட்ப பலனால் எழுத்துரு நிலைப்பெற்றது... ஆனால் ஒலிப்பில் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது... இதனை காப்பது யார் கடமை... கால ஓட்டத்தில் நம்மோடு அழைத்து செல்ல வேண்டாமா தமிழை....

தமிழனுக்கு புத்தாண்டு ஒன்று உள்ளதே ... அது எந்த நாள் என்றால் தமிழனுக்கு தடுமாற்றம் தான்...
சித்தரையா ? தையா?
ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும்.
தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும்.
பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர்.
தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது.
இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர்.
இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.
சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன.....
மேலும் படிக்க.... http://thamizhthottam.blogspot.in/2009/04/blog-post.html

1.4.14

கூகுள் அறிமுகம் செய்யும் ”ஷெல்பி”

கூகுளின் அஞ்சல் சேவையான ஜிமெயிலுக்கு 10 ஆண்டு நிறைவாகி இருக்கிறது.

தொடக்ககாலத்தில் இருந்து இன்று வரை அசூர வளர்ச்சியடைந்துள்ள ஜிமெயில், அவ்வபோது வசதிகளை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறது.

கடந்த 2012 அறிமுக செய்யப்பட்ட வார்புரு (தீம்) மாற்றுவதற்கான வசதியின் படி, பயனர்கள் தாமாகவே (வெப்கேம் மூலம்) படமெடுத்து, பதிவேற்றி ஜிமெயில் பக்கத்தின் பின்னணி காட்சியை மேம்படுத்தலாம்...


அதற்கு ஆங்கிலத்தில் selfies என்று பெயர சூட்டப்பட்டது.

நாளடையில் பிரபலமான அந்த சொல், 2013 ஆம் ஆண்டிற்கான சொல்லாக ஆக்ஸ்போர்டு அகராதி அறிவித்தது. 

10 ஆண்டு நிறைவின் பரிசாக , ஜிமெயில், ஷெல்பி யை அறிமுக செய்துள்ளது.

அது என்ன ஷெல்பி என்கிறீர்களா...?

Gmail Shelfie அதாவது the SHareable sELFIE.

நீங்கள் படமெடுத்து, ஜிமெயில் பக்கத்தை வடிவமைத்திருந்தால், அந்த வார்புருவை உங்கள் நண்பர்களும் வைத்துக்கொள்ள பகிர்ந்துக்கொள்ளும் வசதி தான் அது.....இங்கு நாம் கவனிக்க வேண்டியது இரண்டு...

ஒன்று தொழில்நுட்பம், இன்னொன்று மொழிவளம்...

ஆங்கில மொழியை தொழில்நுட்பத்தோடு மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்கள்...

ஆனால் அறிவியல்தமிழ் அப்படியே அகராதிகளில் தான் உள்ளது....

சிந்திப்போம்... 

அறிவியல் தமிழை மேம்படுத்துவோம்... 


இணைப்பு: அறிவியல் தமிழ் தரவுதளம்


21.3.14

கூகுளின் தேர்தல் செய்தி பக்கம்

இந்திய தேர்தல் செய்திகளை, ஒருங்கிணைத்து வழங்கும் சேவையை கூகுள் தொடங்கியுள்ளது.

இந்திய தேர்தல்கள் 2014 என்ற பெயரில் ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டும் வழங்கப்படும் இந்த சேவையில் தேர்தல் தொடர்பான அனைத்து செய்திகளையும் ஒருங்கே தொகுத்து உடனுக்குடன் இணையத்தில் வழங்குகிறது.

கூடவே காணொளிகளையும் கூகுள் வழங்குகிறது.காண்க:

கூகுள் தேர்தல்:  http://www.google.co.in/elections/ed/in/videos?hl=ta

கூகுள் தேர்தல் காணொளி:
1. http://www.google.co.in/elections/ed/in/videos?hl=ta
2.  https://www.youtube.com/playlist?list=PLws13isJwjKrruBhP4T6sVigW_QRhgMvQ14.3.14

மாற்றங்களை செய்து வரும் ஃபேஸ்புக்

பேஸ்புக் பக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுவருகிறது.

குறிப்பாக வணிகம் சார்ந்த பக்கங்களை, கவரக்கூடிய வடிவில் மாற்ற உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள புதிய வடிவம்...

இந்த புதிய வடிவத்திலிருந்து பக்க உரிமையாளர்கள் தங்களுடைய தெரிவுகளை எளிதில் கையாள முடிவும்.

குறிப்பாக, எத்தனை விருப்பங்களை பெற்றோம், எவ்வளவு பேரை சென்றடைந்தோம், என்னென்ன அறிவிப்புகள் வந்துள்ளன.. என்பதையெல்லாம்.. உடனே பார்க்க முடியும்...

அதே போன்று விளம்பரங்களையும் எளிதாக கையாள முடியும்.

கூடவே, பிற பக்கங்களை ஒப்பிட்டு பார்க்க கூடிய வசதியையும் புதிய வடிவத்தில் காணலாம்.அண்மையில், பக்கங்களின் மேலாளர்களை நிர்வகிப்பதை மெருக்கூட்டியது பேஸ்புக்.

அதாவது, பக்க உரிமையாளர், பக்கத்தை நிர்வகிக்கும் மற்றவர்களின் பதிவுகள் எது என்பதை பார்க்கும் வசதி சேர்க்கப்பட்டது.

இதன் மூலம், யார் பக்கத்தின் பதிவுகளை இட்டனர்... பார்வையாளர்களின் கருத்துகளுக்கு யார் பதில் அளித்தார்கள்... என்பதை உரிமையாளர் தெரிந்துக்கொள்வார்.

4.3.14

வேலை செய்யும் இடங்களில் எதிர்மறை மனோபாவங்களைச் சமாளிப்பது எப்படி?

ஒருவர் நம்மீது கோபப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்களும் பதிலுக்கு அவரை விட அதிகமாகக் கோபப்படுவீர்கள். ஒருவர் உங்களைத் திட்டி விட்டால்…..

அவரை விட அதிகமாக, அவரை மோசமாகத் திட்டுவீர்கள் இல்லையா? இது தான் நம்முடைய மனநிலை.

இதனால் உங்களுடைய கோபத்திற்குத் தற்காலிக வடிகால் கிடைத்தாலும் இந்த மனநிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாத நபர்களிடம் இந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள்.

ஆனால் அலுவலகத்தில் உங்களுக்கு மிகமிகத் தெரிந்த நபர்களிடம் இம்மாதிரி நடந்து கொண்டால் ஏற்படும் விளைவுகளை யோசித்துப் பாருங்கள்.

உங்களை விட கீழ்நிலை வேலையில், இருப்பவர்களிடம் இவ்வாறு நடந்தால்…..

அவரால் நேரடியாக உங்களைப் பழிதீர்க்க முடியாது.

அதனால் அவருக்குத் தெரிந்தவர்களிடத்திலெல்லாம் உங்களைப் பற்றி மோசமாகச் சொல்லி பழிதீர்த்துக் கொள்வார்கள்.

இதனால் உங்களுடைய மதிப்புப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இன்றைய சூழலில் பெரும்பாலான ஊழியர்கள் வேலை பார்க்கும் இடங்களில், எதிர்மறையான எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மன அமைதியை இழந்து தவிக்கிறார்கள்.

இது போன்றநிலையில், வேலை பார்க்கும் இடங்களில் மனஅமைதியை இழக்காமல் இருக்கவேண்டுமானால் ஒன்று தங்களின் அமைதியின்மைக்குப் பிறரையோ, சூழ்நிலையையோ குறைகூறுவதைத் தவிர்க்க வேண்டும்.

மற்றொன்று எதிர்மறையான அம்சங்களுக்கு அழுத்தம் கொடுப்பது என்றஇரண்டு செயல்களில் ஏதாவது ஒன்று உங்களிடம் காணப்பட்டாலும் அதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

மேலதிகாரிகளுடன் நல்லுறவு கொள்ளவேண்டும். பணியிடத்தில் சில விரும்பத்தகாத சூழ்நிலை உருவாகும்போது அச்சூழ்நிலை பற்றி அவ்வப்போது மேலதிகாரியிடம் அதுகுறித்தத் தகவல் அளித்து வரவேண்டும்.

உங்கள் பணியை பற்றிய உண்மை உங்களைவிட அவருக்குத்தான் நன்றாகத் தெரியும். இந்நிலையில் மேலதிகாரியுடனான தகவல் பரிமாற்றம் இல்லையெனில் 50% தவறுகளுக்கு அப்பணியாளர் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

உங்கள் அதிகாரியுடன் முழுமையான நல்லுறவுக்கு மனதைத் தயார்படுத்திக் கொள்ள தவறவேண்டாம்.

முதுகுக்குப் பின்னால் குத்துவது, இரட்டை வேடம் போடுவது, வதந்திகளைப் பரப்புவது, வம்பு பேசுவது போன்றகுணங்களை முழுமையாக விட்டொழிக்க வேண்டும்.

இதனால் இன்று உங்களால் விமர்சிக்கப்படுபவர் இன்னொரு நாள் உங்களுக்குப் பாடம் கற்பிக்கும் நிலையை தவிர்த்திட இது வகைசெய்யும். உணர்ச்சிவசப்படும் நிலையை முழுமையாக குறைத்துக் கொள்ள வேண்டும்.

நம்மோடு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் அடிப்படையில் மனிதர்கள் தான்.

அதன்பின்தான் அலுவலகத்தில் சக ஊழியர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எப்போதும் பிரச்சனைகளைத் தனித்தனியாக பிரித்துப் பார்த்து, அதை சரிசெய்ய முயற்சித்தால் எதிர்மறைஎண்ணங்கள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

மனோபாவத்தை மாற்றநீங்கள் தயாரா?

எதிர்மறைமனோபாவத்தை ஒருவர் வெளிப்படுத்தும் போது கீழ்க்கண்ட கேள்விகளைத் தங்களுக்கு தாங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

இந்த நபர் எனக்கு முக்கியமானவரா?

இதற்கு முன் இதே போன்றஒரு மனோபாவத்தை என்னிடம் வெளிப்படுத்தி இருக்கிறாரா?

அவரின் இந்த எதிர்மறை மனோபாவம் என்னை எந்த அளவிற்குப் பாதிக்கிறது?

இந்த நபரின் எதிர்மறை மனோபாவம் மாறும் வரை பொறுத்துப் பார்க்கலாம் என்னும் அளவிற்கு தன்னுடைய நேரத்தைச் செலழிக்கத் தயாராக இருக்கிறீர்களா?

அவருடைய எதிர்மறை மனோபாவத்தை மாற்றுவதற்கான முயற்சியைச் செய்து பார்க்கத் தயாராக இருக்கிறீர்களா?

மேற்கண்ட கேள்விகளில் ஏதாவது ஒன்றிற்கு ‘இல்லை’ என்றபதில் உங்களிடமிருந்து வந்தால் அந்த இடத்தை விட்டு அமைதியாக வந்துவிடுங்கள்.

தயவு செய்து உங்களுடைய ஆத்திரத்தை, கோபத்தை வெளிப்படுத்தி விடாதீர்கள்.

 அது தான் உங்களுக்கு நல்லது.

 மேற்கண்ட கேள்விகளுக்கு ஆமாம் என்று பதில் கூறினால் இரண்டாவது படிக்குச் செல்லுங்கள்.

உண்மையான காரணத்தைக் கண்டறியுங்கள்:

அந்த நபரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர் திடீரென இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள்.

ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகத்தான் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டாரா? என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் நிலையை விளக்குங்கள்.

ஆனால் சமயம் பார்த்து இதனைச் செய்ய வேண்டும். பொறுமையாக இருங்கள்.

உங்களின் அமைதி, மௌனம் நிச்சயமாக அவரைச் சோதிக்கும்.

நீங்கள் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொண்டால்….. எவ்வளவு உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட அவர்களுடைய கோபம் தணிந்தவுடன், மனநிலை மாற்றம் ஆனவுடன் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டதற்கு வருந்துவார்.

உங்களை அழைத்துப் பேசுவார். அவ்வாறு பேசத் தயாராகும் போது நீங்கள் இயல்பாக அவரை வரவேற்பது போல, உற்சாகப்படுத்துவது போலப் பேசவேண்டும்.

உங்களின் உண்மையான விளக்கத்தை இப்போது கூறலாம். இப்படியெல்லாம் நடக்கும் என்றநம்பிக்கை உங்களுக்கு இருந்தால் மூன்றாவது படிக்குச் செல்லுங்கள்.

மனநிலையை மாற்றுங்கள்:

இப்போது அவரது மனநிலையை உங்களுடைய நேர்மறைச் சிந்தனையால் மாற்றமுயற்சியுங்கள்.

பிரச்சனையைத் தெளிவாகப் பேசிவிடுங்கள். உங்களின் மேல் தவறுகள் இருந்தால் தாராளமாக மன்னிப்புக் கேளுங்கள்.

மீண்டும் நடக்காது என்பதை நிச்சயப்படுத்துங்கள். உங்களிடம் தவறு இல்லையென்றால் அது போன்றசூழ்நிலைக்கு யார்? அல்லது எது காரணம்? என்பதைக் கண்டறியுங்கள்.

ஏனென்றால் புரிதலின்மை (Misunderstanding) என்பது பெரும்பாலான உறவுகளைப் பிரிக்கிறது. இதனை சரியான புரிதல்கள் (Understanding) மூலம் தான் தீர்க்க முடியும்.

மனம் விட்டுப் பேசுவதன் மூலமும் கேள்விகள் கேட்டு உண்மைகளைக் கண்டறிவதன் மூலம் தான் அதைச் சரி செய்ய முடியும்.

ஆனால், அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களைப் பற்றி ஒருவருக்குத் தவறான அபிப்ராயம் ஏற்படுகிறது என்றால் அதை மாற்றவேண்டியது உங்களின் கடமை.

ஆனால் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை என்று நீங்கள் நினைத்தால் அது நிச்சயமாய் ஏதாவது ஒரு விதத்தில் உங்களைப் பாதிக்கும்.

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுங்கள்:

o பிரச்சனைகளைக் கண்டறிந்த பிறகு அதற்கானத் தீர்வுகளைக் கண்டறியுங்கள்.

o என்ன செய்தால் ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்ய முடியும் என்று எண்ணிப் பாருங்கள்.

o அதற்கு ஒத்து வருகிறாரா? என்று ஆராய்ந்து பாருங்கள்.

o இருவரும் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு முடிவினை நோக்கிச்செல்லுங்கள்.

o ஆனால், தீர்வு காணாமல் விட்டு விடாதீர்கள்.

o ஏனென்றால் அது எப்போதாவது அதே பிரச்சனையை மீண்டும் கிளப்பும்.

பழைய நிலைக்குத் திரும்புங்கள்:

இப்போது அந்த மனநிலை மாறி விட்டதென நீங்கள் நினைத்தால், அந்த நபரை இயல்பான சூழ்நிலைக்கு நீங்கள் கொண்டு வந்து விட்டால், கசப்புகளை நிச்சயமாக மறந்து இயல்பாகப் பேசுங்கள்.

கசப்புகளை, கோபங்களை மனத்திற்குள் வைத்து வெறும் ஒப்புக்குச் சிரிக்காதீர்கள்.

இப்போது அவரும் நீங்களும் நிச்சயமாக பழைய, இயல்பான, சுமூகமான, நட்பான சூழ்நிலைக்கு வந்து விட்டால் அதை முழு மனத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

அவருக்கு நீங்கள் உத்தரவாதம் கொடுத்த அந்த விஷயத்தைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

இது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக் கொள்வதற்குத் துணைபுரியும். இதனையே உங்களின் குடும்பத்திலும், நண்பர்களிடத்தும் கூடச் செயல்படுத்திப் பார்க்கலாம்.

முனைவர் க. அருள், எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி.

நன்றி: தன்னம்பிக்கை

5.2.14

ஆர்குட் அண்ணன்...!

பேஸ்புக்கின் அண்ணனான ஆர்குட் வீடு வரைக்கும் சென்று வந்தேன்...

பாழடைந்த பங்களா போன்றதொரு காட்சி...

தம்பிக்கே அதிக மவுசுகள் சொட்டப்படுவதால்... அண்ணனின் வீடு ஏதோ நானும் இருக்கிறேன் என்ற நிலையிலேயே காணப்படுகிறது....

நாம தான் வந்திருக்கிறோமா இல்லை வேற யாருவது இருக்கிறாங்களா என்று அக்கம் பக்கம் பார்த்தால்... என்னே ஆச்சரியம்..

ஆர்குட் அண்ணன் வீட்டிலேயே நம்ம நண்பர்கள் சிலர் இன்னமும் கடலை கடை போட்டிருக்கிறார்கள்...

அப்படி இப்படி என்று இருந்தாலும், ஒரு எட்டு சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று பார்த்தால்... ஸ்க்ராப், கம்யூனிட்டி, கூடவே லைக் வசதி அப்படியே இருக்கிறது...

தினமும் அண்ணன் வீட்டை திறக்கும் போது,  நல்ல வாசகத்தோடு வரவேற்பாரே... என்று மீண்டும் முகப்பு பக்கம் வந்தால்... என்னே கொடுமை... ஆர்குட் அண்ணன் தத்துவத்தை உருகி வடிச்சிருக்கிறார்....

” புத்தியில்லாதவர்கள் தங்களின் சுயத்தை இழக்கிறார்கள். “
வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...