20.9.08

தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்

தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்மொழியியலறிஞர்:- ஜே.நீதிவாணன் தரும் அதிர்ச்சி தகவல்கள்!

புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வந்தேறி தமிழர்களின் மொழி உணர்வு நூலின் முக்கியப்பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார்.

  1. போர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப்படுபவர்கள்,
  2. தொழிலாளர்கள்,
  3. வணிகர்கள்,
  4. பேரரசு நிறுவியவர்கள்,
  5. கலாச்சார ரீதியில் சென்றவர்கள்

என 5 வகையாக புலம் பெயர்ந்தவர்களைப் பகுக்கலாம். ஆப்பிரிக்கர்களும், ஆர்மீனியர்களும் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்தவர்கள். இந்தியத் தமிழர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். பிரித்தானியர் பேரரசை நிலைநாட்டப் புலம் பெயர்ந்தவர்கள். சீனர்களும் லெபனானியர்களும் வணிகர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். கரீபியர்கள் கலாச்சார ரீதியில் புலம் பெயர்ந்தவர்கள். ஆனால் யூதர்கள் மட்டும் முற்றிலும் வேறுபாடான வகையில் புலம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு புலம் பெயரும் பொழுது மீண்டும் தாயகம் திரும்பும் எண்ணமோ அல்லது தாங்கள் திரட்டிய செல்வத்தைத் தாயகத்திற்கு அனுப்பும் நோக்கமோ இல்லாமல் பல்வேறு நாடுகளில் குடிபுகுந்த தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.


இந்த வகையில் ஈழத் தமிழர்கள் பிரச்சினையை நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். ஈழத் தமிழர்கள் இலங்கையின் ஆதிக் குடிகள் என்பதை பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் நிலைநாட்டியுள்ளனர். இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகம் திரும்ப வேண்டியவர்கள் ஆவார்கள். எனவே, அவர்களைப் பற்றிய ஆய்வு தனித்தன்மை வாய்ந்ததாகும்.

உலகில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறித்த திட்டவட்டமான புள்ளிவிவரங்கள் இல்லை. பலரும் பலவிதமான விவரங்களை அளித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் வந்தேறிகள்:
இந்தியாவின் தென்கோடியில் தமிழகமும் கேரளமும் அமைந்துள்ளன. இவைகள் அமைந்துள்ள நிலவியலே பிற சிறுபான்மை மொழியினரைக் குடிபுகச் செய்தது எனலாம். தென்மாநிலங்களில் உள்ள மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தினர் ஆவார்கள். இதன் காரணமாக இம்மாநிலங்களில் திராவிட மொழிகளைப் பேசுபவர்களே குடி பெயர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளும், கேரளத்தில் மலையாளம், தமிழ், துளு ஆகிய மொழிகளும், ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளும், கர்நாடக மாநிலத்தில் கன்னடம், உருது, தெலுங்கு ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.

தமிழ்நாட்டில் தமிழ் மொழி அல்லாத பிற மொழி பேசுபவர்கள் 14 சதவீதம் உள்ளனர். பல ஆண்டு காலமாக இந்த சதவீதத்தில் மாறுதல் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர்கள் 7.12 சதவீதமும், கன்னடம் பேசுபவர்கள் 2.16 சதவீதமும் உருது பேசுபவர்கள் 1.86 சதவீதமும் மலையாளம் பேசுபவர்கள் 1.18 சதவீதமும் இந்தி பேசுபவர்கள் 0.29 சதவீதமும் மராத்தி பேசுபவர்கள் 0.13 சதவீதமும் ஆங்கிலம் பேசுபவர்கள் 0.04 சதவீதமும் உள்ளனர்.

தமிழ்நாட்டில் வந்தேறிகளாகக் குடிபுகுந்துள்ள சிறுபான்மை மொழி பேசுபவர்களில் கன்னடர்களும் தெலுங்கர்களும் ஏறத்தாழ 1000 ஆண்டுகாலத்திற்கு முன்னர் வந்தவர்கள். நீண்டகாலமாகத் தமிழ்நாட்டில் வாழ நேர்ந்ததால் தமிழகத்தையே அவர்கள் தங்கள் தாயகமாகக் கொண்டுவிட்டனர். எங்கிருந்து அவர்கள் குடிபெயர்ந்தார்களோ அந்தத் தாயகத்துடன் அவர்களுக்குள்ள தொடர்பு எல்லாம் அறுந்துவிட்டது. அவர்களின் தாய்மொழி பல்வேறு மட்டங்களில் தமிழ்க் கலப்புடன் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் பேசப்படும் தெலுங்கை ஆந்திர மாநிலத்தவர் "அரவா தெலுங்கு" என்றுதான் அழைக்கிறார்கள். இவர்களுடன் ஆந்திராவிலுள்ள தெலுங்கர்கள் திருமண உறவு வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. வீட்டிற்குள் தாய்மொழியான தெலுங்கில் பேசுவார்களே தவிர வெளியில் தமிழையே பேசுகிறார்கள். தமிழ் அல்லாத தெலுங்கு மொழி அறிவு இவர்களுக்கு மிகக் குறைவானதாகும். வந்தேறிகளாக தமிழகத்தில் குடி புகுந்த தெலுங்கர்களில் பலர் தமிழை நன்குக் கற்றுத் தேர்ந்து அறிஞர்களாக - கவிஞர்களாக - எழுத்தா ளர்களாகப் புகழ் பெற்றுத் திகழ்ந்தார்கள். இவர்களுக் குத் தெலுங்கு எழுதத் தெரியாது. பேச்சு மொழியாகத் தெலுங்கை வீட்டிற்குள் பரம்பரையாகப் பேசி வருகிறார்கள். தெலுங்கு மொழியினால் தங்களுக்கு சமூக முன்னேற்றமோ அல்லது பொருளாதார வளமோ கிடைக்காது என்பது இவர்களுக்குத் தெரிந்திருந்த போதிலும் குறைந்தபட்சம் வீட்டு மொழியாக அதைக் கடைப்பிடித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் குடிபுகுந்த கன்னடர்கள் நிலைப்பாடும் கிட்டத்தட்ட இதுதான். தமிழர்களுடன் இவர்கள் கொண்டுள்ள கலாச்சார மற்றும் மொழி உறவுகளின் விளைவாக அவர்கள் தமிழ்நாட்டு மக்களாகவே கருதப்படுகிறார்கள். இவர்கள் பிறப்பால் தமிழர்கள் அல்லர். ஆனால் தமிழர்களான வந்தேறிகள் ஆவார்கள்.

தமிழ்நாட்டில் குடிபுகுந்த மலையாளிகளின் நிலை தெலுங்கர், கன்னடியர் ஆகியோரின் நிலைக்கு மாறுபட்டதாகும். தமிழ்நாட்டில் மலையாளிகள் குடிபுகுந்தது அண்மைக் காலத்திலேயாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் இருந்த காரணத்தினால் அங்கு வாழ்ந்த மலையாளிகள் வந்தேறிகள் அல்லர். தமிழகத்தின் பிற பகுதிகளில் வேலைவாய்ப்புகள் மற்றும் வணிகம் செய்வதற்காக அண்மைக் காலத்தில் தான் மலையாளிகள் குடிபுகுந்துள்ளனர். ஆனால் இந்த மலையாளிகள் தங்களுடைய தாயகமான கேரளத்துடன் உள்ள தொடர்பை இழந்து விடவில்லை. எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியையும் போற்றியே வருகிறார்கள். எனவே தெலுங்கு, கன்னடர் வந்தேறிகளைப் போல மலையாளிகளைக் கருதமுடியாது.


பழந்தமிழர்களின் புலப்பெயர்வு:
தமிழ் இலக்கியத்தில் பிரிவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் நாட்டம் தமிழர்களுக்குப் பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. இது குறித்து தமிழ் இலக்கியத்தில் "பிரிவு" என்னும் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழமையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் மற்றும் நம்பி அகப்பொருள் ஆகியவை பிரிவு குறித்து விளக்கமாகக் கூறுகின்றன.

பழந்தமிழர்கள் சிறந்த கடலோடிகளாகவும் வணிகர்களாகவும் திகழ்ந்தார்கள். மேற்கு நாடுகள் மற்றும் மேற்காசிய நாடுகளுடன் அவர்களுக்கு வணிக உறவு இருந்தது. கிரேக்கம், உரோமாபுரி பேரரசுகளின் அவைக்கு தங்களது வணிகப் பொருட்களை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். கி.மு.8ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த வணிகத் தொடர்பு இருந்து வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அதைப்போல தூரக் கிழக்கு நாடுகளில் கி.மு.முதலாம் நூற்றாண்டிலிருந்து தமிழர்களுக்கு வணிகத் தொடர்பு இருந்து வந்தது.

பிற்காலச் சோழர்களும் பிற்காலப் பாண்டியர்களும் தூரக் கிழக்கு நாடுகளையும் இலங்கையையும் கைப்பற்றிய பொழுது அங்கு தமிழ்ப் படை வீரர்களும் வணிகர்களும் குடியேறினார்கள். தமிழர்களின் புலப் பெயர்ச்சி முதல் தடவையாக இந்த காலக் கட்டத்தில்தான் நடைபெற்றிருக்க வேண்டும். அண்டை நாடுகளைத் தமிழ் மன்னர்கள் பிடித்த போது தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த நாட்டார்கள் அந்நாடுகளில் குடியேறி பல நூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். இது குறித்த பல்வேறு கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன.ஆங்கில ஆட்சியில் புலப்பெயர்வு:
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்த தமிழர்கள் கூலிகளாக மொரிசியசு, பிஜி, கரிபியன் தீவுகள், ரீயூனியன் போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இந்தப் புலப் பெயர்ச்சிக்கு வரலாற்று ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளார்கள். தமிழ்நாட்டில் அப்போது நிலவிய சமுதாயச் சூழ்நிலை இவர்களைத் தொலைதூரத் தீவுகளுக்குப் புலம் பெயரச் செய்தது. சமுதாயத்தில் நிலவிய அடிநிலைச் சாதிவேறுபாடு, தீண்டாமை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை ஆகியவற்றின் காரணமாகத் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்த மக்கள் புலம் பெயர்ந்தார்கள். நில பிரபுக்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தினரால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளான ஏழையெளிய மக்கள் வேறு வழி இல்லாமல் குடிபெயர்ந்தார்கள். பெற்ற கடனை அடைக்க முடியாத விவசாயத் தொழிலாளிகள் அடிமைகளாக விற்கப்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு.


பண்டைய தமிழ் மன்னர்கள் எவ்வளவுவலிமை வாய்ந்தவர்களாகத் திகழ்ந்த போதிலும் பிற நாடுகளின் மீது படையெடுத்து அவற்றைத் தங்கள் பேரரசுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவில்லை. பிற நாடுகள் மீது அவர்கள் படை எடுத்தார்கள். ஆனால் அங்கு தங்கள் மக்களைக் குடியேற்றி அதைக் குடியேற்ற நாடாக அவர்கள் ஆக்கவில்லை. படை வீரர்கள், வணிகர்கள், புரோகிதர்கள் போன்ற சிற்சிலர் அந்நாடுகளில் குடியேறினார்கள். அதுவும் அவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில்.

இந்தியாவில் தமிழர்கள் பரவலாகப் பிற மாநிலங்களில் குடி பெயரவில்லை. கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, தில்லி, அந்தமான் ஆகிய மாநிலங்களில் மட்டும் தமிழர்கள் பிழைப்புத் தேடி குடிபெயர்ந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகே இவர்கள் அவ்வாறு குடிபெயர்ந்தார்கள்.


மொழி இழப்பு:
தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் மொழி இழப்பிற்கு ஆளான சோக விவரங்களை ஆசிரியர் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார்.பிஜி:


பிஜித் தீவில் கரும்பு சாகுபடி செய்வதற்காகப் பீகார், வங்காளம், பஞ்சாப் மற்றும் சென்னை மாகாணங்களிலிருந்து 1879ஆம் ஆண்டு விவசாயத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பிஜித் தீவு பற்றியோ தாங்கள் எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதைப் பற்றியோ எதையும் அறியாதவர்களாக இவர்கள் அங்கே போனார்கள். 1984ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்குப்படி பிஜி தீவில் 50,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5,000 பேர்களுக்கு மட்டுமே ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும். மற்றவர்களுக்குத் தமிழ் பேசக் கூடத் தெரியாது. பிஜித் தீவில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் தெரியாது. 50 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர் வீடுகளில் தமிழ் பேசப்படவில்லை. தமிழைப் பேசுவதும் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்துவதும் அவமானத்திற்கு உரிய ஒன்றாக தமிழர்கள் கருதினார்கள். தமிழர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை காரணமாக தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டவில்லை. அதே வேளையில் இந்தி மொழி பேசுபவர்கள் இந்தியைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார்கள். பிஜித் தீவில் தமிழ் மாநாடு ஒன்று நடத்தப்படுவதை இந்திக்காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்தியாவிலிருந்து சென்றவர்கள் அனைவரும் இந்தி படிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப் பட்டார்கள். பிஜித் தீவில் குடியேறிய இந்தியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆங்கிலத்தையும் கால்வாசிப் பேர் இந்தியையும் 14 சதவீதம பேர் தமிழையும் ஆதரித்தார்கள். பிஜி மக்களிடையே இந்தியைப் பரப்புவதில் இந்திய அரசு ஏராளமான பணத்தைச் செலவழித்தது. ஆனால் தமிழக அரசு தமிழ்ப் படிப்புக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் தட்டச்சு இயந்திரம் மற்றும் தமிழ் கற்பதற்கான உதவிகளை செய்யும்படி தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசு ஏற்கவில்லை. பிஜித் தீவில் வாழ்ந்த இந்திய மக்களிடையே கலப்புத் திருமணங்கள் தாராளமாக நடந்தன. இதன் விளைவாகவும் இந்தி பொது மொழியானது. தமிழ் பண்பாடு மேலும் தகர்ந்தது. பிஜித் தமிழர்களிடையே தாய் மொழி உணர்வு என்பது முழுமையாக அற்றுப் போய்விட்டது. தமிழுக்குப் பதில் இந்தி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தமிழர்களின் தாழ்வு மனப்பான்மை, தமிழக அரசிடமிருந்து எவ்வித ஆதரவும் கிடைக்காமை, பிஜி அரசின் கொள்கை, கலப்புத் திருமணங்கள், இந்தி பேசுபவர்களின் ஆதிக்க மனோபாவம் இவற்றின் காரணமாக தமிழ் தன் இடத்தை இழந்தது. இந்தியைத் தமது தாய்மொழியாகத் தமிழர்கள் ஏற்க வேண்டி நேரிட்டது. பிஜித் தமிழர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் தாய்மொழியைத் தியாகம் செய்தார்கள்.மொரிசியஸ்:


மொரிசியஸ் தீவில் போஜ்பூரி பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சமுதாயமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அடிமைகளாக இந்த நாட்டுக்குத் தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள். இதன் விளைவாக அவர்கள் தங்கள் மொழியின் மீது கொண்டிருந்த பற்றினைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்கள். பிரஞ்சு, கிரியோலி, மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றால் மட்டுமே பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும், தாய் மொழியான தமிழ் மூலம் அது கிடைக்காது என்பதை உணர்ந்த தமிழர்கள் மேற்கண்ட மொழிகளுக்குத் தாவினார்கள். மொரிசியஸ் தீவில் தமிழர்கள் குவியலாக ஓர் இடத்தில் வாழவில்லை. தீவு முழுவதும் பரவிக் கிடந்தார்கள். அவர்களுடைய மொழி இழப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும். கிராமப்புற பகுதிகளில் குடியேறிய தமிழர்கள் ஓரளவிற்குத் தங்களுடைய மொழி உணர்வைக் காப்பாற்றிக் கொண்டார்கள். நகர்ப்புறங்களில் குடியேறிய தமிழர்கள் அங்கு பெரும்பான்மையோர் பேசிய மொழியிலேயே பேசி வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ்க் குழந்தைகள் தங்கள் தாய் மொழியை அறவே இழந்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும். மேலும் மொரிசியஸ் தலைநகரான போர்ட் லூயிஸ் நகரைக் கட்டுவதில் புதுச்சேரி தமிழர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். கிறித்துவ தமிழர்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் குடியேறினார்கள். மொலாட்டோ இனத்தவரும் கிரியோலி இனத்தவரும் கிறித்துவ தமிழர்களுடன் இரண்டறக் கலந்ததாலும் அவர்கள் தங்கள் மொழியை இழந்தனர். மேலும் ஆரம்பப் பள்ளிகளில் கீழ்த்திசை மொழி அல்லது கிறித்துவ மதப் படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. கிறித்துவத் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் மதப் படிப்பை படிக்க வேண்டும் என்றே விரும்பினார்கள். எனவே, தமிழ் அந்த குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படவில்லை. மேலும் தமிழ்ர் பாட நூல்களில் பெரும்பாலும் இந்துக் கடவுள்கள், துறவிகள், கோயில்கள், சிற்பங்கள் ஆகியவை பற்றிய படங்கள் இருந்தன. மதசார்பற்ற தன்மையில் அந்த பாட நூல்கள் அமையவில்லை. கிறித்துவ குழந்தைகள் இதைக் கற்க விரும்பவில்லை. இதன் விளைவாக கிறித்துவ தமிழர்களில் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்துத் தமிழர்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்களாகக் கருதத் தொடங்கினார்கள்.இதைப் போலவே இந்துத் தமிழர்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை இழந்தார்கள். வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. மொரீசியஸ் தீவில் தமிழர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதம் ஆகும். ஆனால் வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 0.6 சதவீதம் மட்டுமே. 53832 பேர் தமிழ் தங்கள் மூதாதையர்களின் மொழி என்பதை அறிந்தவர்கள். ஆனால் இவர்களில் 6,943 பேர் மட்டுமே தமிழை வீடுகளில் பேசுபவர்கள். இது போன்ற தமிழர்களின் எண்ணிக்கை குறித்து பல விவரங்களை நூல் ஆசிரியர் அளித்துள்ளார். தமிழ் மொழி - இலக்கியம் - பண்பாடு ஆகியவற்றின் சிறப்பு குறித்து மொரிசியஸ் தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தங்களுடைய தமிழ்ப் பரம்பரை குறித்து அவர்களுக்கு பெருமிதம் உண்டு. மொரிசியசில் அனைத்துலகத் தமிழ் மாநாட்டினை அவர்கள் வெற்றிகரமாக நடத்தி உள்ளார்கள். மொரிசியஸ் நாணயங்களில் தமிழ் இடம் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் தமிழ் நிகழ்ச்சிகள் உண்டு. சுமார் 200 தமிழ் பள்ளிக்கூடங்களும் 200 தமிழ் ஆசிரியர்களும் மொரிசியசில் உள்ளனர். மொரிசியஸ் தமிழர்கள் குறித்த வரலாறு அவர்களின் நாட்டுப்புற இலக்கியம் இவைகளைப் பற்றிய நூல்களும் உண்டு. மொரிசியஸ் தமிழர்களுக்கிடையே எழுத்தாளர்களும் கவிஞர்களும் உண்டு. தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆனால் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கற்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். தமிழர் பண்பாட்டோடு மொழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் ஆசிரியர்களே தங்கள் கருத்துக்களை முழுமையாகத் தமிழில் வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். மிகச் சிலரே பிழை இல்லாமல் தமிழ் எழுதுகின்றனர். இதன் காரணமாக மொழிச் சிதைவு ஏற்பட்டுள்ளது. மொரிசியஸ் தமிழர்களிடையே தாய்மொழி இழப்பு குறித்து அவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இந்த நிலைமை நீடிக்குமானால் பிஜித் தமிழர்களைப் போல இவர்கள் நிலைமை ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை.ரீயூனியன்:
ரீயூனியன் தீவில் 30 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். வணிகம், தொழில், அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் செல்வாக்கு உடையவர்களாக அவர்கள் திகழ்கிறார்கள். மொரிசியஸ் தமிழர்களைப் போலவே ரீயூனியன் தமிழர்களும் அங்கு புலம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள். கிரியோலி மொழியே பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. தமிழர்களில் 95 சதவீதத்தினர் தமிழ் பேசத் தெரியாதவர்கள். 5-6 தலைமுறைக்கு அவர்கள் தங்கள் மொழியை இழந்துவிட்டார்கள். மொரிசியஸ் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை ரீயூனியன் தமிழர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அண்மையில் இங்கு 3 உயர்நிலைப் பள்ளிகளிலும் ஒரு கல்லூரியிலும் தமிழ் விருப்பப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.சிசேல்ஸ்:
சிசேல்ஸ் தீவில் தமிழர்கள் மிகவும் சிறுபான்மையினர் ஆவார்கள். அவர்கள் தங்கள் மொழியை முற்றிலுமாக இழந்து கிரியோலி மொழி மட்டுமே பேசுகிறார்கள், ஆனால் சிசேல்சில் வாழும் தமிழர்களில் 30 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் சற்று திரிபடைந்த தமிழ்ப் பெயர்களையே சூட்டிக் கொண்டுள்ளனர்.கரிபியன் தீவுகள்:
இங்குள்ள தமிழர்களும் மொரிசியஸ், பிஜி தமிழர்களைப் போலவே புலம் பெயர்ந்தவர்கள். அவர்கள் முற்றிலுமாக தங்கள் தாய் மொழியை இழந்து விட்டார்கள். கயானா, டிரிநாட் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் முழுமையாகத் தங்கள் தாய் மொழியைத் தொலைத்து விட்டார்கள். இங்குள்ள தமிழர்கள் பல மத விழாக்களை அவற்றின் அர்த்தம் புரியாமலேயே கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் பிரஞ்சு மொழியைப் பேசுகிறார்கள். சிலர் ஆங்கிலத்திலும் பேசுகிறார்கள். புதுச்சேரியிலிருந்து குடியேறிய தமிழர்கள் தற்போது பிரஞ்சுக்காரர்களாகவே ஆகிவிட்டார்கள். அவர்கள் தமிழ் பேசுவதில்லை. தமிழில் கூட சிந்திப்பதில்லை. பல தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கும் தமிழ் தெரியாது. 4 தலைமுறை காலத்திற்குள் இவர்கள் தங்கள் மொழியை இழந்து விட்டார்கள். கல்வித் திட்டத்திற்காக இந்துத் தமிழர்கள் பலரும் கிறித்துவ மதத்திற்கு மாறிவிட்டார்கள். கத்தோலிக்க மதப் படிப்புடன் பிரஞ்சு மொழியை அவர்கள் கற்கிறார்கள். இங்குள்ள தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினர் வீடுகளில் தமிழுக்குப் பதில் பிரஞ்சு மொழி பேசப்படுகிறது. தமிழர்களின் பெயர்கள் திரிபடைந்து உச்சரிப்பு கூட மாறிவிட்டது. சூரினாம், சமைக்கா, பிரிட்டிஷ் கயானா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் முழுவதுமாக தங்கள் தாய்மொழியை இழந்து விட்டார்கள். அவர்கள் தமிழ் மொழியை மீண்டும் கற்பது என்பதற்கான வாய்ப்பே இல்லை.தென் ஆப்பிரிக்கா:
தென் ஆப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏராளமான இந்துக் கோயில்கள், மத அமைப்புகள், தமிழ் மொழி அமைப்புகள் உள்ளன. இவை இருந்தும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் தங்கள் தாய் மொழியை வேகமாக இழந்து விட்டார்கள். தமிழைக் கற்பதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் மூத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் ஓரளவிற்கு தமிழில் பேசுகிறார்கள். நல்ல தமிழில் பேச ஆர்வம் காட்டுகிறார்கள். தாய்மொழியை இழந்துவிட்டாலும் மத சம்பந்தமான சடங்குகளையும் கலாச்சார நடவடிக்கைகளையும் போற்றிப் பாதுகாத்தால் மட்டுமே தங்களுடைய இன அடையாளத்தைப் பாதுகாக்க முடியும் என அவர்கள் கருதுகிறார்கள். தென்ஆப்பிரிக்காவில் 200 பள்ளிக் கூடங்களில் 189 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 5 பேர் மட்டுமே தமிழ் கற்பிக்கத் தகுதி படைத்தவர்கள். தமிழ் இளங்கலை வகுப்புகள் டர்பன் பல்கலைக் கழகத்திலும் வெஸ்ட் வில்லோ பல்கலைக்கழகத்திலும் 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் போதுமான மாணவர்கள் சேராத காரணத்தினால் 1984ஆம் ஆண்டு இவைகள் மூடப்பட்டன. தமிழர்கள் ஆப்ரிக்காவிலுள்ள பல்வேறு நாடுகளுக்குக் குடி பெயர்ந்த போது தங்களுடைய பொருளாதார உயர்வுக்காகவும் சமூகத் தகுதிக்காகவும் தாய் மொழியினால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து ஆங்கிலம், பிரஞ்சு, கிரியோலி மொழிகளைக் கற்கத் தொடங்கினார்கள். தென்ஆப்பிரிக்காவில் ஆங்கிலம் பொருளாதார உயர்வுக்கு வழி வகுக்கும் என கருதப்பட்டது. தென்ஆப்பிரிக்காவில் சாதிக் கலப்புத் திருமணம் - இனக் கலப்புத் திருமணம் சர்வசாதாரணம். இத்திருமணங்களின் விளைவாக குடும்பங்களில் ஆங்கிலமே வீட்டு மொழியாகி விட்டது. தென்ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளையர்கள் அங்குள்ள தமிழர்களைக் கூலிகள் என்றும் அவர்கள் பேசும் மொழியை கூலி மொழி என்றும் இழிவு படுத்தியதால் தமிழர்கள் தங்கள் மொழியிலேயே பேசுவதற்கு வெட்கப்பட்டார்கள். இந்த நிலைமை தொடருமானால் தென்ஆப்பிரிக்காவில் அடுத்த இரு தலைமுறைகளுக்குள் தமிழ் முற்றிலுமாக மறைந்து போய் ஆங்கிலமே தமிழர்களின் மொழியாக மாறும்.

மலேசியா:
மலேசியாவில் 1969ஆம் ஆண்டில் மலாய் மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. எனவே அரசு ஊழியர்கள் அனைவரும் மலாய் மொழி படித்தே தீரவேண்டிய நிலை உருவாயிற்று. பள்ளிக்கூடங்களில் மலாய் மொழியே கல்வி மொழியாக ஆகிவிட்டது. இதன் விளைவாக இந்திய மற்றும் சீன மொழிகள் முக்கியத்துவம் இழந்தன. மலேசியாவிலுள்ள இந்தியர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மாத ஊதியத்தை எதிர்பார்த்து வாழ்பவர்கள். எனவே, மலாய் மொழி ஆங்கிலத்துடன் தமிழையும் கற்க இயலாதவர்கள். இதன் விளைவாகத் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்பட்டு வந்தது. ஆனால் தமிழ் பத்திரிகைகள் ஏராளமாக வெளியாகின்றன. தமிழ் பேசுபவர்களும் படிப்பவர்களும் இன்னமும் உள்ளனர்.

இந்தோனேசியாவில் தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியேறினார்கள். 1946ஆம் ஆண்டில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் தாயகம் திரும்பினார்கள். அதற்குப்பிறகு ஜாகர்தா நகரில் குடியேறிய தமிழர்கள் தங்கள் மொழியை அடியோடு இழந்து விட்டார்கள்.

1830ஆம் ஆண்டில் தாய்லாந்தில் குடியேறிய தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது 200 பேர்கள் மட்டுமே அங்கு வாழ்கிறார்கள். அவர்கள் அந்த நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்டு மொழியை அடியோடு இழந்து விட்டார்கள்.

கென்யாவிலுள்ள தமிழர்களில் தற்போது யாருக்கும் தமிழ் பேசத் தெரியாது.

சிங்கப்பூர் :

சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குகிறது. இந்தியாவில் கூட தேசிய அளவில் தமிழுக்கு அந்த தகுதி கிடைக்கவில்லை. சிங்கப்பூரில் பல மொழி கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் தாய் மொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றால் போதும் என அரசு கருதுகிறது. தமிழுக்கு முதல் மொழித் தகுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழர்களின் ஆர்வமின்மை காரணமாக அது இப்போது இரண்டாவது மொழி ஆகிவிட்டது. தேசிய அளவில் தமிழ் படிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறார்கள். சிங்கப்பூரிலுள்ள இந்தியர்களில் 65 சதவீதத்துக்கு மேலானவர்கள் தமிழர்கள் ஆவார்கள். தமிழ் வளர்ச்சிக்கு இது நிச்சயமாக உதவும். ஆனால் தமிழர்கள் சீன மொழி, மலாய் மொழிகள் தமிழை விட தங்களுக்குப் பயனளிக்கும் மொழிகள் எனக் கருதுகிறார்கள். இதன் விளைவாக சிங்கப்பூர் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் மட்டுமே தமிழ் பேசுகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 4.8 சதவீதம் தமிழர்கள் இருந்தும் பயனில்லை. சிங்கப்பூரில் வாழும் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் மொழியை இழந்து விட்டார்கள். சீன மொழி, மலாய் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. ஆனால் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இந்துக் கோயில்களில் கூட குருக்கள் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். தமிழ்க் குழந்தைகள் தங்களின் பெற்றோருடன் மற்றும் பெரியவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்புகிறார்கள். இந்த நிலைமை நீடிக்குமானால் சிங்கப்பூர் தமிழர்கள் சில தலைமுறைகளிலேயே தமிழை இழந்து விடும் பயம் உண்டு. தங்கள் தாய்மொழிக்கு எதிரான தமிழர்களின் இந்தப் போக்கு வளருமேயானால் இன்னும் ஓரிரண்டு தலைமுறைகளில் சிங்கப்பூரிலிருந்து தமிழ் அடியோடு மறைந்து போகும்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழின் நிலை

இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் ஆவர். சில இடங்களில் அவர்கள் தங்கள் தாய் மொழியை இழந்துள்ளனர். வேறு சில இடங்களில் தாய் மொழியைக் காப்பாற்றி வருகின்றனர். கேரள மாநிலத்தில் பாலக்காடு, திருவனந்தபுரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வாழ்கின்றனர். சித்தூர், பாலக்காடு தாலுக்காக்கள் தமிழக எல்லைகளையொட்டி அமைந்துள்ளன. எனவே, இங்கு வாழும் தமிழர்களில் பெரும்பான்மையினர் தமிழ் மட்டுமே பேசி வருகின்றனர். தெற்கே உள்ள தமிழ்நாட்டு பகுதிகளுக்கு வணிகம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்காகச் சென்றுவர வேண்டிய தேவை இருப்பதால் இவர்கள் தமிழைச் சகல துறைகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். பாலக்காட்டிலுள்ள பார்ப்பனர்கள் கூட வீட்டிற்குள் தமிழையும் வெளியே மலையாளமும் பேசுகின்றனர்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களின் பேச்சு மொழியாக மலையாளம் நாளடைவில் ஆகிவிட்டது.

இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் தங்களுக்குள் தமிழிலும் பிறரிடம் மலையாளத்திலும் பேசுகின்றனர்.


தாயகத் தமிழர்களின் அலட்சியப் போக்கு

அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை இழக்க நேர்ந்ததற்கு தாய்த் தமிழகத்தின் அலட்சியப் போக்கு முக்கியக் காரணமாகும். தங்கள் மொழியைக் கற்பதற்குத் தேவையான கல்விச் சாதனங்கள், தமிழ் தட்டச்சு இயந்திரம், ஒலி-ஒளி குறுந்தட்டுகள் இவற்றை தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அயலகத் தமிழர்கள் விடுத்த வேண்டுகோள் தாய்த் தமிழகத்தினால் சரிவர கவனிக்கப்படவில்லை. ஆனால் இதற்கு எதிர்மாறாக இந்தித் திரைப்படங்கள் அயல் நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள தொலைக்காட்சிகளிலும் திரையரங்குகளிலும் காட்டப்படுகின்றன. இந்தி பேசும் மக்கள் மட்டுமல்ல தமிழர்கள் உட்பட இந்திய மொழிகளைப் பேசும் பிறமக்களும் விரும்பிப் பார்க்கின்றனர். தமிழ்த் திரைப்படங்கள் அவ்வாறு காட்டப்படுவதில்லை. இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் மொரிசியசு நாட்டிலுள்ள திரையிடுபவர்களுக்குமிடையே நல்ல உறவு உள்ளது. அதே அளவு உறவு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் திரையிடுபவர்களுக்கும் இடையே இல்லை.

தென்ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. போதுமான மாணவர்கள் தமிழ் கற்க முன்வராததன் விளைவாக இந்நாடுகளில் தமிழ் கற்றுக் கொடுப்பது கைவிடப்பட்டுள்ளது. ஆங்கிலமோ அல்லது பிரஞ்சு மொழியோ கற்று பிரிட்டன் அல்லது பிரான்சு நாட்டுக்கு வேலைவாய்ப்பு தேடி செல்லவே இளைஞர்கள் விரும்புகிறார்கள். தமிழைக் கற்றுக் கொண்டு இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டுக்குச் செல்ல அவர்கள் விரும்பவில்லை.

சிங்கப்பூரில் தமிழ் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் வாய்ப்பு அறவே இல்லை. தென்ஆப்பிரிக்காவில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தங்கள் மொழியைக் கற்க வேண்டும் என்பது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அமெரிக்காவில் வாழும் புதிய தலைமுறையினர் அமெரிக்கர்களாக வாழ்வதில் பெருமைப்பட்டுக் கொள்கின்றனரே தவிர தங்கள் தாய் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஒருபோதும் நினைப்பதில்லை.

ஆசுதிரேலியாவில் வாழும் தமிழர்களில் 25 சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் தமிழில் பேசத் தெரியாதவர்கள்.

பிஜி மற்றும் பல கரிபியன் தீவுகளில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் தாய் மொழியை அறவே இழந்து விட்டனர்.

அதே வேளையில் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் நடுவில் தங்களுடைய தாய் மொழி, பண்பாடு ஆகியவற்றைப் பேண வேண்டும் என்ற எண்ணம் மேலோட்டமாக மட்டும் உள்ளது. இவர்களுடைய தாய் மொழி இழப்பு என்பது மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் அதே வேளையில் அமெரிக்காவில் வாழும் ஸ்பானியர்கள், சீனர்கள், கொரியர்கள், இத்தாலியர்கள் ஆகியோரைப் போன்றவர்கள் தங்கள் தாய்மொழியை ஒருபோதும் இழக்கவில்லை. அவர்கள் குறைந்தபட்சம் தங்கள் வீடுகளுக்குள் தாய்மொழியில் பேசுகிறார்கள். அமெரிக்காவிற்குத் தாங்கள் வருவதற்கு முன்னாலேயே ஆங்கில மொழியில் தங்களுக்குச் சிறந்த புலமை இருந்ததனால் உள்ளூர் மக்களிடம் சுலபமாகப் பேசிப் பழக முடிந்ததாக அமெரிக்கவாழ் தமிழர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் ஆங்கில மொழியின் மூலம் மட்டுமே தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நினைப்பதால் தங்களது தாய்மொழியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு அவசியமற்றுவிட்டது.


தமிழர்களின் அழிந்துவரும் மொழி உணர்வு

Language Attitude Of the Dispersed Tamils and the Neo-Tamils என்னும் தலைப்பில் முனைவர் ஜே. நீதிவாணன் அவர்கள் சிறந்ததொரு ஆய்வு நூலைப் படைத்துள்ளார்.

கடந்த நூற்றாண்டுகளில் ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதைப்போல அண்டை மாநிலங்களைச் சேர்ந்த தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தமிழ்நாட்டில் குடியேறி தமிழகத்தையே தங்கள் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மொழி உணர்வு பற்றிய சிறந்த ஆய்வினை மேற்கொண்டு முனைவர் ஜே. நீதிவாணன் எழுதியுள்ள நூலே இதுவாகும். முதல்முறையாக இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இந்த நூலின் சிறப்பு மேலும் கூடுகிறது. இந்த ஆய்வினை அவர் மேற்கொள்வதற்கு புதுச்சேரி மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் உதவி செய்துள்ளது.

உலக மொழிகளில் ஒன்றாக தமிழ் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் பரவிய இனங்களில் ஒன்றாக தமிழ் இனம் விளங்குகின்றது. உலகத் தமிழர்களின் நிலை குறித்து பலரும் நூல்கள் எழுதியுள்ளனர். ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் வந்தேறிகளாக உள்ள சிறுபான்மை மொழியினர் ஆகியோரின் மொழி உணர்வு குறித்து யாரும் ஆய்வு செய்யவில்லை என்ற குறையை முனைவர் ஜே. நீதிவாணன் அவர்கள் போக்கியுள்ளார். உலக மொழியாக தமிழ் உயர்ந்துள்ள இந்த வேளையில் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் சிறிதுசிறிதாக தங்கள் மொழியை இழந்து வருகிற அவல நிலையை ஆதாரப்பூர்வமாக இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் உலகத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை அறவே இழக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதை ஆசிரியர் எடுத்துக்கூறும் விதம் நம்மை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்குகிறது. ஆனால் நமது உள்ளங்களைச் சுடும் இந்த உண்மையை உணர்ந்து நமது மொழிக்கு வரவிருக்கும் அழிவினைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு. அந்தக் கடமையைச் செய்வதற்கு குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் முன்வரவேண்டும்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்த நூல் விரைவில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டாகவேண்டும். அப்பொழுதுதான் மிகப்பெரும்பாலான தமிழர்கள் இந்த உண்மைகளை அறிய முடியும்.

சிறந்ததொரு ஆய்வினை மேற்கொண்டு இந்த நூலினைப் படைத்துள்ள முனைவர் ஜே. நீதிவாணன் உலகத் தமிழர்கள் அனைவரின் பாராட்டிற்குரியவர்.

நன்றி : தென்செய்தி

1 comment:

சுப.நற்குணன்,மலேசியா. said...

மிகவும் சிறப்புமிக்க இடுகை. பயனான பல செய்திகள் கிடைத்தன.

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...