7.8.08

தமிழ்த் தேர் உலகெங்கும் ஓடித் தமிழரின் பெருமை காட்ட தேரிழுக்கவாரீர்

தமிழ் மொழி வளர்ச்சியென்பது அதன் பயன்பாட்டிலும் பாதுகாப்பிலும் தான் உள்ளது. அத்தகைய காத்தலிலும், பயன்பாட்டிற்காகவும் அயராதுழைக்கும் எத்தனையோ மாமனிதர்களின் வரிசையில் திரு பொள்ளாச்சி நசன் அவர்கள் விளங்குகிறார். அவர் தம் தமிழம்.வலை யில் ஏராளமான தமிழம் சார்ந்த தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாது சிற்றிதழ் வளர்ச்சியிலும் அவர் தம் பங்களிப்பை அளித்துவருகிறார்.

அண்மையில் அவருடன் உரையாற்றும் போது, நல்ல திட்டமொன்றை கூறியிருந்தார். அதாவது,

"சங்க இலக்கியப் பாடல்களை,காட்சி வடிவாக, ஒலி ஒளிப் படமாக, இசையுடன் - நிகழ்த்து கலையாக - இக்கால வாழ்வியலோடு பொருந்திய காட்சியாக - படமாக்கிப் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் இன்றைய இளைஞர்கள் படிக்கும் நிலையிலிருந்து பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். சூழலுக்கு ஒட்டிய வகையில் சுவைகூட்டுகிற வடிவில் செறிவாக, நுட்பமாக, இலக்கியமாக காட்சிப் பதிவு செய்தால் அது உயர் செயலாக அமையும். இதுவும் நம் முன் உள்ள மாபெரும் பணியாகும்."

அவர் இணையத்தில் உலவும் தமிழ் ஆர்வலர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறார்......

சங்ககாலம் முதல் நாயக்கர்காலம் வரை தமிழில் வெளியான நூல்களைப் பட்டியலிட்டுள்ளேன். இந்த நூல்களைத் தேடுவதோ அல்லது வாங்கி வைத்துப் பாதுகாப்பதோ இடர்பாடுடையது. ஆனால் இந்த நூல்கள்தான் நமது வரலாற்றை, வாழ்முறையை, எடுத்துச் சொல்லும் ஆவணங்களாக உள்ளன. ஒவ்வொரு தமிழரும் இவை பற்றி அறிந்து கொண்டிருப்பது உயர்வானது, பெருமைபடத்தக்கது.
அனைத்து நூல்களையும் இணையத்தில் வைத்தால், எந்த மூலையிலிருந்து வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் படிக்க, பயன்படுத்த இயலும்.

இந்த நோக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாக மதுரைத்திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, 200 க்கும் மேற்பட்ட நூல்களைப் pdf வடிவில் உருவாக்கி இணையத்தில் வைத்துள்ளது. மதுரைத்திட்டத்தின் இயக்குநர் அவர்களும் அவரோடு இணைந்து செயல்படுகிற அனைத்துப் பொறுப்பாளர்களும் வணங்குதற்குரியவர்களே. புறநானூறு, கலித்தொகை, பத்துப்பாட்டு, என அனைத்துத் தமிழ் நூல்களையும் இணையத்திலிருந்து மிக எளிமையாக வலையிறக்கிப் படிக்க முடியும், அச்சாக்கமுடியும் என்ற நிலையை மதுரைத்திட்டம் உருவாக்கியுள்ளது. உலகத்தமிழர்களே இந்தச் செயலுக்காக வாழ்த்துவார்கள். தமிழம் வலையும் தனது நெஞ்சார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இது மட்டும் போதுமா ?
மதுரைத்திட்டம் அனைத்து நூல்களின் மூலப்படியையும் அப்படியே pdf வடிவில் அமைத்துவிட்டது. இந்த நூல்கள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வகையான உரை நூல்கள் வந்து விட்டன. பழங்காலத்திலிருந்து இந்தக்காலம் வரை பலரும் உரைகளை எழுதியுள்ளனர். தரமான, விளக்கமான, எளிமையான, நுட்பமான உரைகளைத் தேர்ந்தெடுத்துப் பதியவைப்பதும் நம் முன் உள்ள தவிர்க்க முடியாத பணியாகும்.
உரை மட்டும் இருந்தால் போதுமா ?
சங்க இலக்கியப் பாடல்களை, காட்சி வடிவாக, ஒலி ஒளிப் படமாக, இசையுடன் - நிகழ்த்து கலையாக - இக்கால வாழ்வியலோடு பொருந்திய காட்சியாக - படமாக்கிப் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் இன்றைய இளைஞர்கள் படிக்கும் நிலையிலிருந்து பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். சூழலுக்கு ஒட்டிய வகையில் சுவைகூட்டுகிற வடிவில் செறிவாக, நுட்பமாக, இலக்கியமாக காட்சிப் பதிவு செய்தால் அது உயர் செயலாக அமையும். இதுவும் நம் முன் உள்ள மாபெரும் பணியாகும்.
இவற்றோடு......
தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள உதவுகிற அடிப்படையை உருவாக்கவும், பாடத்திட்டங்களை வடிவமைக்கவும், கற்றல் கற்பித்தல் கருவிகள் செய்யவும், வளருகிற தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு ஒளி ஒலிக் காட்சிகளை அமைக்கவும் திட்டமிட வேண்டும். இவை இளம் நாற்றுகளைத் தமிழியத்தோடு தமிழ் கற்று வளர அடித்தளம் அமைப்பதாக உருவாக்கப்பட வேண்டும்.
உருவாக்கப்படுகிற இந்தத் தொழில்நுட்பக் கற்றல் கற்பித்தல் கருவிகளும் பாடத்திட்டங்களும் - மழலையர்களைத் தமிழ்ப் படிக்க வைக்கிற ஆற்றலோடு - பன்முகத் தன்மையோடு, பல்வேறு வகையினதாக கொட்டிக் கிடக்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை, தரமானவற்றைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தெரிவு செய்து எடுப்பதாக இருக்கவேண்டும்.
கணினித் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்த வகையில் சிந்தித்து பல்வேறு நுட்பங்களையெல்லாம் இத்துறையில் திசை திருப்பி மாணவர்களை ஆற்றலோடு வளர்ப்பதற்கான அடித்தளம் அமைப்பதற்கு வழிகோல வேண்டும்.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எவருக்கும் எளிமையாக, குறைந்த விலையில் கிடைப்பதற்கான திட்டத்தோடு இவை உருவாக்கப்பட வேண்டும். ( தற்பொழுது கணினி உலகில் நம் தமிழர்கள் உருவாக்குகிற பல்வேறு மென்பொருள்கள் வியக்கத்தக்கதாகவும், இலவசமாக பெறத்தக்கதாகவும் இருப்பது நம்மவர்களின் உயர்நத நோக்கினையும், பயன்கருதாத் தன்மையையும் காட்டுகிறதல்லவா?)
இந்த நோக்கத்திற்காக...
இந்தச் சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன ?

அ) கணினித் தொழில் நுட்பத்தில் புதுமைகாண விரும்புபவர்களை நம்மோடு இணைப்போம்.

ஆ) ஒவ்வொருவரது தனிப்பட்ட ஆற்றலையும் தமிழின் வளர்ச்சிக்கு எவ்வாறு ஆற்றுப்படுத்துவது எனத் திட்டமிடுவோம்.

இ) கல்வி, தொழில் நுட்பம் இரண்டையும் - மொழிகற்பித்தல், மொழி வளர்ச்சி, மொழி பாதுகாப்பு என்கிற நோக்கில் எவ்வகையிலெல்லாம் செயற்படுத்தலாம் எனப் பகிர்ந்து கொள்வோம்.

ஈ) தமிழுக்காகப் பொருளையும், உழைப்பையும், நேரத்தையும் ஒதுக்க விரும்புபவர்களை ஒன்றிணைப்போம்.

திரு. பொள்ளாச்சி நசன் அவர்களின் முகவரி:
திரு. பொள்ளாச்சி நசன்.
1.சம்பத்நகர், சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 642 006
தொலைபேசி : (04259) 221278. , 98420 02957
மின் அஞ்சல் : pollachinasan@gmail.com
வலைதளம்: www.thamizham.net

No comments:

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...