25.8.08

தமிழ்ப் பண்பாட்டுப் பாதுகாப்பு - முனைவர் இரா. திருமுருகன்


நன்றி:தமிழ்க்காவல்

ண்பு வேறு; பண்பாடு வேறு. தனி மாந்தனின் இயல்பைப் பண்பு என்கிறோம். மக்கள் இனத்தின் இயல்பைப் பண்பாடு என்கிறோம். தமிழ் இனத்துக்கு உரிய மொழி, இலக்கியம், கலைகள், கட்டடத் தொழில்நுட்பம், மருத்துவம், விழாக்கள், வழிபாட்டுமுறை, சடங்குகள், கொள்கைகள், உணவு முறை, உடை முறை, அணிகலன்கள், தட்டுமுட்டுகள், விளையாட்டுகள், விழாக்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகைள் முதலிய அனைத்தும் தமிழ்ப் பண்பாட்டில் அடங்கும். இவை நமது தமிழ் இனத்துக்கு அடையாளமாக உள்ள கூறுகள் ஆகும். இந்த அடையாளத்தை நமது இனம் மரபு வழியாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறது. இந்தப் பண்பாட்டை இழந்தால் நமது இனம் தமிழர் என்ற பெயரை இழந்து, மக்கட் கடலில் கலந்த நீர்த்துளிகளாகி முகவரி இல்லாமற் போய்விடும். இனித் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளில் சிலவற்றை விரிவாகக் காண்போம்:

மொழி : "உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே தாயாக இருக்கக்கூடும்" என்று நோம் சாம்சுகி (Noam chamsky) என்ற மொழியியல் அறிஞர் கருதும் அளவுக்குத் தொன்மையும் முதன்மையும் வாய்ந்தது நமது தமிழ் மொழி. "மாந்த எண்ணங்களையும் உணர்வு நுட்பங்களையும் தெளிவாக, அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் ஆற்றல் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு; செம்மொழிகள் என்று கூறப்படும் வேறு எந்த மொழிக்கும் இல்லை" என்று மொழி ஆய்வு அறிஞர் கூறும் அளவுக்குத் தகுதியும் தனித்தன்மையும் நம் தமிழ் மொழிக்குமட்டுமே உண்டு. தமிழர்களுக்கென்று தனியான எண் வடிவங்கள் உண்டு. அதில் அணுவுக்கும் கீழ்ப்பட்ட கீழ்வாய் எண்களுக்குப் பெயர்களும், வடிவங்களும் உண்டு. தமிழ் எண் வடிவங்களையே இங்கு வாணிகம் செய்த அரபியர்கள் கற்றுச் சென்று ஐரோப்பிய நாடுகளில் பரப்பினார்கள் என்றும், அதனால் அவை அரபு எண்கள் எனப் பெயர் பெற்றன என்றும் ஆராய்ச்சி அறிஞர் கூறுகின்றனர்.

இலக்கியம் : கி.மு. பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாயந்த இலக்கணநூல் நம் தொல்காப்பியம். அது கூறும் இலக்கணங்கள் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுந்த இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. உலகச் செவ்வியல் இலக்கியம் எதற்கும் ஈடாகவோ எடுப்பாகவோ இருக்கும் அளவுக்கு ஏற்றம் உடையவை நம் சங்க இலக்கியங்கள். அவற்றில் உள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது உலக அறிஞர்களின் எண்ணத்தை ஈர்த்த தொடர், 'செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்பது, 'The red earth and The pouring rain' என்று தம் புதினத்திற்குப் பெயர்வைக்கும் அளவுக்கு ஓர் ஆங்கில எழுத்தாளரின் கருத்தைக் கவர்ந்திருக்கிறது. உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்த்துப் போற்றப்படும் திருக் குறள், முத்தமிழ்க்கும் ஒரே இலக்கியமாகத் திகழும் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம், கற்போர் நெஞ்சைக் கவரும் கம்பராமாயணம் ஆகியன உலகினர் முன் நம்மைத் தலை நிமிரச்செய்த இலக்கியங்கள்.

கலைகள் : இசை, நடனம், சிற்பம், ஓவியம் ஆகிய கவின்கலைகளில் உலகம் வியக்கும் அளவுக்குத் தொன்மையும் தனித்தன்மையும் பெற்றது தமிழ் நாடு.

இசை: உலக முதன்மொழி தமிழ் என்பது போலவே உலக முதல் இசையும் தமிழன் கண்ட தமிழிசையே. அதுவே உலக முழுவதும் பரவிச் சிலவும் பலவுமான வேறுபாடு களுடன் வழங்கி வருகின்றது. இவை அனைத்திற்கும் அடிப்படையாக 7 சுரங்களும் 12 சுரத்தானங்களும் இருப்பதே இதற்குச் சான்று. நமது பழந்தமிழிசையே இன்று கருநாடக சங்கீதம் என்ற பெயரைப் பெற்றுத் தமிழ்நாடு, கேரளம், கன்னடம், ஆந்திரம் ஆகிய தென்னாட்டுப் பகுதிகளில் வழங்கிவருகிறது. சங்ககாலத்தில் குறிஞ்சி என்று இருந்த பண்ணின் பெயர் இன்றும் மாறாமல் இருக்கிறது. அன்று நைவளம் எள்ற பெயரில் வழங்கிய பண் இடைக்காலத்தில் நட்டபாடை என்ற பெயரில் இருந்து, இன்று கம்பீர நாட்டை என்று பெயர்பெற்றுள்ளது. இசை ஒன்றுதான்; ஆனால் பெயர்கள்தான் மாறி வருகின்றன என்பதற்கு இவை சான்றுகள். சிந்துப்பாடல், உருப்படி முதலிய பலவகையான இசைப்பாடல் வடிவங்கள், இராக ஆலாபனம், சங்கதி, நிரவல், சுரம்பாடுதல் என வளர்ச்சியடைந்து, இன்று நம் செவ்விசை சிறப்பான நிலையிலேயே உள்ளது. குழல், யாழ், மத்தளம் முதலிய பழந்தமிழ் இசைக்கருவிகளில், குழல் இன்றும் எந்த மாற்றமும் பெறாமல் உள்ளது. யாழ் வீணையாகிவிட்டது. இன்றுள்ள நாகசுரமும் தவிலும் தென்னாட்டுக்கே உரிய இசைக்கருவிகள். நாட்டுப்புற இசைக் கருவிகளாகப் பம்பை, உடுக்கை, பறை, தாரை, தப்பட்டை முதலியன உள்ளன. தேவாரம், திருவாசகம், நாலாயிரம், திருப்புகழ், திருஅருட்பா, காவடிச்சிந்து முதலியன பண்ணோடு பாடுவதற்கான இசைப்பாடல்களை உடைய இசைத்தமிழ் நூல்கள். தென்பாங்கு, தாலாட்டு, நடவுப்பாட்டு, உடுக்கைப் பாட்டு, உலக்கைப்பாட்டு, கும்மிப்பாட்டு முதலியன நமக்கே உரிய நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள்.

நடனம்: ஒரு காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையில் உள்ள அம்பலக்கூத்தன் என்னும் தென்னாடுடைய சிவபெருமான் வடிவத்தைக் கண்டு உலகமே வியக்கிறது. நாட்டிய நன்னூல் நன்கனம் கடைப்பிடித்து ஆடினாள் மாதவி என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. முத்தமிழில் ஒன்றுக்குரிய கூத்துக்கலைக்கு இலக்கண நூலாகவும் இலக்கிய நூலாகவும் சிலப்பதிகாரம் விளங்குகிறது. தமிழன் கண்ட இந்த செவ்வியல் நாட்டியக் கலை இன்று பரத நாட்டியம் என்று பெயர் பெற்றுள்ளது. இக் கலையை இன்று வெளிநாட்டினர் விரும்பி வந்து கற்றுச் செல்லுகின்றனர். நமது தெருக்கூத்து, நாட் டுப்புற நாட்டிய நாடகம். இது உழைக்கும் மக்களின் கலையுணர்ச்சிக்கு உயர்ந்த எடுத்துக்காட் டாகும். பொய்க்கால் குதிரை, கரகாட்டம், காவடியாட்டம் ஆகியன நாட்டுப்புற நடனங்கள்.

சிற்பம்: இடது காலை எடுத்து ஆடும் நடராசர் படிமம் தமிழரின் சிற்பக்கலைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. மாமல்லபுரத்துப் புடைப்புச் சிற்பங்களின் கலை நயத்தை உலகம் இன்றும் கண்டு வியக்கிறது.

ஓவியம்: திருக்கோயில்கள், வீடுகள் ஆகியவற்றின் சுவர்களிலும், துணிகளிலும் ஓவியம் வரைவது பண்டைக்காலம் முதல் தமிழர்களின் பழக்கமா யிருந்துவருகிறது. காஞ்சிபுரத்துக் கயிலாச நாதர் கோயில், விழுப்புரம் பனைமலைக் கோயில், தஞ்சைப் பெருவுடையார் கோயில், புதுக்கோட்டைச் சிற்றன்னவாசல் குகைக்கோயில், திருநெல் வேலித் திருமலைபுரத்துக் குகைக்கோயில் முதலிய இடங்களில் இன்றும் நம் முன்னோர்களின் ஓவியத் திறனைக் கண்டு வியக்கலாம்.

கட்டடத் தொழில்நுட்பம்: தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் தனிச்சிறப்பு வாய்ந்த அமைப்பை உலகம் வியந்து பார்க்கிறது. தமிழ்நாடெங்கும் காணப்படும் குடைவரைக் கோயில்களும், மாடக்கோயில், யானைக்கோயில் முதலிய கற்றளிகளும், காவிரியில் கரிகாலன் கட்டியுள்ள கல்லணையும் தமிழர்தம் கட்டடத் தொழில்நுட்பத் திறனுக்குச் சான்றுகளாக உள்ளன.

மருத்துவம்: தமிழருக்கே உரிய மருத்துவமுறை சித்தமருத்துவமாகும். சித்தர்களின் ஆராய்ச் சியின் விளைவாக உருவான இந்த இயற்கை மருத்துவமுறை பெரும்பாலும் பச்சிலைகளை அடிப்படையாகக் கொண்டது. பட்டறிவின் பயனாகக் கண்ட சித்தமருத்துவ முறைகனைப் பாட்டி மருத்துவம் என்று மக்கள் வழங்குகிறார்கள்.

விழாக்கள்: 'காய்ந்த கார்த்தி வந்தால் என்ன? தீய்ந்த தீபாவளி வந்தால் என்ன? மகராசன் பொங்கல் வரணும்; மட்டி போட்டுப் பிட்டுத் தின்னணும்' என்று மக்களிடையே ஒரு பழமொழி உண்டு. தைத்திங்கள் முதல்நாள் வரும் பொங்கலுக்குத் தமிழ்மக்கள் தரும் சிறப்பிடத்தை இது காட்டும். தமிழர்க்கே உரிய இத் திருநாளினைத் தொடரும் மஞ்சுவிரட்டுக் குறிப்பிடத்தக்கது. தைம்முதல் நாளை நாட்டுப்புற மக்கள் ஆண்டுப்பிறப்பு என்று கொள்வதை இன்றும் காணலாம்.

வழிபாட்டுமுறை: போரில் வென்று வீழ்ந்த வீரர்களுக்கு நடுகல் அமைத்துப் பரவும் வழக்கம் கற்சிலைகளைக் கோயிலில் அமைத்து வழிபடும் முறையாக இங்கு வளர்ந்துள்ளது. இவ்வகையில் உருவான முருகன், திருமால், கொற்றவை, சிவன் என்னும் கடவுளர்களின் வழிபாடு தமிழகத்தில் ஏற்பட்டது. கடவுளுக்குத் தருவதாகச் சொல்லி உணவுப் பொருள்களையும் உடைகளையும் வேள்வித் தீயில் போடும் வேதவழிப்பட்ட வழக்கம் ஆரியருடையது. விரும்பிய பொருள்களைக் கடவுள் திருமுன் வைத்துப் படைத்துப்பின் அவற்றைப் பிறர்க்கும் கொடுத்துத் தாமும் உண்பதே தமிழர் வழிபாட்டு முறை. தமிழில் தேவாரம், நாலாயிரம் பாடி வழிபடும் முறை ஆரியர்களால் புறக்கணிக்கப்பட்டு, வடமொழி மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும் முறை நாளடைவில் இங்குப் புகுத்தப்பட்டது.

அய்யனார், மாரியம்மன் திருக்கோயில்களில் தமிழில் மாரியம்மன் தாலாட்டு, உடுக்கைப்பாட்டு முதலியவற்றைப் பாடித் தொழுகின்ற வழக்கத்தை இன்றும் காணலாம். காவடி யெடுத்தல், செடல் குத்துதல், முதுகு தசையில் கொக்கி மாட்டிச் சிறுதேர் இழுத்தல், நாக்கில் வேல் குத்துதல், தீ மிதித்தல் முதலியன தமிழ் நாட்டில் மட்டுமின்றித் தமிழர் வாழும் வெளி நாடுகளிலும் காணக்கூடிய தமிழர் வழிபாட்டு முறைகளாக இருந்து வருகின்றன.


சடங்குகள் : குழந்தைக்கு முடியெடுத்தல், காதுகுத்துதல், மகளிர் பூப்பெய்தினால் மஞ்சள் நீர் சுற்றுதல், திருமணம், இறந்தோர்க்குச் செய்யும் இறுதிச் சடங்குகள், ஆகியவற்றில் தமிழர்க்கே உரிய தனித்தன்மைகள் பல காணப்படுகின்றன. இந்தச் சடங்குகளில், சடங்குக்கு உரியவரின் தாய்மாமனுக்கு அம்மான் என்ற முறையில் தனிச் சிறப்பிடம் வழங்கப்படும். ஒரு பெண் குழந்தை பிறந்து தொட்டிலில் போடுதல், முடிகளைதல், காது குத்துதல், பூப்புச்சடங்குகள், திருமணம், மகப்பேறு ஆகிய எல்லாவற்றிலும் அம்மானுக்குத் தனி மதிப்பும் பொறுப்பும் உண்டு. மணமான ஒரு பெண் இறந்துபோனால், தாய் வீட்டு வரிசை சென்ற பிறகே அடக்கச் சடங்குகள் மேற்கொள்ளப்படும். இறந்துபோனவர்க்காகப் மாரடித்துக் கொள்வதும், ஒருவரை ஒருவர் தழுவி வட்டமிட்டு அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுவதும், ( சில இடங்களில் ) குலவையிடுவதும் தமிழர் பழக்கங்கள்.

புலால் உண்ணும் பழக்கம் உடையோரும், திருமணம், மஞ்சள் நீர், வளைகாப்பு, நீத்தார் இறுதிக்கடன்(கருமாதி) முதலிய குடும்ப விழாக்களில் மரக்கறி உணவையே விருந்தாகப் படைப் பார்கள். சிறு தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்து வழிபாடு செய்வோர், புலால் உணவைக் கடவுளர்க்குப் படைப்பதும், உறவினர்க்கு விருந்தாக அளிப்பதும் உண்டு.

திருமணம் முதலிய மங்கல விழாக்களில் வாயிலில் வாழை மரங்கள் கட்டப்படும். இழவு வீட்டில் கூட ஒற்றை வாழைமரம் கட்டப்படும். திருமணத்தில் மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் மங்கல நாண் (தாலி) கட்டும் வழக்கம் இருந்து வருகிறது. சங்ககாலத்தில் இல்லாத இவ்வழக்கம் இடைக்காலத்தில் தோன்றியிருக்க வேண்டும். என்றாலும் மணமான பெண் தன் தாலிக்குத் தரும் முதன்மை குறிப்பிடத்தக்கது. திருமணத்தைப் பார்ப்பனர் தலைமையில் வடமொழி மந்திரம் கூறித் தீ வளர்த்து வேத முறைப்படி நடத்தும் வழக்கம் தமிழரிடையே குறைந்து கொண்டு வருகிறது. தமிழ்ச் சான்றோர்கள் தலைமையில் நடக்கும் தமிழ்த் திருமணங்கள் பெருகிவருகின்றன.

கொள்கைகள்: மெய்கண்டார் விளக்கிய கொள்கை சைவசித்தாந்தம். இது பதி பசு பாசம் (இறை, உயிர், தளை) என்ற வகையில் உலக வாழ்க்கையை அறிவியல் முறையில் பகுத்தாய்கிறது. சைவ சமயத்தின் முடிவான கொள்கையாக இது கருதப்படுகிறது. வைணவ சமயக் கொள்கையாக இராமாநுசர் விளக்கிய விசிட்டாத்துவைதம் கருதப்படுகிறது. இவ்விரண்டும் தமிழர்கண்ட மெய்ப் பொருட் கொள்கைகள்.

உணவுமுறை: அரிசிச்சோறு தமிழர்களின் முதன்மை உணவு. பயற்றுக் குழம்பு, காரக்குழம்பு, மிளகு நீர், தயிர், துவையல், ஊறுகாய் முதலியன சோற்றுடன் உண்ணப்படும். கேழ்வரகு கம்பு ஆகியவற்றால் ஆகிய கூழ் ஏழைமக்களின் உணவு. அப்பம், இடியப்பம், பிட்டு, இட்டளி சட்டினி, தோசை, வடை, பணியாரம், முறுக்கு, கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை முதலியன சிற்றுண்டி வகைகள். கனி வகைகளில் மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன.

வாழையிலை. தையிலை, மண்கிண்ணி முதலியவற்றில் உணவை இட்டு உண்ணுதல் தமிழர் பழக்கம். வாழையிலையை உணவு இடுமுன் தண்ணீர் தெளித்துத் தடவிவிட்ட பிறகே அது தூய்மைப்படுத்தப்பட்டதாக நாம் நிறைவடைகிறோம். (வெள்ளையர்கள் கழுவிய தட்டுகள், நீர்த்துளி போகத் துணியால் துடைத்த பின்னரே தூய்மை யடைவதாகக் கருதுகின்றனர்.) பண்டைத் தமிழர் வாழ்வில் ஊன்சோறும், மீன் குழம்பும் சிறப்பிடம் பெற்றிருந்தன.

உடைமுறை: பருத்தி, பட்டு, கம்பளி ஆகியவற்றால் ஆன உடைகளைத் தமிழர் பண்டைக்கால முதலே அணிந்து வருகின்றனர். ஆடவர் பெரும்பாலும் வேட்டியும் மேலாடையும் தலைப் பாகை யையும், பெண்டிர் புடவையும் அணிவர். புடவையில் கொய்சகம் வைத்துக் கட்டுவர். ஆண்களும் பெண்களும் மேல் சட்டை வகைகளும் பிறவும் அணியும் வழக்கம் பிற்காலத்தில் வந்ததாகும்.

அணிகலன்கள் : பொன், முத்து, பவழமாலைகள், மோதிரம், வளையல், சங்கிலி, குதம்பை, கம்மல், மாட்டல், வில்லை, கொப்பு, மூக்குத்தி, முத்திரி, நாவடம், காப்பு, மெட்டி முதலியன சிறப்பாகக் குறிக்கத் தகும் பெண்டிர் அணிகலன்கள் ஆகும்.

தட்டுமுட்டுகள் : சால்சட்டி, கலவோடு, உரி, உரல், அம்மி, குடைகல், ஏந்திரம் முதலியன.

விளையாட்டுகள் : குண்டு அடித்தல், பம்பரம் விடுதல், கிட்டிப்புள், பட்டம் விடுதல், ஆடுபுலி, தாயம், சடுகுடு, பாரியடித்தல், பந்தாட்டம், ஏழாங்காய், பள்ளாங்குழி, சில்லி ஆகியன குறிப்பிடத்தக்க தமிழர் விளையாட்டுகள்.

விழாக்கள் : ஆடியில் பதினெட்டாம் பெருக்கும், புரட்டாசியில் ஆயுத பூசையும், தீபாவளி யும், கார்த்திகையில் அண்ணாமலையார் தீபமும், மார்கழியில் வைகுண்ட ஏகாதசியும், தைத்திங்களில் பெரும்பொங்கலும், மாட்டுப்பொங்கலும், தைப்பூசமும், மாசியில் மகமும், பங்குனியில் பங்குனி உத்திரமும் குறிப்பிடத்தக்க விழாக்கள்.

பழக்க வழக்கங்கள் : உலக வாழ்க்கையை அகம் புறம் என்று பகுத்துப் பார்ப்பது தமிழர் நெறி. ஒருவனுக்கு ஒருத்தி என ஒழுக்கமுடன் வாழும் வாழ்க்கை கற்பு வாழ்க்கை எனப்படும். கற்புடைய பெண்கள் தெய்வமாகப் போற்றப்பட்டனர். ( பாரசீக நாட்டில், ஒரு பெண்ணின் கணவன், அண்ணன், மகன் ஆகிய மூவரும் ஒரு கொலைக்குற்றத்தில் சிக்கித் தூக்குத் தண்டனை பெற்றனர். அப்பெண் அரசனிடம் அந்த மூவரையும் தவிரத் தனக்கு ஆதரவு யாரும் இல்லை என்று முறையிட்டாள். அரசன், "இவர்கள் மூவரில் ஒருவரை விடுதலை செய்கிறேன்; உனக்கு யார் வேண்டும்?" என்று கேட்டான். அப்பெண் "அண்ணன் வேண்டும்" என்றாள். அரசன் காரணம் கேட்டான். "கணவன் இல்லை யென்றால் வேறு ஒருவனைத் தேடிக்கொள்ளலாம். பிள்ளை இல்லை என்றால் வேறு பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால். இனி வேறு ஒருவன் என் உடன் பிறக்க முடியுமா?" என்று சொன்னாள். இது அவர்கள் பண்பாடு. தமிழ்நாட்டுப் பெண்ணாயிருந்தால் இந்நிலையில் கணவனைத்தான் கேட்டிருப்பாள்.) ஆடவர்கள் காமக்கிழத்தியரோடு உறவு கொள்வதும், கள் அருந்துவதும் பழங்காலத்தில் இருந்தன. எனினும் அவை குற்றஉணர்வுடனேயே செய்யப்பட்டன. விருந்தோம்பல் என்பது இல்லறக் கடமைகளில் தலை சிறந்ததாகக் கொள்ளப்பட்டது. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழும் காலங்களில் அவர்களுக்கு விருந்தோம்பும் வாய்ப்பு இல்லை. அத்தகைய வீடுகளில் விருந்தினர் உண்பதில்லை. மருதாணி வைத்துக்கொள்ளுதல் மகளிர் அழகு படுத்திக் கொள்ளும் முறைகளில் ஒன்று. பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் இருபாலாரிடமும் உள்ளது. வீடுகளுக்குத் தெருத்திண்ணை வைத்துக் கட்டுதல், வாயிற்காலில் சிற்ப வேலைப்பாடுகள் செய்தல் ஆகிய பழக்கங்கள் தமிழ்நாட்டில் பரவலாக உண்டு. ஆனால் நகரங்களில் இன்று இவை மாறிவருகின்றன.

கூட்டுக் குடும்பமாக வாழ்தல், மணமான பெண்ணுக்குப் புகுந்த வீடே உரிமையானதாக இருப்பினும், பிறந்த வீட்டின்மீது பற்று நீங்காமல் வாழ்தல். சாதி உயர்வு தாழ்வுகளை மதித்தல், சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளுதல், பெண் பார்த்துப் பரியம் போட்டுத் திருமணம் செய்தல், (இன்று இது மாப்பிள்ளை பார்த்து நன்கொடை கொடுத்து மணம் செய்தலாக மாறிவிட்டது). தமக்கை மகள், அத்தை மகள், மாமன் மகள்களை மணந்துகொள்ளும் முறைப்பெண்ணாகக் கருதுதல், தலைப்பிள்ளைப்பேற்றைத் தாய்வீட்டில் வைத்துக்கொள்ளுதல், ஆடித்திங்களில் இளைய இணையர்கள் பிரிந்திருத்தல், ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனித் திங்கள்களில் திருமணம் நடத்துவதைத் தவிர்த்தல், விடிகாலையில் மகளிர் தெருவாயிலில் சாணமோ, நீரோ தெளித்துக் கோலம் போடுதல், மார்கழித்திங்களாயின் கோலத்தின்மேல் பூசணிப்பூ வைத்து அழகு செய்தல், அறைச் சுவர்களைச் சாரப் பழங்கலம் அடுக்கிவைத்தல், சிலரது பார்வையால் தீமை நேரும் என்று அஞ்சிக் கண்ணேறு கழித்தல், பச்சைத் தென்னங்கீற்றைமுடைந்து அதில் பிணத்தைக் கிடத்திப் பாடையில் வைத்தல், பிணத்துக்குத் தீ மூட்டும்போதோ, புதைக்கும்போதோ நெருங்கிய உறவினர்கள் வாய்க்கரிசி போடுதல் முதலியன தமிழரிடம் உள்ள பழக்கவழக்கங்களிற் குறிப்பிடத்தக்கவை.

நம்பிக்கைகள் : வேப்பமரமும் அரசமரமும் இணைந்து வளர்ந்திருந்தால் அங்கே தெய்வம் இருப்பதாக நம்புதல், பிள்ளை இல்லாதவர்கள் அரசமரத்தைச் சுற்றுதல், நல்லநாள், இராகுகாலம், குளிகைகாலம் பார்த்தல், சகுனம் பார்த்தல், கனவுகளுக்கு விளைவு உண்டு என்று நம்புதல், பிறந்த குழந்தைக்கு மண் பொட்டு இடுதல், மணம் முடிந்து வரும் பெண் வலக்காலை எடுத்துவைத்துப் புக்ககத்தில் நுழைதல், தும்மினால் வாழத்துதல், கணவனை இழந்தோர் மஞ்சள் பூ, பொட்டு, வளையல்களை விலக்குதல், ஆண்கள் புதன் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகல், கிரகணம் பிடித்திருக்கும் நேரத்தில் உணவு உண்ணாமை, அப்போது, கருவுற்ற பெண்கள் துரும்பைக் கிள்ளினால் கருச் சிதையும் என்றெண்ணுதல், சனிக்கிழமைகளில் யாராவது இறந்துவிட்டால், 'சனிப்பிணம் துணை தேடும்' என்று பாடையில் ஒரு கோழியைக் கட்டிச் சென்று பிணத்துடன் புதைத்தல் முதலியன சில நம்பிக்கைகள்.

புகுத்தப்படும் அயற் பண்பாடுகள்: அண்மைக்காலமாகச் சில அயற்பண்பாடுகள் தமிழரிடையே புகுத்தப்பட்டுவருகின்றன. பிள்ளையார் சதுர்த்தியில் 30அடி, 40அடி உயரமுள்ள பிள்ளையார் உருவம் செய்து தெருத்தெருவாக இழுத்துவந்து, அதைத் துண்டு துண்டாக வெட்டி நீரில் எறிவது, 60அடி. 70அடி உயரத்தில் ஆஞ்சநேயர் கற்சிலை செய்து, சாலையோரங்களில் நிறுவி, அதன்மேல் ஆயிரக்கணக்கான குடங்கள் பாலை ஊற்றி முழுக்காட்டுவது, கிறித்து ஆண்டுப் பிறப்பில் இந்துக்கோயில்களில் இரவெல்லாம் வழிபாடு செய்வது, சோதிடப்பொருத்தம் என்ற பெயரில் குழந்தைகளுக்கும் நிறுவனங்களுக்கும் கண்ட கண்ட அயல்மொழிப் பெயர்களை வைப் பது, வாத்து சாத்திரம் என்ற பெயரில் குடியிருக்கும் வீட்டை இடித்து வாயிலை மாற்றி அமைப்பது முதலிய பழக்கங்கள் தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்குமுன் இல்லாதவை.

விரவிவரும் வேண்டாத பண்பாடுகள்: மக்களின் அறியாமையாலோ மூட நம்பிக்கையாலோ, தமிழ்ப்பகைவர்கள் திட்டமிட்டுப் புகுத்தியதாலோ தமிழர் வாழ்வில் வேண்டாத பண்பாடுகள் விரவிவருகின்றன. சாதிமத வேறுபாடுகள் பாராட்டுதல், தலைமை வழிபாடு, திரையுலகத்திற்குச் சிறப்பிடம் தருதல், தாய்மொழியைப் புறக்கணித்து அயல்மொழிகளை உயர்வாக மதித்தல் முதலிய வேண்டாத பண்பாடுகள் வளர்ந்து வருகின்றன. இதன் விளைவாக, இன்று தமிழர் பேச்சில், But, So, O.K., Sorry,Thanks, Super முதலிய ஆங்கிலச்சொற்கள் இயல்பாகத் தமிழ்ச்சொற்களைப்போலக் கலந்து பேசப்படுகின்றன. இதன் விளைவாக ஆனால், அதனால், சரி முதலிய தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்துவருகின்றன. மாறன், செழியன், மலர்விழி, மான்விழி போன்ற தமிழ்ப்பெயர்களை விட்டு, ப்ராணேஷ், விஸ்வாஷ், ஸுப்ரஜா. ஷீலாப்ரியா போன்ற வடமொழிப் பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைத்து மகிழ்கிறார்கள். தம் குழந்தைகள் தமிழில் பேசுவதை விரும்புவதில்லை. அதனால் இன்றைய குழந்தைகளுக்குத் தமிழில் ஒன்று இரண்டு எண்ணத் தெரிவதில்லை. ஞாயிறு திங்கள் தெரிவதில்லை. சிவப்பு, கருப்பு, உடுப்பு, செருப்பு என்பன போன்ற எளிய சொற்களையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தாத்தா, பாட்டி, மாமா, அத்தை போன்ற முறைப்பெயர்கள் கூடத் தெரிவதில்லை. தன் தலைவர்க்கோ நடிக நடிகையர்க்கோ ஒரு துன்பம் நேரிட்டால் அதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளுதல், அவர்களுக்குத் தன் அன்பைக் காட்ட விரலை நறுக்கிக்கொள்ளுதல், முதலிய செயல்கள் தமிழ்நாட்டில் மட்டுமே நடந்து வருகின்றன.

மறைந்துவரும் நம் பண்பாடுகளைக் காப்பாற்ற என்ன செய்யலாம்?: இப்போதுள்ள நிலையை ஆய்ந்து யுனெசுகோ என்னும் உலக நிறுவனம் இந்த நூற்றாண்டில் தமிழ் மொழி மறைந்துவிடும் என்று கூறியிருக்கிறது. இதே நிலைமை நீடித்தால், தமிழ்ப்பண்பாடும் முற்றாக அழிந்து, தமிழர்கள் முகவரியற்றுப் போவார்கள் என்பது உறுதி. இதுபற்றி நாம் உண்மையாகவே கவலைப்படுவதாக இருந்தால், 'கன்னித்தமிழ்', 'காலங்கடந்த தமிழ்' என்றெல்லாம் வாய்வீச்சு வீசும் ஆரவாரங்களை நிறுத்திக்கொண்டு பின்வரும் பணிகளில் இன்று முதலே ஈடு படலாம்:

1. இயன்ற வரை அயல்மொழி கலவாமல் தமிழ் பேசுவோம்; எழுதுவோம்.

2. நமது பெயர் பிற மொழியில் இருநóதால், அதைத் தமிழாக்கிக்கொள்வோம்; அல்லது வேறு தமிழ்ப் பெயர் வைத்துக்கொள்வோம். குழந்தைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைப்போம்.

3. பிற மொழியில் ஒப்பமிடும் வழக்கம் இருந்தால் அதை ஒழித்துத் தமிழில் ஒப்ப மிடுவோம்.

4. நமது பெயரின் தலைப்பெழுத்தைத் தமிழில் போடுவோம்.

5. நம் வண்டிகளின் எண்ணுப்பலகையில் தமிழில் எண்களை எழுதுவோம்.

6. தொலைபேசி அழைப்புக்கு "ஹலோ" என்று விடை சொல்வதை விட்டு "வணக்கம்" என்று சொல்வோம்.

7. திருவள்ளுவர் ஆண்டையும் தமிழ்த் திங்கட்பெயர்களையும் பயன்படுத்துவோம்.

8. நம் குடும்ப நிகழ்ச்சிகளில் ஆரியச் சடங்குகளையும், வடமொழி மந்திரங்களையும் ஒழிப்போம்.

9. திருக்கோயில் வழிபாட்டில் தமிழில் போற்றிகள் சொல்லச் செய்வோம்.

10. தீபாவளி, பிள்ளையார் சதுர்த்தி முதலிய அயற்பண்பாட்டுப் பண்டிகைகளைக் கொண்டாடுவதைக் கைவிடுவோம்.

11. தமிழ் இசை பயில்வோம்; நம் குழந்தைகளுக்குப் பயிற்றுவோம். தமிழில் பாடுவோரைத் தட்டிக்கொடுப்போம்; பிற மொழியில் பாடினால் தட்டிக் கேட்போம்.

12. நாம் தமிழர்களாகப் பிறந்ததற்காகப் பெருமைப்படுவோம். நம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்வோம்; நம்மை 'இந்து' என்று சொல்வதை ஏற்க மறுப்போம்.

இந்நெறிகளை நாம் அனைவரும் கடைப்பிடித்தால், எஞ்சியிருக்கும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாக்கலாம்; இழந்த பண்பாடுகளையும் மீட்கலாம். நாம் வாழும் சூழல் எத் தகையதாக இருந்தாலும், நமது பண்பாட்டின்மீது மதிப்புக்கொண்டு, அதன் தொடர்பை விடாது வாழ்வோம். நீர்நிலையில் உள்ள தாமரையைக் கதிரவன் தந்தையாகவும், தண்ணீர் தாயாகவும் இருந்து வளர்க்கின்றன. எனினும், அதன் வேரைப் பிடுங்கி நீரிலேயே விட்டால், தாயாகிய தண்ணீரே அதை அழுகச்செய்து கொன்றுவிடும்; கரையில் எடுத்துப் போட்டால், தந்தையாகிய கதிரவனே அதனைக் காயச் செய்துகொன்றுவிடும். தாமரை மண்ணில் வேரூன்றி இருக்கும் வரையில்தான் உயிர்வாழ முடியும். அது போல் மக்களினம் தம் பண்பாட்டில் பற்று விடாமல் இருக்கும் வரையில்தான் தனி இனமாக வாழமுடியும். எனவே, நாமும் நமது பண்பாட்டைப் பாதுகாத்து, அதன் தொடர்பை விடாமல் 'என்றும் உள தென்தமிழ்' இனமாக உலகில் இன்புற்று வாழ்வோமாக !

சங்குவெண் தாம ரைக்குத் தந்தைதாய் இரவி தண்ணீர். அங்குஅதைக் கொய்து விட்டால், அழுகச்செய்து அந்நீர் கொல்லும். துங்கவன் கரையில் போட்டால், சூரியன் காய்ந்து கொல்வான். தங்களின் நிலைமை கெட்டால், இப்படித் தயங்கு வாரே!
விவேகசிந்தாமணி-14.

முனைவர் இரா. திருமுருகன், புதுச்சேரி, இந்தியா
மின்னஞ்சல் : irathirumurugan@yahoo.co.in

2 comments:

பெ. சக்திவேல் said...

தமிழ்ப் பண்பாட்டை ஒரு பாடமாகப் படிக்கும் மாணவர்கள் தமிழகத்தில் இப்பொழுது அதிகம் பெருகிக்கொண்டு வருகிறார்கள். இது, தமது பண்பாட்டு மீதான ஆர்வத்தாலா அல்லது கட்டாயத்தாலா என்பது வேறு விடயம். ஆக மொத்தத்தில் தமிழ்ப் பண்பாடு குறித்தான அறிதல் தமிழகத்தில் பெருகிக் கொண்டு வருகிறது. இத்தகைய மாணவர்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு அடிப்படையாக நிச்சயம் உதவும். இதனால், பண்பாட்டு மாணவர்களுக்கு மட்டும் என்று பொருள் அல்ல. தமிழனகாப் பிறந்த ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய விடயம் இது. தமிழர்களில் அறிதல் பரப்பில் ஒரு துரும்பை எடுத்துப் போடும் இந்தக் கட்டுரை மிக மிக முக்கியம். இதில் யுனெசுகோ சொல்வது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத கணிப்பு. மெல்லத் தமிழினி சாகும் என்ற எண்ணம் கணினியில் தமிழ் கால் பதித்த பிறகு செத்துப்போய் விட்டது. இப்படியான எண்ணங்கள் தமிழ் மீது அதீதப் பற்றுள்ளவர்கள் மனதில் மட்டும்தான் தோன்றுகின்றன. இதில் குற்றம் ஒன்றும் இல்லை. நிச்சயம் தமிழ் சாகாது. அதனால், நாம் தமிழ் மீது கவலையற்று இருப்போம் என்று பொருளல்ல.

கட்டுரையின் தொடக்கம் மேலோட்டமாகத் தொடங்கி முடிவு கொஞ்சம் காத்திரமாக முடிந்திருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி.

sakthivel@chennainetwork.com

Yuvaraj said...

நன்றி திரு சக்திவேல்.
நல்ல கருத்துரைகளை வழங்கி இருக்கிறீர்கள்.
இணைவோம் தமிழர்களாய் !! இயற்றுவோம் தமிழால் !!

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...