28.8.08

மாற்றுத்திரை

மிழ் சமூகத்தில் ஊடகம் ஒரு பெரும் தகவல் புரட்சியை தந்துக்கொண்டிருக்கிறது.அதுவும்,காட்சியூடக கலாச்சாரம் நாளுக்கு நாள் ஒரு தகவல் பரிமாற்றத்தை /சமூக பரிணாமத்தை வழங்கி வருவது காணும் உண்மை.தகவல் பரிமாற்றம் என்பது, பொதுமக்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுகிறது என்பதை பொருத்தும் அதன் தகுதி கணிக்கப்படும். அந்த வகையில் காட்சியூடகங்கள் பொதுமக்களின் , அதாவது, தமிழ் சமூதாயத்தின் ஒட்டுமொத்த கலாச்சார சீரழிவை நோக்கிய பயணத்திற்கு இட்டு செல்ல வழி செய்துக்கொண்டிருக்கிறது.அதன் 50 விழுக்காடு பணிமுடிந்துவிட்டது. எஞ்சிய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.இது சமூகத்தில் எத்தகைய விளைவை தந்துக் கொண்டிருக்கிறது என்பது நாம் அறியாதாரில்லை.
இந்நிலையில் , நாம் மாற்றுத்திரைக்கான இயக்கத்தை உருவாக்க வேண்டிய சூழலில் ஆட்பட்டு இருக்கிறோம்.
அப்படி தமிழ் மொழி , இனம், சமூகம், பண்பாடு, கலை, இலக்கியம் போன்ற தளங்களின் கூறுகளைக்கொண்டு இயக்கி எடுக்கப்பட்ட ஆவண / குறும்படங்களை ஆவணமாக்கப்பட வேண்டிய நிலையிலும், அதனை மக்களுக்கு காட்டப்படவேண்டிய நிலையிலும் நாம் இருக்கிறோம்.
அதற்கான முதற் பணியாக இணையத்தில், குறும்பட சேகரிப்பில் ஈடுபடுகிறோம். தற்போது
300+ படங்களைக்கொண்ட இணையத்தளமொன்றை உருவாக்கி வருகிறோம். இதன் பணிகளில் உங்கள் பங்களிப்பாக, தங்களிடம் இருக்கும் படங்களின் படியொன்றை அனுப்ப வேண்டுகிறோம். உடன், படம் தாம்தான் அனுப்பியதற்கான தானே சான்றிட்ட மடலும், தன்குறிப்பும் வேண்டுகிறோம்.

உடன் தொடர்புக்கு....
9788552061 - pollachinasan@gmail.com
9994854589 - YourRaajV@gmail.com

25.8.08

தமிழ்ப் பண்பாட்டுப் பாதுகாப்பு - முனைவர் இரா. திருமுருகன்


நன்றி:தமிழ்க்காவல்

ண்பு வேறு; பண்பாடு வேறு. தனி மாந்தனின் இயல்பைப் பண்பு என்கிறோம். மக்கள் இனத்தின் இயல்பைப் பண்பாடு என்கிறோம். தமிழ் இனத்துக்கு உரிய மொழி, இலக்கியம், கலைகள், கட்டடத் தொழில்நுட்பம், மருத்துவம், விழாக்கள், வழிபாட்டுமுறை, சடங்குகள், கொள்கைகள், உணவு முறை, உடை முறை, அணிகலன்கள், தட்டுமுட்டுகள், விளையாட்டுகள், விழாக்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகைள் முதலிய அனைத்தும் தமிழ்ப் பண்பாட்டில் அடங்கும். இவை நமது தமிழ் இனத்துக்கு அடையாளமாக உள்ள கூறுகள் ஆகும். இந்த அடையாளத்தை நமது இனம் மரபு வழியாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறது. இந்தப் பண்பாட்டை இழந்தால் நமது இனம் தமிழர் என்ற பெயரை இழந்து, மக்கட் கடலில் கலந்த நீர்த்துளிகளாகி முகவரி இல்லாமற் போய்விடும். இனித் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளில் சிலவற்றை விரிவாகக் காண்போம்:

மொழி : "உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே தாயாக இருக்கக்கூடும்" என்று நோம் சாம்சுகி (Noam chamsky) என்ற மொழியியல் அறிஞர் கருதும் அளவுக்குத் தொன்மையும் முதன்மையும் வாய்ந்தது நமது தமிழ் மொழி. "மாந்த எண்ணங்களையும் உணர்வு நுட்பங்களையும் தெளிவாக, அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தும் ஆற்றல் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு; செம்மொழிகள் என்று கூறப்படும் வேறு எந்த மொழிக்கும் இல்லை" என்று மொழி ஆய்வு அறிஞர் கூறும் அளவுக்குத் தகுதியும் தனித்தன்மையும் நம் தமிழ் மொழிக்குமட்டுமே உண்டு. தமிழர்களுக்கென்று தனியான எண் வடிவங்கள் உண்டு. அதில் அணுவுக்கும் கீழ்ப்பட்ட கீழ்வாய் எண்களுக்குப் பெயர்களும், வடிவங்களும் உண்டு. தமிழ் எண் வடிவங்களையே இங்கு வாணிகம் செய்த அரபியர்கள் கற்றுச் சென்று ஐரோப்பிய நாடுகளில் பரப்பினார்கள் என்றும், அதனால் அவை அரபு எண்கள் எனப் பெயர் பெற்றன என்றும் ஆராய்ச்சி அறிஞர் கூறுகின்றனர்.

இலக்கியம் : கி.மு. பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாயந்த இலக்கணநூல் நம் தொல்காப்பியம். அது கூறும் இலக்கணங்கள் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுந்த இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. உலகச் செவ்வியல் இலக்கியம் எதற்கும் ஈடாகவோ எடுப்பாகவோ இருக்கும் அளவுக்கு ஏற்றம் உடையவை நம் சங்க இலக்கியங்கள். அவற்றில் உள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது உலக அறிஞர்களின் எண்ணத்தை ஈர்த்த தொடர், 'செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்பது, 'The red earth and The pouring rain' என்று தம் புதினத்திற்குப் பெயர்வைக்கும் அளவுக்கு ஓர் ஆங்கில எழுத்தாளரின் கருத்தைக் கவர்ந்திருக்கிறது. உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்த்துப் போற்றப்படும் திருக் குறள், முத்தமிழ்க்கும் ஒரே இலக்கியமாகத் திகழும் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம், கற்போர் நெஞ்சைக் கவரும் கம்பராமாயணம் ஆகியன உலகினர் முன் நம்மைத் தலை நிமிரச்செய்த இலக்கியங்கள்.

கலைகள் : இசை, நடனம், சிற்பம், ஓவியம் ஆகிய கவின்கலைகளில் உலகம் வியக்கும் அளவுக்குத் தொன்மையும் தனித்தன்மையும் பெற்றது தமிழ் நாடு.

இசை: உலக முதன்மொழி தமிழ் என்பது போலவே உலக முதல் இசையும் தமிழன் கண்ட தமிழிசையே. அதுவே உலக முழுவதும் பரவிச் சிலவும் பலவுமான வேறுபாடு களுடன் வழங்கி வருகின்றது. இவை அனைத்திற்கும் அடிப்படையாக 7 சுரங்களும் 12 சுரத்தானங்களும் இருப்பதே இதற்குச் சான்று. நமது பழந்தமிழிசையே இன்று கருநாடக சங்கீதம் என்ற பெயரைப் பெற்றுத் தமிழ்நாடு, கேரளம், கன்னடம், ஆந்திரம் ஆகிய தென்னாட்டுப் பகுதிகளில் வழங்கிவருகிறது. சங்ககாலத்தில் குறிஞ்சி என்று இருந்த பண்ணின் பெயர் இன்றும் மாறாமல் இருக்கிறது. அன்று நைவளம் எள்ற பெயரில் வழங்கிய பண் இடைக்காலத்தில் நட்டபாடை என்ற பெயரில் இருந்து, இன்று கம்பீர நாட்டை என்று பெயர்பெற்றுள்ளது. இசை ஒன்றுதான்; ஆனால் பெயர்கள்தான் மாறி வருகின்றன என்பதற்கு இவை சான்றுகள். சிந்துப்பாடல், உருப்படி முதலிய பலவகையான இசைப்பாடல் வடிவங்கள், இராக ஆலாபனம், சங்கதி, நிரவல், சுரம்பாடுதல் என வளர்ச்சியடைந்து, இன்று நம் செவ்விசை சிறப்பான நிலையிலேயே உள்ளது. குழல், யாழ், மத்தளம் முதலிய பழந்தமிழ் இசைக்கருவிகளில், குழல் இன்றும் எந்த மாற்றமும் பெறாமல் உள்ளது. யாழ் வீணையாகிவிட்டது. இன்றுள்ள நாகசுரமும் தவிலும் தென்னாட்டுக்கே உரிய இசைக்கருவிகள். நாட்டுப்புற இசைக் கருவிகளாகப் பம்பை, உடுக்கை, பறை, தாரை, தப்பட்டை முதலியன உள்ளன. தேவாரம், திருவாசகம், நாலாயிரம், திருப்புகழ், திருஅருட்பா, காவடிச்சிந்து முதலியன பண்ணோடு பாடுவதற்கான இசைப்பாடல்களை உடைய இசைத்தமிழ் நூல்கள். தென்பாங்கு, தாலாட்டு, நடவுப்பாட்டு, உடுக்கைப் பாட்டு, உலக்கைப்பாட்டு, கும்மிப்பாட்டு முதலியன நமக்கே உரிய நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள்.

நடனம்: ஒரு காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையில் உள்ள அம்பலக்கூத்தன் என்னும் தென்னாடுடைய சிவபெருமான் வடிவத்தைக் கண்டு உலகமே வியக்கிறது. நாட்டிய நன்னூல் நன்கனம் கடைப்பிடித்து ஆடினாள் மாதவி என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. முத்தமிழில் ஒன்றுக்குரிய கூத்துக்கலைக்கு இலக்கண நூலாகவும் இலக்கிய நூலாகவும் சிலப்பதிகாரம் விளங்குகிறது. தமிழன் கண்ட இந்த செவ்வியல் நாட்டியக் கலை இன்று பரத நாட்டியம் என்று பெயர் பெற்றுள்ளது. இக் கலையை இன்று வெளிநாட்டினர் விரும்பி வந்து கற்றுச் செல்லுகின்றனர். நமது தெருக்கூத்து, நாட் டுப்புற நாட்டிய நாடகம். இது உழைக்கும் மக்களின் கலையுணர்ச்சிக்கு உயர்ந்த எடுத்துக்காட் டாகும். பொய்க்கால் குதிரை, கரகாட்டம், காவடியாட்டம் ஆகியன நாட்டுப்புற நடனங்கள்.

சிற்பம்: இடது காலை எடுத்து ஆடும் நடராசர் படிமம் தமிழரின் சிற்பக்கலைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. மாமல்லபுரத்துப் புடைப்புச் சிற்பங்களின் கலை நயத்தை உலகம் இன்றும் கண்டு வியக்கிறது.

ஓவியம்: திருக்கோயில்கள், வீடுகள் ஆகியவற்றின் சுவர்களிலும், துணிகளிலும் ஓவியம் வரைவது பண்டைக்காலம் முதல் தமிழர்களின் பழக்கமா யிருந்துவருகிறது. காஞ்சிபுரத்துக் கயிலாச நாதர் கோயில், விழுப்புரம் பனைமலைக் கோயில், தஞ்சைப் பெருவுடையார் கோயில், புதுக்கோட்டைச் சிற்றன்னவாசல் குகைக்கோயில், திருநெல் வேலித் திருமலைபுரத்துக் குகைக்கோயில் முதலிய இடங்களில் இன்றும் நம் முன்னோர்களின் ஓவியத் திறனைக் கண்டு வியக்கலாம்.

கட்டடத் தொழில்நுட்பம்: தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் தனிச்சிறப்பு வாய்ந்த அமைப்பை உலகம் வியந்து பார்க்கிறது. தமிழ்நாடெங்கும் காணப்படும் குடைவரைக் கோயில்களும், மாடக்கோயில், யானைக்கோயில் முதலிய கற்றளிகளும், காவிரியில் கரிகாலன் கட்டியுள்ள கல்லணையும் தமிழர்தம் கட்டடத் தொழில்நுட்பத் திறனுக்குச் சான்றுகளாக உள்ளன.

மருத்துவம்: தமிழருக்கே உரிய மருத்துவமுறை சித்தமருத்துவமாகும். சித்தர்களின் ஆராய்ச் சியின் விளைவாக உருவான இந்த இயற்கை மருத்துவமுறை பெரும்பாலும் பச்சிலைகளை அடிப்படையாகக் கொண்டது. பட்டறிவின் பயனாகக் கண்ட சித்தமருத்துவ முறைகனைப் பாட்டி மருத்துவம் என்று மக்கள் வழங்குகிறார்கள்.

விழாக்கள்: 'காய்ந்த கார்த்தி வந்தால் என்ன? தீய்ந்த தீபாவளி வந்தால் என்ன? மகராசன் பொங்கல் வரணும்; மட்டி போட்டுப் பிட்டுத் தின்னணும்' என்று மக்களிடையே ஒரு பழமொழி உண்டு. தைத்திங்கள் முதல்நாள் வரும் பொங்கலுக்குத் தமிழ்மக்கள் தரும் சிறப்பிடத்தை இது காட்டும். தமிழர்க்கே உரிய இத் திருநாளினைத் தொடரும் மஞ்சுவிரட்டுக் குறிப்பிடத்தக்கது. தைம்முதல் நாளை நாட்டுப்புற மக்கள் ஆண்டுப்பிறப்பு என்று கொள்வதை இன்றும் காணலாம்.

வழிபாட்டுமுறை: போரில் வென்று வீழ்ந்த வீரர்களுக்கு நடுகல் அமைத்துப் பரவும் வழக்கம் கற்சிலைகளைக் கோயிலில் அமைத்து வழிபடும் முறையாக இங்கு வளர்ந்துள்ளது. இவ்வகையில் உருவான முருகன், திருமால், கொற்றவை, சிவன் என்னும் கடவுளர்களின் வழிபாடு தமிழகத்தில் ஏற்பட்டது. கடவுளுக்குத் தருவதாகச் சொல்லி உணவுப் பொருள்களையும் உடைகளையும் வேள்வித் தீயில் போடும் வேதவழிப்பட்ட வழக்கம் ஆரியருடையது. விரும்பிய பொருள்களைக் கடவுள் திருமுன் வைத்துப் படைத்துப்பின் அவற்றைப் பிறர்க்கும் கொடுத்துத் தாமும் உண்பதே தமிழர் வழிபாட்டு முறை. தமிழில் தேவாரம், நாலாயிரம் பாடி வழிபடும் முறை ஆரியர்களால் புறக்கணிக்கப்பட்டு, வடமொழி மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும் முறை நாளடைவில் இங்குப் புகுத்தப்பட்டது.

அய்யனார், மாரியம்மன் திருக்கோயில்களில் தமிழில் மாரியம்மன் தாலாட்டு, உடுக்கைப்பாட்டு முதலியவற்றைப் பாடித் தொழுகின்ற வழக்கத்தை இன்றும் காணலாம். காவடி யெடுத்தல், செடல் குத்துதல், முதுகு தசையில் கொக்கி மாட்டிச் சிறுதேர் இழுத்தல், நாக்கில் வேல் குத்துதல், தீ மிதித்தல் முதலியன தமிழ் நாட்டில் மட்டுமின்றித் தமிழர் வாழும் வெளி நாடுகளிலும் காணக்கூடிய தமிழர் வழிபாட்டு முறைகளாக இருந்து வருகின்றன.


சடங்குகள் : குழந்தைக்கு முடியெடுத்தல், காதுகுத்துதல், மகளிர் பூப்பெய்தினால் மஞ்சள் நீர் சுற்றுதல், திருமணம், இறந்தோர்க்குச் செய்யும் இறுதிச் சடங்குகள், ஆகியவற்றில் தமிழர்க்கே உரிய தனித்தன்மைகள் பல காணப்படுகின்றன. இந்தச் சடங்குகளில், சடங்குக்கு உரியவரின் தாய்மாமனுக்கு அம்மான் என்ற முறையில் தனிச் சிறப்பிடம் வழங்கப்படும். ஒரு பெண் குழந்தை பிறந்து தொட்டிலில் போடுதல், முடிகளைதல், காது குத்துதல், பூப்புச்சடங்குகள், திருமணம், மகப்பேறு ஆகிய எல்லாவற்றிலும் அம்மானுக்குத் தனி மதிப்பும் பொறுப்பும் உண்டு. மணமான ஒரு பெண் இறந்துபோனால், தாய் வீட்டு வரிசை சென்ற பிறகே அடக்கச் சடங்குகள் மேற்கொள்ளப்படும். இறந்துபோனவர்க்காகப் மாரடித்துக் கொள்வதும், ஒருவரை ஒருவர் தழுவி வட்டமிட்டு அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுவதும், ( சில இடங்களில் ) குலவையிடுவதும் தமிழர் பழக்கங்கள்.

புலால் உண்ணும் பழக்கம் உடையோரும், திருமணம், மஞ்சள் நீர், வளைகாப்பு, நீத்தார் இறுதிக்கடன்(கருமாதி) முதலிய குடும்ப விழாக்களில் மரக்கறி உணவையே விருந்தாகப் படைப் பார்கள். சிறு தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்து வழிபாடு செய்வோர், புலால் உணவைக் கடவுளர்க்குப் படைப்பதும், உறவினர்க்கு விருந்தாக அளிப்பதும் உண்டு.

திருமணம் முதலிய மங்கல விழாக்களில் வாயிலில் வாழை மரங்கள் கட்டப்படும். இழவு வீட்டில் கூட ஒற்றை வாழைமரம் கட்டப்படும். திருமணத்தில் மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் மங்கல நாண் (தாலி) கட்டும் வழக்கம் இருந்து வருகிறது. சங்ககாலத்தில் இல்லாத இவ்வழக்கம் இடைக்காலத்தில் தோன்றியிருக்க வேண்டும். என்றாலும் மணமான பெண் தன் தாலிக்குத் தரும் முதன்மை குறிப்பிடத்தக்கது. திருமணத்தைப் பார்ப்பனர் தலைமையில் வடமொழி மந்திரம் கூறித் தீ வளர்த்து வேத முறைப்படி நடத்தும் வழக்கம் தமிழரிடையே குறைந்து கொண்டு வருகிறது. தமிழ்ச் சான்றோர்கள் தலைமையில் நடக்கும் தமிழ்த் திருமணங்கள் பெருகிவருகின்றன.

கொள்கைகள்: மெய்கண்டார் விளக்கிய கொள்கை சைவசித்தாந்தம். இது பதி பசு பாசம் (இறை, உயிர், தளை) என்ற வகையில் உலக வாழ்க்கையை அறிவியல் முறையில் பகுத்தாய்கிறது. சைவ சமயத்தின் முடிவான கொள்கையாக இது கருதப்படுகிறது. வைணவ சமயக் கொள்கையாக இராமாநுசர் விளக்கிய விசிட்டாத்துவைதம் கருதப்படுகிறது. இவ்விரண்டும் தமிழர்கண்ட மெய்ப் பொருட் கொள்கைகள்.

உணவுமுறை: அரிசிச்சோறு தமிழர்களின் முதன்மை உணவு. பயற்றுக் குழம்பு, காரக்குழம்பு, மிளகு நீர், தயிர், துவையல், ஊறுகாய் முதலியன சோற்றுடன் உண்ணப்படும். கேழ்வரகு கம்பு ஆகியவற்றால் ஆகிய கூழ் ஏழைமக்களின் உணவு. அப்பம், இடியப்பம், பிட்டு, இட்டளி சட்டினி, தோசை, வடை, பணியாரம், முறுக்கு, கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை முதலியன சிற்றுண்டி வகைகள். கனி வகைகளில் மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன.

வாழையிலை. தையிலை, மண்கிண்ணி முதலியவற்றில் உணவை இட்டு உண்ணுதல் தமிழர் பழக்கம். வாழையிலையை உணவு இடுமுன் தண்ணீர் தெளித்துத் தடவிவிட்ட பிறகே அது தூய்மைப்படுத்தப்பட்டதாக நாம் நிறைவடைகிறோம். (வெள்ளையர்கள் கழுவிய தட்டுகள், நீர்த்துளி போகத் துணியால் துடைத்த பின்னரே தூய்மை யடைவதாகக் கருதுகின்றனர்.) பண்டைத் தமிழர் வாழ்வில் ஊன்சோறும், மீன் குழம்பும் சிறப்பிடம் பெற்றிருந்தன.

உடைமுறை: பருத்தி, பட்டு, கம்பளி ஆகியவற்றால் ஆன உடைகளைத் தமிழர் பண்டைக்கால முதலே அணிந்து வருகின்றனர். ஆடவர் பெரும்பாலும் வேட்டியும் மேலாடையும் தலைப் பாகை யையும், பெண்டிர் புடவையும் அணிவர். புடவையில் கொய்சகம் வைத்துக் கட்டுவர். ஆண்களும் பெண்களும் மேல் சட்டை வகைகளும் பிறவும் அணியும் வழக்கம் பிற்காலத்தில் வந்ததாகும்.

அணிகலன்கள் : பொன், முத்து, பவழமாலைகள், மோதிரம், வளையல், சங்கிலி, குதம்பை, கம்மல், மாட்டல், வில்லை, கொப்பு, மூக்குத்தி, முத்திரி, நாவடம், காப்பு, மெட்டி முதலியன சிறப்பாகக் குறிக்கத் தகும் பெண்டிர் அணிகலன்கள் ஆகும்.

தட்டுமுட்டுகள் : சால்சட்டி, கலவோடு, உரி, உரல், அம்மி, குடைகல், ஏந்திரம் முதலியன.

விளையாட்டுகள் : குண்டு அடித்தல், பம்பரம் விடுதல், கிட்டிப்புள், பட்டம் விடுதல், ஆடுபுலி, தாயம், சடுகுடு, பாரியடித்தல், பந்தாட்டம், ஏழாங்காய், பள்ளாங்குழி, சில்லி ஆகியன குறிப்பிடத்தக்க தமிழர் விளையாட்டுகள்.

விழாக்கள் : ஆடியில் பதினெட்டாம் பெருக்கும், புரட்டாசியில் ஆயுத பூசையும், தீபாவளி யும், கார்த்திகையில் அண்ணாமலையார் தீபமும், மார்கழியில் வைகுண்ட ஏகாதசியும், தைத்திங்களில் பெரும்பொங்கலும், மாட்டுப்பொங்கலும், தைப்பூசமும், மாசியில் மகமும், பங்குனியில் பங்குனி உத்திரமும் குறிப்பிடத்தக்க விழாக்கள்.

பழக்க வழக்கங்கள் : உலக வாழ்க்கையை அகம் புறம் என்று பகுத்துப் பார்ப்பது தமிழர் நெறி. ஒருவனுக்கு ஒருத்தி என ஒழுக்கமுடன் வாழும் வாழ்க்கை கற்பு வாழ்க்கை எனப்படும். கற்புடைய பெண்கள் தெய்வமாகப் போற்றப்பட்டனர். ( பாரசீக நாட்டில், ஒரு பெண்ணின் கணவன், அண்ணன், மகன் ஆகிய மூவரும் ஒரு கொலைக்குற்றத்தில் சிக்கித் தூக்குத் தண்டனை பெற்றனர். அப்பெண் அரசனிடம் அந்த மூவரையும் தவிரத் தனக்கு ஆதரவு யாரும் இல்லை என்று முறையிட்டாள். அரசன், "இவர்கள் மூவரில் ஒருவரை விடுதலை செய்கிறேன்; உனக்கு யார் வேண்டும்?" என்று கேட்டான். அப்பெண் "அண்ணன் வேண்டும்" என்றாள். அரசன் காரணம் கேட்டான். "கணவன் இல்லை யென்றால் வேறு ஒருவனைத் தேடிக்கொள்ளலாம். பிள்ளை இல்லை என்றால் வேறு பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால். இனி வேறு ஒருவன் என் உடன் பிறக்க முடியுமா?" என்று சொன்னாள். இது அவர்கள் பண்பாடு. தமிழ்நாட்டுப் பெண்ணாயிருந்தால் இந்நிலையில் கணவனைத்தான் கேட்டிருப்பாள்.) ஆடவர்கள் காமக்கிழத்தியரோடு உறவு கொள்வதும், கள் அருந்துவதும் பழங்காலத்தில் இருந்தன. எனினும் அவை குற்றஉணர்வுடனேயே செய்யப்பட்டன. விருந்தோம்பல் என்பது இல்லறக் கடமைகளில் தலை சிறந்ததாகக் கொள்ளப்பட்டது. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழும் காலங்களில் அவர்களுக்கு விருந்தோம்பும் வாய்ப்பு இல்லை. அத்தகைய வீடுகளில் விருந்தினர் உண்பதில்லை. மருதாணி வைத்துக்கொள்ளுதல் மகளிர் அழகு படுத்திக் கொள்ளும் முறைகளில் ஒன்று. பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் இருபாலாரிடமும் உள்ளது. வீடுகளுக்குத் தெருத்திண்ணை வைத்துக் கட்டுதல், வாயிற்காலில் சிற்ப வேலைப்பாடுகள் செய்தல் ஆகிய பழக்கங்கள் தமிழ்நாட்டில் பரவலாக உண்டு. ஆனால் நகரங்களில் இன்று இவை மாறிவருகின்றன.

கூட்டுக் குடும்பமாக வாழ்தல், மணமான பெண்ணுக்குப் புகுந்த வீடே உரிமையானதாக இருப்பினும், பிறந்த வீட்டின்மீது பற்று நீங்காமல் வாழ்தல். சாதி உயர்வு தாழ்வுகளை மதித்தல், சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளுதல், பெண் பார்த்துப் பரியம் போட்டுத் திருமணம் செய்தல், (இன்று இது மாப்பிள்ளை பார்த்து நன்கொடை கொடுத்து மணம் செய்தலாக மாறிவிட்டது). தமக்கை மகள், அத்தை மகள், மாமன் மகள்களை மணந்துகொள்ளும் முறைப்பெண்ணாகக் கருதுதல், தலைப்பிள்ளைப்பேற்றைத் தாய்வீட்டில் வைத்துக்கொள்ளுதல், ஆடித்திங்களில் இளைய இணையர்கள் பிரிந்திருத்தல், ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனித் திங்கள்களில் திருமணம் நடத்துவதைத் தவிர்த்தல், விடிகாலையில் மகளிர் தெருவாயிலில் சாணமோ, நீரோ தெளித்துக் கோலம் போடுதல், மார்கழித்திங்களாயின் கோலத்தின்மேல் பூசணிப்பூ வைத்து அழகு செய்தல், அறைச் சுவர்களைச் சாரப் பழங்கலம் அடுக்கிவைத்தல், சிலரது பார்வையால் தீமை நேரும் என்று அஞ்சிக் கண்ணேறு கழித்தல், பச்சைத் தென்னங்கீற்றைமுடைந்து அதில் பிணத்தைக் கிடத்திப் பாடையில் வைத்தல், பிணத்துக்குத் தீ மூட்டும்போதோ, புதைக்கும்போதோ நெருங்கிய உறவினர்கள் வாய்க்கரிசி போடுதல் முதலியன தமிழரிடம் உள்ள பழக்கவழக்கங்களிற் குறிப்பிடத்தக்கவை.

நம்பிக்கைகள் : வேப்பமரமும் அரசமரமும் இணைந்து வளர்ந்திருந்தால் அங்கே தெய்வம் இருப்பதாக நம்புதல், பிள்ளை இல்லாதவர்கள் அரசமரத்தைச் சுற்றுதல், நல்லநாள், இராகுகாலம், குளிகைகாலம் பார்த்தல், சகுனம் பார்த்தல், கனவுகளுக்கு விளைவு உண்டு என்று நம்புதல், பிறந்த குழந்தைக்கு மண் பொட்டு இடுதல், மணம் முடிந்து வரும் பெண் வலக்காலை எடுத்துவைத்துப் புக்ககத்தில் நுழைதல், தும்மினால் வாழத்துதல், கணவனை இழந்தோர் மஞ்சள் பூ, பொட்டு, வளையல்களை விலக்குதல், ஆண்கள் புதன் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகல், கிரகணம் பிடித்திருக்கும் நேரத்தில் உணவு உண்ணாமை, அப்போது, கருவுற்ற பெண்கள் துரும்பைக் கிள்ளினால் கருச் சிதையும் என்றெண்ணுதல், சனிக்கிழமைகளில் யாராவது இறந்துவிட்டால், 'சனிப்பிணம் துணை தேடும்' என்று பாடையில் ஒரு கோழியைக் கட்டிச் சென்று பிணத்துடன் புதைத்தல் முதலியன சில நம்பிக்கைகள்.

புகுத்தப்படும் அயற் பண்பாடுகள்: அண்மைக்காலமாகச் சில அயற்பண்பாடுகள் தமிழரிடையே புகுத்தப்பட்டுவருகின்றன. பிள்ளையார் சதுர்த்தியில் 30அடி, 40அடி உயரமுள்ள பிள்ளையார் உருவம் செய்து தெருத்தெருவாக இழுத்துவந்து, அதைத் துண்டு துண்டாக வெட்டி நீரில் எறிவது, 60அடி. 70அடி உயரத்தில் ஆஞ்சநேயர் கற்சிலை செய்து, சாலையோரங்களில் நிறுவி, அதன்மேல் ஆயிரக்கணக்கான குடங்கள் பாலை ஊற்றி முழுக்காட்டுவது, கிறித்து ஆண்டுப் பிறப்பில் இந்துக்கோயில்களில் இரவெல்லாம் வழிபாடு செய்வது, சோதிடப்பொருத்தம் என்ற பெயரில் குழந்தைகளுக்கும் நிறுவனங்களுக்கும் கண்ட கண்ட அயல்மொழிப் பெயர்களை வைப் பது, வாத்து சாத்திரம் என்ற பெயரில் குடியிருக்கும் வீட்டை இடித்து வாயிலை மாற்றி அமைப்பது முதலிய பழக்கங்கள் தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்குமுன் இல்லாதவை.

விரவிவரும் வேண்டாத பண்பாடுகள்: மக்களின் அறியாமையாலோ மூட நம்பிக்கையாலோ, தமிழ்ப்பகைவர்கள் திட்டமிட்டுப் புகுத்தியதாலோ தமிழர் வாழ்வில் வேண்டாத பண்பாடுகள் விரவிவருகின்றன. சாதிமத வேறுபாடுகள் பாராட்டுதல், தலைமை வழிபாடு, திரையுலகத்திற்குச் சிறப்பிடம் தருதல், தாய்மொழியைப் புறக்கணித்து அயல்மொழிகளை உயர்வாக மதித்தல் முதலிய வேண்டாத பண்பாடுகள் வளர்ந்து வருகின்றன. இதன் விளைவாக, இன்று தமிழர் பேச்சில், But, So, O.K., Sorry,Thanks, Super முதலிய ஆங்கிலச்சொற்கள் இயல்பாகத் தமிழ்ச்சொற்களைப்போலக் கலந்து பேசப்படுகின்றன. இதன் விளைவாக ஆனால், அதனால், சரி முதலிய தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்துவருகின்றன. மாறன், செழியன், மலர்விழி, மான்விழி போன்ற தமிழ்ப்பெயர்களை விட்டு, ப்ராணேஷ், விஸ்வாஷ், ஸுப்ரஜா. ஷீலாப்ரியா போன்ற வடமொழிப் பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைத்து மகிழ்கிறார்கள். தம் குழந்தைகள் தமிழில் பேசுவதை விரும்புவதில்லை. அதனால் இன்றைய குழந்தைகளுக்குத் தமிழில் ஒன்று இரண்டு எண்ணத் தெரிவதில்லை. ஞாயிறு திங்கள் தெரிவதில்லை. சிவப்பு, கருப்பு, உடுப்பு, செருப்பு என்பன போன்ற எளிய சொற்களையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தாத்தா, பாட்டி, மாமா, அத்தை போன்ற முறைப்பெயர்கள் கூடத் தெரிவதில்லை. தன் தலைவர்க்கோ நடிக நடிகையர்க்கோ ஒரு துன்பம் நேரிட்டால் அதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளுதல், அவர்களுக்குத் தன் அன்பைக் காட்ட விரலை நறுக்கிக்கொள்ளுதல், முதலிய செயல்கள் தமிழ்நாட்டில் மட்டுமே நடந்து வருகின்றன.

மறைந்துவரும் நம் பண்பாடுகளைக் காப்பாற்ற என்ன செய்யலாம்?: இப்போதுள்ள நிலையை ஆய்ந்து யுனெசுகோ என்னும் உலக நிறுவனம் இந்த நூற்றாண்டில் தமிழ் மொழி மறைந்துவிடும் என்று கூறியிருக்கிறது. இதே நிலைமை நீடித்தால், தமிழ்ப்பண்பாடும் முற்றாக அழிந்து, தமிழர்கள் முகவரியற்றுப் போவார்கள் என்பது உறுதி. இதுபற்றி நாம் உண்மையாகவே கவலைப்படுவதாக இருந்தால், 'கன்னித்தமிழ்', 'காலங்கடந்த தமிழ்' என்றெல்லாம் வாய்வீச்சு வீசும் ஆரவாரங்களை நிறுத்திக்கொண்டு பின்வரும் பணிகளில் இன்று முதலே ஈடு படலாம்:

1. இயன்ற வரை அயல்மொழி கலவாமல் தமிழ் பேசுவோம்; எழுதுவோம்.

2. நமது பெயர் பிற மொழியில் இருநóதால், அதைத் தமிழாக்கிக்கொள்வோம்; அல்லது வேறு தமிழ்ப் பெயர் வைத்துக்கொள்வோம். குழந்தைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைப்போம்.

3. பிற மொழியில் ஒப்பமிடும் வழக்கம் இருந்தால் அதை ஒழித்துத் தமிழில் ஒப்ப மிடுவோம்.

4. நமது பெயரின் தலைப்பெழுத்தைத் தமிழில் போடுவோம்.

5. நம் வண்டிகளின் எண்ணுப்பலகையில் தமிழில் எண்களை எழுதுவோம்.

6. தொலைபேசி அழைப்புக்கு "ஹலோ" என்று விடை சொல்வதை விட்டு "வணக்கம்" என்று சொல்வோம்.

7. திருவள்ளுவர் ஆண்டையும் தமிழ்த் திங்கட்பெயர்களையும் பயன்படுத்துவோம்.

8. நம் குடும்ப நிகழ்ச்சிகளில் ஆரியச் சடங்குகளையும், வடமொழி மந்திரங்களையும் ஒழிப்போம்.

9. திருக்கோயில் வழிபாட்டில் தமிழில் போற்றிகள் சொல்லச் செய்வோம்.

10. தீபாவளி, பிள்ளையார் சதுர்த்தி முதலிய அயற்பண்பாட்டுப் பண்டிகைகளைக் கொண்டாடுவதைக் கைவிடுவோம்.

11. தமிழ் இசை பயில்வோம்; நம் குழந்தைகளுக்குப் பயிற்றுவோம். தமிழில் பாடுவோரைத் தட்டிக்கொடுப்போம்; பிற மொழியில் பாடினால் தட்டிக் கேட்போம்.

12. நாம் தமிழர்களாகப் பிறந்ததற்காகப் பெருமைப்படுவோம். நம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்வோம்; நம்மை 'இந்து' என்று சொல்வதை ஏற்க மறுப்போம்.

இந்நெறிகளை நாம் அனைவரும் கடைப்பிடித்தால், எஞ்சியிருக்கும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாக்கலாம்; இழந்த பண்பாடுகளையும் மீட்கலாம். நாம் வாழும் சூழல் எத் தகையதாக இருந்தாலும், நமது பண்பாட்டின்மீது மதிப்புக்கொண்டு, அதன் தொடர்பை விடாது வாழ்வோம். நீர்நிலையில் உள்ள தாமரையைக் கதிரவன் தந்தையாகவும், தண்ணீர் தாயாகவும் இருந்து வளர்க்கின்றன. எனினும், அதன் வேரைப் பிடுங்கி நீரிலேயே விட்டால், தாயாகிய தண்ணீரே அதை அழுகச்செய்து கொன்றுவிடும்; கரையில் எடுத்துப் போட்டால், தந்தையாகிய கதிரவனே அதனைக் காயச் செய்துகொன்றுவிடும். தாமரை மண்ணில் வேரூன்றி இருக்கும் வரையில்தான் உயிர்வாழ முடியும். அது போல் மக்களினம் தம் பண்பாட்டில் பற்று விடாமல் இருக்கும் வரையில்தான் தனி இனமாக வாழமுடியும். எனவே, நாமும் நமது பண்பாட்டைப் பாதுகாத்து, அதன் தொடர்பை விடாமல் 'என்றும் உள தென்தமிழ்' இனமாக உலகில் இன்புற்று வாழ்வோமாக !

சங்குவெண் தாம ரைக்குத் தந்தைதாய் இரவி தண்ணீர். அங்குஅதைக் கொய்து விட்டால், அழுகச்செய்து அந்நீர் கொல்லும். துங்கவன் கரையில் போட்டால், சூரியன் காய்ந்து கொல்வான். தங்களின் நிலைமை கெட்டால், இப்படித் தயங்கு வாரே!
விவேகசிந்தாமணி-14.

முனைவர் இரா. திருமுருகன், புதுச்சேரி, இந்தியா
மின்னஞ்சல் : irathirumurugan@yahoo.co.in

22.8.08

மக்கள் கணினி

விளக்கம்
 • சிற்றூர் தோறும் கணினிக்கல்வியை தமிழ் மொழியில் வழங்குதல் கணினி வழி தமிழ் மொழியை வழுங்குதல்.
 • சிற்றூர் வாழ் ஏழை எளியவர்களுக்கு கணினியின் மாயையைதகர்த்தெறியவும்,கணினியும் கைப்பேசிப்போன்றுதான் என்கிற மனநிலை உருவாக்கும் திட்டம்.
 • தமிழில் தகவல் தொழிலநுட்ப சேவையை சிற்றூர் மக்களுக்கு அளிக்கவும் வழிசெய்யும் திட்டம்.
செயற்பாடுகள்:
 • சிற்றூர்தோறும் கணினிக்கல்வியை தமிழ் மொழியில் வழங்குதல்.
 • சிற்றூர்தோறும் கணினிப்பயின்ற இளைஞர்களை அல்லது தன்னார்வலர்களை க்கொண்டு கல்வியினை வழங்குதல்.
 • கணினிப்போன்ற கருவிகளை கொடையர்கள்,பள்ளிக்கல்லூரிகள் போன்றோரிடம் பெற்று சிற்றூர்களில் கணினியைக்கொண்டு செல்லுதல்.
 • நேரடி களப்பயிற்சி மூலமோ இணைய வழியோ தன்னார்வலர்களுக்கு பயிற்சியளித்தல்.
 • பயிற்றுனர்/தன்னார்வலர்,தமது சிற்றூரில் நாள்தோறும் குறிப்பிட்ட கால அளவைல் பிள்ளைகளுக்கு பயிற்றுவித்தல் அல்லது தானே கற்றலுக்கு வழிக்காட்டுதல்.
 • பல்லூடக வசதிமூலம் விளையாட்டு மூலம் பாடம் பயிற்றுவித்தல்.
 • கணினியை இயக்கக்கற்றுக்கொண்டபின்,தமிழ்க்கல்வியளித்தல்.
 • கலை,இலக்கியம்,பண்பாடு,சமூகம்,அறிவியல் குறித்த பல்லூடக காட்சிமூலமோ தமிழ் மரபு கல்வி வழங்குதல்.
 • இணைய நடுவம் மூலம் பாரடங்களை அனைத்து சிற்றூர் கணினிகளுக்கும் பகிர்ந்தளித்தல்.
 • குறைந்தளவு , சிற்றூரில் உள்ள அனைத்து பிள்ளைகளும்,வாய்ப்பிருந்தால் பெரியபவடர்களும் கணினியின் தொடுதலையும்,மாயையும் ஒழித்தவர்களாகவும் உருவாக்க வேண்டும்.பின்னர்,படிப்படியாக அவர்களின் விருப்பம்போல் பயிற்றுவிக்க வேண்டும்.
 • தமிழகத்தின் சில நகரங்களில்,பேறரூடராட்சிகளில் தொண்டு நிறுவனங்கள் ம்Uலம் குறைந்த செலவில் கணினிக்கல்வை வழங்குகிறார்கள். ஆனால்,அங்கு சிற்றூர் பிள்ளைகள் முழுதும் பயன் பெறமாட்டார்கள் என்பது உறுதி.
 • நாம் எல்லா பகுதிகளையும் ஒருங்கிணைக்க முடையும்.
 • நம் ஊரில் தனி நபர் முன்னேற்றம் கணினி வர எட்டவில்லை.ஆளுக்கொரு கணினி என்ற நிலை ஏற்படும் போது மட்டுமே,இணைய வழி கல்வியை அளிக்க முடியும்.
 • தமனியார் பள்ளிகளில் இத்தகைய வசதியை ஓரளவு மணவர்களுக்கு அளிக்கிறார்கள். ஆனால், அரசுப்பள்ளிகள் நிலை கேள்விக்குறியே.!
 • ஆகையால் ஊருக்கு கணினி என்ற நிலையை நாம் முன்னெடுத்து செல்வோம். கணினி ம்Uலம் அவர்கள் வாழ்க்கையை , வாழ்க்கை கல்வியைம, உலக அறிவை,அறிவியல் பாங்கை அறிய செய்வோம்.
 • நம் தமிழர் எல்லாமறிந்தவர்களாய் உருவக்குவோம்.
 • நம்மோடு உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்களையும்,அவர்தம் திட்டங்களையும் ஒருங்கிணைத்து,ஒருக்க்Uட்டுத்திட்டத்தை நிலை நிறுத்தி செயல்படுவோம்.செயல்படுத்துவோம்.
 • தமிழில் தகவல் தொழில்நுட்பத்தை உருவாக்குவோம். தமிழருக்கு அதனை வழங்கிடுவோம்.
இணையைக்கல்விக்கரு:
 • இத்தகைய முயற்சியில் சுவிசு நாட்டைச்சார்ந்த STEPITH அமைப்பு முயன்றிருக்கிறது. ஆனால், அது இப்போது எங்குள்ளது என்பதே தெரியவில்லை.
 • 'இலக்கப்பாடி' (Digital Village) திட்டம் இணையவழி கணினிக்கல்வியளிக்கைறது.அது சார்ந்த திட்டங்களும் உள்ளே வைத்திருக்கிறது.
உதவிக்கரு:
 • கல்லூரி : கணினி,தொழில்நுட்பம்,மாணவர்கள்,ஆசிரியர்கள்.
 • பள்ளிகள் : பாடம் நடத்த இடம்.
 • ஊர்மன்றம் : மின் வசதி,ஒத்துழைப்பு.
 • கொடையர்கள் : பொருளாதார யதேவைகள், கணினி.
 • தன்னார்வலர்கள் : பயிற்றுவிக்க.

தமிழ்க்கல்வி:

பள்ளிசாரா தமிழ்க்கல்வி:
 • ஆரம்பநிலை தமிழ் கற்றல்.
 • சங்க இலக்கியங்கள் கற்றல்
 • கலை இலக்கியம் பண்பாடு அறிதல்.
 • கணினிவழி/இணைய வழி பல்லூடக வசதியுடன் தமிழ் கற்றல்.
 • இலக்கணம் கற்றல்.
பள்ளிச்சார் தமிழ்க்கல்வி:
 • இலக்கிய மன்றங்கள் உருவாக்குதல்
 • தமிழ் மொழிகசார் பயிற்சியளித்தல்.
 • பல்லூடக விளக்கப்படங்கள் காண்பித்தல்.
 • மொழிசார் அறிவியல் வளர்ச்சிக்கு ஊக்குவித்தல்.

கணினிக்கல்வி:
 • தனிநபர் கணினிப்பயிற்சியை ஊக்குவித்தல்.
 • சிற்றூர்புற மக்களுக்கு கணினிப்பயிற்சியளித்தல்.
 • தமிழ் வழியில் கணினி அறிவித்தல்.
 • பள்ளிக்கல்லூரிகளில் அறிவியற்றனமிழ் மன்றங்கள் உருவாக்கி,தமிழ் மூலம் அறிவியலும்,அறிவியல் மூலம் தமிழும் வளர்ச்சிக்காண செய்தல்.
 • பருவந்தோறும் பள்ளிக்கல்லூரிகளில்,இளைஞர்களுக்கு கணினி, அறிவியல், தமிழ் குறித்த விழிப்புணர்வு விளக்கப்படம் காட்டுதல்.
 • சிற்றூர்புற கணினிபயிற்சி நடுவத்தை அமைத்தல்.
 • தமிழ் மென்பொருட்களை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல்.
 • பள்ளிக்கல்லூரிகள் தோறும் தமிழ் மென்பொருள் தேவையின் விழிப்புணர்வை மாணவர்களுக்கு கருத்தரங்கம் மூலம் வழங்குதல் .
 • இளம் அறிவியல்/தொழில்நுட்பம்/பொறியியல் அறிஞர்களை மொழிசார் கணினிநுட்பத்தை உருவாக்கும் ஆற்றலை இனங்காண முயற்சி செய்தல்.
 • தமிழ்த்துறை மாண்வர்களுக்கு கணினியின் பயன்பாட்டை கற்பித்தல்.மேற்படி ஆலோசனைகள் வேண்டுகிறேன்:
வெ.யுவராசன்,
YourRaajV@Gmail.com
www.thamizhthottam.blogspot.com

15.8.08

மின்தமிழால் மண்தமிழ் காப்போம்

அன்பிற்கினிய நண்பர்கள் பார்வைக்கு வணக்கம்.

அளவிட முடியாத பழமைவாய்ந்த நம் மொழி,காலத்தால்,பல மாறுதல்களை கண்டு, சிதைந்த நிலையில் தமிழ் இனத்தால் பின்பற்றப்படுகிறது.இச்சிதைவு நிலை களையவே மின்னிலும் மண்ணிலும் இயக்கங்களும் போராட்டங்களும்.!

மின்னில் நாம் வலுவாகவே பதிந்து வருகிறோம். இனி பயமில்லை,எப்படியாவது தமிழ் வளர்ச்சி கண்டுவிடலாம். ஆனால், மண்ணில்தான் பெருஞ்சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

தமிழ்மண் காக்கப்படவேண்டும்.சுரண்டல்களுக்கும்,சீரழிவுக்கும் ஆளாக்கப்படக்கூடாது.இதன் பொருட்டு மின்னால் மண்ணின் தமிழ் வளர்ச்சி காண திட்டமொன்று தீட்டியிருக்கிறேன் . நண்பர்கள் பரிசீலித்து,செயற்படுத்த பரிந்துரைக்கவும்.

சிற்றூர் தோறும் ஏழை எளிய மாணவர்களுக்கு இருவழியில் கல்வியளிக்கலாம்.
அ. தமிழ் வழி கணினிக்கல்வி
ஆ.கணினி வழி தமிழ்க் கல்வி


<> தமிழ் வழி கணினிக்கல்வியானது,இன்று நம் சிற்றூர்புற மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு பெரும் பயனளிக்கும் . தன் தாய்மொழியிலேயே உலகம் போற்றும் ஒரு கருவியின் பயன்பாட்டை அறியும் வாய்ப்பு அவர்களுக்கு கிட்டும்.
ஆங்கில மாயையை உடைத்தெறிந்து,தமிழால் வழங்கும் போது ஆர்வம் மிகும்.

<> தமிழை மதிப்பெண் பாடமாக மட்டும் போற்றும் பள்ளிகளால்மாணவர்கள் தமிழ் மொழியை முழுமையாக கல்லாநிலை உருவாக்குகிறது.தெளிந்த விளக்கத்துடன் பல்லூடகவழி கணினியில் வழங்கும் போது ,தானே கற்றல் மூலம் சிக்கலின்றி தமிழ்மொழி அறிவர்.

இதனோடு, தமிழ்மரபு,கலை இலக்கியம் பண்பாடு போன்றவற்றை நாம் கற்பிக்கமுடியும்.
இயல் இசை நாடகம் அறிவியல் ஆகிய நான்கு தமிழும் கணினி வழி அறிதலை நாம் ஏற்படுத்த வேண்டும்.

செயல்வடிவம்.

அ. சிற்றூர் தோறும் ஓர் ஆர்வலரை கண்டறிந்து , அவர்மூலம் நம் செயல் திட்டங்களை செயற்படுத்துதல்.
ஆ. அந்தந்த பகுதியிலுள்ள கல்லூரிகள்/பள்ளிகளின் உதவியோடு கணினி கல்வி தர முடியும் அவர்கள் உதவியால் கணினி பெற்று அக்கல்விநிலைய (நாட்டுநல பணித்திட்ட) மாணவர்கள் துணைக்கொண்டு இப்பணியை மேற்கொள்ளலாம்.

இ. நம் நாட்டில் ஒவ்வொரு சிற்றூர்(ஊராட்சி) மன்றத்திலும் கணினி வழங்கப்பட்டுள்ளது.அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று,அக்கருவிகள் மூலம் எளிமையாக இணைய வழி பயிற்சியளிக்க முடியும்.
(அனைத்து வசதிகள் கொண்ட ஊராட்சி கணினிகள் பயன்படுத்தாது பாழடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது)
இது நான் தயாரிக்கும் "மக்கள் கணினி" திட்டப்பணியின் சுருக்க விளக்கம்.
இதனை செயற்படுத்த இணைவோம் இயற்றுவோம்!!!

14.8.08

உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன்

(நன்றி: நக்கீரன் 23.04.2008 வழிநிலை: தமிழ்க்காவல்)
(பழைய சேதியானாலும், இணைய நண்பர்களுக்காக.......)

லகில் தோன்றிய முதல் மனிதனின் கலப்பற்ற நேரடி வாரிசு, உசிலம்பட்டியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழன் விருமாண்டியே. உலக மரபணு ஆய்வாளர்கள் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் கூடி, இந்த ஆராய்ச்சி முடிவை அறிவிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதிமனிதனின் மரபணுவை (எம் 130) கொண்டிருக்கும் விருமாண்டியை நேரில் சந்திப்பதற்காக, மதுரையிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள சோதி மாணிக்கம் என்ற கிராமத்திற்குச் சென்றோம்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அழகிய கிராமம் சோதி மாணிக்கம். ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் நிறைந்த செம்மண்பூமி வீட்டருகே தோட்டத்தில் இளநீர் வெட்டிக்கொண்டிருந்தார் விருமாண்டி.

"இந்த 7 ஆண்டாக நானும் என் குடும்பமும் சந்திச்ச அவமானங்களுக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் இப்பதான் விடிவு கிடைச்சிருக்கு" மனம் திறந்து பேசத் துவங்கிய விருமாண்டி. நமக்கும் ஓர் இளநீரைக் கண் திறந்து நீட்டினார். "முதல்ல இதைக் குடிங்க அப்புறம் பேசலாம்" என்றவர் தன் தந்தை ஆண்டித்தேவரையும் தாய் அமராவதியையும் நமக்கு அறிமுகப்படுத்தினார். மனித குல மரபணு மற்றும் காசநோய் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த மதுரைக் காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிச்சையப்பன் குழுவினர் 1996ஆம் ஆண்டில், உசிலம்பட்டித் தேவர் கல்லூரி மாணவர்கள் சிலரின் குருதியை ஆய்வு செய்தனர்.

"மற்ற மாணவர்களைப் போல, ஏதோ ஆராய்ச்சி செய்றாங்க என்ற எண்ணத்தோடுதான் நானும் குருதி கொடுத்தேன். 5 ஆண்டு கழிச்சுதான் முடிவு வந்திச்சு. எம் 130 என்கிற மரபணு உன் உடம்புல இருக்கு. இதுதான் உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணுன்னு சொன்னாங்க. எனக்கு முதல்ல ஒண்ணும் புரியலை. ஆனால் அக்கம் பக்க மக்கள் சொந்தம் சுறுத்துக்கள் எல்லாரும் நம்ம விருமாண்டி உடம்புல குரங்கு ரத்தம் ஓடுதாம். நம்ம விருமாண்டி ஆப்பிரிக்காகாரனுக்குப் பிறந்தவனாம் னு ஆளாளுக்கு ஆள் ரொம்ப கேவலமா பேச ஆரம்பிச்சாங்க” நெற்றியில் வழிந்த வியர்வையை வழித்தபடி தன் பெற்றோரைப் பார்த்தார் விருமாண்டி.

விரல்களால் வகிடெடுத்து வாரி முடித்த கொண்டை, கல் பதித்த இரட்டை மூக்குத்தி. வரப்பில் உட்கார்ந்தபடி பேசத் தொடங்கினார் விரமாண்டியின் தாய் அமராவதி. "நான் பெத்த மகன் உடம்புல அவன் அப்பன் ரத்தம் தானே ஓடணும். அவன் பாட்டன்... முப்பாட்டன் ரத்தம் தானே ஓடணும்... ஒரு பிறமலை கள்ளனுக்குத் தான் நான் புள்ளைப் பெத்தேன். ஆனா ஊர்ல இருக்கிற பலபேரும் என் காதில படுற மாதிரி டேய் கொரங்குக்குப் புள்ளைப் பெத்தவ போறாடா. ஆப்பிரிக்கக் கறுப்பனுக்கு புள்ளைப் பெத்தவ போறாடானு பேசுனாங்க. எப்பிடி இருக்கும் இந்தக் கள்ளச்சி மனசு? என்ன பாடு பட்டிருப்பேன்... யாரு பேச்சையும் நம்பிறாதீய. அந்த பதினெட்டாம்படியான் மேல சத்தியம் பண்ணிச் சொல்றேன். உங்களுக்குப் பொறந்த மகன் தான் விருமாண்டி. அப்பிடீன்னு எம்புருஷன்கிட்ட எத்தனை நாள் சண்டை போட்டிருப்பேன்... அப்பாடா... இப்ப அந்த அமெரிக்க விஞ்ஞானி வந்து சொன்ன பிறகுதான் நானும் என் குடும்பமும் தலைநிமிர்ந்து நடக்கிறோம்" விருமாண்டியின் தாய் அமராவதியின் முகத்தில் இப்போது பெருமிதம் மின்னுகிறது.

"என்னய்யா நீங்க ஒண்ணம் பேசாம இருக்கீங்களே?” விருமாண்டியின் தந்தை ஆண்டித் தேவரின் முகத்தைப் பார்த்தோம்.

"மத்தவுக விமர்சனம் நாலஞ்சு வருஷமா எங்களை பெரும்பாடு படுத்திப்பிடுச்சு. புயலுக்கு பிறகு அமைதிங்கிற மாதிரி இப்ப ரொம்ப பூரிப்பா இருக்கோம். என் மகன் விருமாண்டியால எனக்கு இப்ப எவ்வளவு பெருமை? ஊர் தெரியாத, பெயர் தெரியாத, மொழி தெரியாத பிற நாட்டானெல்லாம் கேமராவை தூக்கிட்டு வந்து பேட்டி எடுக்கிறாôன். வெள்ளைக்காரர் ஸ்பென்சர் வெல்ஸ் என்பவர் குழுவாக எந்து என் வீட்ல 10 நாள் தங்கியிருந்து ஆராய்ச்சியெல்லாம் செஞ்சிட்டு, உலகத்தின் முதல் மனித வம்சம் உங்க குடும்பம். அதுக்காக பெருமைப்படுங்கய்யானு சொல்லிட்டுப் போனார். உண்மையில் எனக்குப் பெருமைதான்யா உலகில் தோன்றிய முதல் மனித இனம் தமிழினம். முதல் குடும்பம் எங்க குடும்பம்ங்கிறது பெருமைதானே” இடுப்பில் வேட்டியும் தோளில் துண்டுமாக வியர்வை வடிய நின்ற ஆண்டித்தேவரின் கம்பீரமான முகத்தில் மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது.

1996இல் உசிலம்பட்டித் தேவர் கல்லூரியில் மரபணு மற்றும் காசநோய் ஆய்வை மேற்கொண்ட மதுரைக் காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் மரமணுப் பிச்சையப்பன், உசிலம்பட்டி மாணவர் விருமாண்டியின் உடலில் தொன்மையான எம்.130 என்ற மரபணு இருப்பதை மதுரைப் பல்கலைக்கழக வலைப்புலத்தில் வெளியிட்டார். ஆப்பிரிக்காவிலும் ஆத்திரேலியாவிலும் மனித இனத்தின் மரபணு ஆராய்ச்சியில் தீவிர மாயிருந்த ஸ்பென்சர் வெல்சு இந்த வலைப்புல முடிவைப் பார்த்ததும் உற்சாகம் கொண்டார். முதல் மனிதன் ஆப்பரிக்காவில் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு.

ஆப்பிரிக்க மனித இனத்தின் மரபணு உசிலம்பட்டியில் ஒரு தமிழனுக்கு இருப்பதைக் கண்ட டாக்டர் ஸ்பென்சர் வெல்சு, உடனே புறப்பட்டுத் தமிழகம் வந்தார். "உசிலம்பட்டிப் பகுதியில் பல கிராமங்களிலும் எங்களோடு சேர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டார். சோதிமாணிக்கம் கிராமத்தில் 15 குடும்பங்களில் ஆய்வுசெய்தோம். எல்லாரும் விருமாண்டியின் சொந்தக்காரார்கள்தான். அவர்கள் உடம்பிலும் ஆப்பிரிக்க ஆதிமனிதனின் உடம்பிலுள்ள எம் 130 வகை மரபணு. விருமாண்டி உடம்பிலும் உறவினர்கள் உடம்பிலும் உள்ள மரபணுபின் மூலம் முதல் மனித இனம் இந்தியாவில், அதுவும் தமிழகத்தின் தென்பகுதியில் இன்னும் நிலைத்து வாழ்ந்து கொண்டிருப்பது உறுதியாகி விட்டது” என்கிறார் மரபணுப் பேராசிரியர் பிச்சையப்பன். பேராசிரியர் பிச்சையப்பன் தனது ஆராய்ச்சியை தொடர்வதற்காகச் சுமார் 6 கோடி ரூபாய் நிதியை டாக்டர் ஸ்பென்சர் வெல்சு அளித்திருக்கிறார்.

வரும் சூன் மாதம், இங்கிலாந்திலுள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் நடக்கவிருக்கும், உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில், மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் சோதிமாணிக்கம் என்ற கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் செய்தியை அனைவருமறிய அறிவிக்க இருக்கிறார்கள்.

மனிதன் முதலில் தோன்றிய நிலம் தமிழ்நிலம். முதலில் உருவான மொழி தமிழ்மொழி. முதலில் உருவாக்கப்பட்ட பண்பாடு தமிழ்ப்பண்பாடு என்ற வரலாற்று உண்மை, விருமாண்டியின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

13.8.08

எழுத்துக்கும் கற்பு தேவை!

எழுதியவர்: தி. இராசகோபாலன்
பிறப்பில் கலப்படம் இருக்கலாம்; ஆனால், படைப்பில் கலப்படம் இருக்கக் கூடாது. பிறப்பில் ஏற்படும் கலப்படத்தால் பாதிக்கப்படுபவர்கள், தனிமனிதர்களே தவிர சமூகம் இல்லை. ஆனால், படைப்பில் ஏற்படும் கலப்படத்தால், தலைமுறைச் சிந்தனையே பாதிக்கப்படும். சிருஷ்டி ஆன்மாவின் வெளிப்பாடு. ஆன்மாவின் வெளிப்பாட்டிலே பிறக்கும் இலக்கியங்கள் சாகா வரம்பெற்றவை. அதிலேயும் கலப்படம் என்பதைக் கேட்கும்போது, அறிவுஜீவிகள் வெட்கத்தால் புழுங்குவதைத் தவிர வேறு வழி ஏது?

அண்மையில் வேங்கடவன் பல்கலைக்கழகத்து வேதியியல் பேராசியர் ஒருவர் செய்த ஆய்வுத் திருட்டை, நெதர்லாந்து நாட்டின் "எல்செல்வியர் குழுமம்' அகில உலகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. எழுபது ஆய்வுக்கட்டுரைகளுக்குச் சொந்தக்காரர் என உமை கொண்டாடும் அப்பேராசியர், ஏற்கெனவே ஜப்பானிய இதழ்களில் பிரசுரமான கட்டுரைகளை எடுத்துத் தமது பெயல் சாசனம் செய்ய முயன்றபொழுதுதான், டெக்சாஸ் பல்கலைக்கழகத்துப் பேராசியர் புர்னேந்ருதுதாஸ் குப்தாவால் கையும் களவுமாகப் பிடிபட்டார். இதனைச் செவிமடுத்த ஆராய்ச்சி உலகமே நாணத்தால் நடுங்கியது.

படைப்புத் திருட்டுகள் இன்று நேற்றல்ல; படைப்புக் காலந்தொட்டே நிகழ்ந்து வருகின்றன. தமயந்தி சுயம்வரத்தின்போது, தமயந்தியை அடைவதற்காக ஒரு டஜன் தேவர்கள் அசல் நளன் போலவே வடிவெடுத்து கீழே இறங்கியிருக்கின்றனர். அருணகிநாதர் இலக்கியத் திருடர்களைக் கடுமையாகச் சாடுவதிலிருந்து, அவரது காலத்தில் இது பெருவழக்காக இருந்திருக்கும் போல் தெகிறது.

"முதுமொழிகளை நாடித் திருடி, ஒருபடி நெருடிக் கவிபாடித் தியும் சில புலவர்'' என்றும் ""தெயும் அருமை பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடி'' எனவும் அருணகியார் இனங்காட்டுவதிலிருந்து, இலக்கியத் திருட்டின் பாரம்பயம் தெகிறது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை தம் காலத்திலிருந்த கவிதைத் திருட்டை நாடகப் பாங்கில் நகைச்சுவை மிளிர அம்பலப்படுத்துகின்றார்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளையிடம் ஒரு கவிதைக் களவாடி வந்து, கம்பன் பாட்டொன்றைத் தம் பாட்டென்று சொல்லுகிறார். அதற்கு அவர் "இது கம்பருடைய பாட்டாயிற்றே' என்றார். அதற்கு அந்தக் களவாடி, "இது என் பாட்டுத்தான்! இப்பொழுது உங்கள் சட்டைப் பையில் நூறு ரூபாய் இருக்கிறது. அதை நான் எடுத்துக் கொண்டால், உங்கள் பையில் அந்த நூறு இருக்காதல்லவா! அதைப்போல கம்பராமாயணத்திலிருந்து இந்தப் பாட்டை நான் எடுத்திருந்தால், அங்கு அப்பாடல் இருக்க முடியாதே! இதோ பாருங்கள்! கம்பனில் அப்பாட்டு அப்படியே இருக்கிறது'' என்கிறார், சாமர்த்தியமாக. இலக்கியத் திருட்டைக் கண்டு வேதநாயகம் பிள்ளை அடைந்த எச்சல்தான், மேற்கூறிய நகைச்சுவை பிறப்பதற்குக் காரணமாயிற்று.

நம் நாட்டில் மட்டுமன்றி, மேற்கத்திய நாடுகளிலும் கலப்படம் ஒரு கலையாகவே இருந்திருக்கிறது. அதற்குப் "பிளேஜியாசம்' எனவொரு தலைப்பும் கொடுத்திருக்கின்றனர்.

இலக்கியத் திருட்டையும் கலப்படத்தையும் கண்டு வெகுண்ட டி.எஸ். இலியட் "மாபெரும் கவிஞர்கள் மேற்கோளாக எடுப்பதைக் காட்டிலும் திருடுவது அதிகமாக இருக்கிறது'' (Great poet Steals more than borrows) என்றார்.

படைப்புத்துறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் களவாடுபவர்களைக் கண்டு சினந்த புதுமைப்பித்தன், "பிறருடைய எழுத்துகளை எடுத்துத் தன் எழுத்து என்று பிரசுப்பவன், தன்னுடைய மனைவிக்கும் இன்னொரு ஆடவனுக்கும் பிறந்த குழந்தைக்குத் தான் தகப்பன் எனச் சொல்லுவதற்குச் சமமாவான்'' என எச்சத்த பிறகும், அத்தொழில் நின்றபாடில்லை.

பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஒரு விவுரையாளர், அயல்நாட்டுத் தமிழறிஞர் இ.எஸ். விசுவநாதனின் படைப்பிலிருந்த ஓர் இயலை எடுத்து, அப்படியே தம்முடைய ஆய்வேட்டில் சொருகி, டாக்டர் பட்டத்திற்காகச் சமர்ப்பித்தும் விட்டார். துரதிர்ஷ்டவசமாக அவ்வாய்வேடு அதே இ.எஸ். விசுவநாதனிடம் மதிப்பீட்டிற்காகச் சென்று, அத்திருட்டுக் கண்டுபிடிக்கப்பட்டு, அவ்வாய்வாளர் கடுமையாகத் தண்டிக்கவும் பட்டார்.

சிலபல ஆண்டுகளுக்கு முன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வாளர் தம்முடைய பி.எச்டி. பட்டத்திற்காக, வேறொரு படைப்பிலிருந்து ஒரு பகுதியை எடுத்துத் தம்முடைய ஆய்வேட்டில் சொருகிவிட்டார். ஆட்சிமன்றக் கூட்டத்தில் இந்தத் திருட்டு வெளிச்சத்திற்கு வர, அந்த ஆய்வாளன் மேற்பார்வையாளராகிய பேராசியர் ஒருவன் பதவி பறிபோயிற்று. ஆய்வாளன் ஆய்வேட்டை ஆழ்ந்து படிக்காது, கையெழுத்திட்டது ஒன்றே அவர் செய்த பாவம். "படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான்; ஐயோ என்று போவான்'' எனப் பாரதி, என்றைக்கோ பாடியது, இன்றைக்குப் பலிதமாகிக் கொண்டிருக்கிறது.

படிக்காதவனுடைய திருட்டு வயிற்றுப் பசிக்கு மட்டுமே! படித்தவன் திருட்டு, பதவிக்கு; பணத்திற்கு; புகழுக்கு; ஊரை ஏமாற்றுவதற்கு; உழைக்காமலேயே பலனை அனுபவிப்பதற்கு. படைப்பாளிகளில் சிலரும் ஆராய்ச்சியாளர்களில் பலரும் இந்தக் கலப்பட வேலையில் கை வைப்பதற்குக் காரணம், மக்களுடைய மறதியில் அவர்களுக்கு இருக்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கையே! என்றைக்கோ எழுதியவர்கள் எழுத்தை இன்றைக்கு எங்கே நினைவு வைத்திருப்பார்கள் என்ற எண்ணம் முதற்காரணம். அடுத்ததாக, அப்படியே யாராவது என்றைக்கோ எழுதியவன் எழுத்தை நினைவில் வைத்திருந்து, இப்பொழுது செய்யும் இலக்கியத் திருட்டைக் கண்டுபிடிப்பார்கள் என்றாலும், "அவர்கள் எங்கே துணிந்து வந்து, அதை வெளிச்சம்போட்டுக் காட்டப் போகிறார்கள்' என்ற நினைப்பும் மற்றொரு காரணம்.

மூன்றாவதாக, ஆராய்ச்சியாளர்களிடம் தொழில் ரீதியாகக் காணப்படும் போட்டி மனப்பான்மையும் ஒரு காரணமாக அமைகிறது. "சக பேராசியர் ஒருவர் 30 கட்டுரைகளை வெளியிட்டு விட்டாரே; நாம் மட்டும் 20 கட்டுரைகளோடு இருக்கலாமா' என்ற எண்ணம் எழுவது இயற்கை. அத்தகைய எண்ணம் எழுகிறபோது, உழைத்து, மூளையைக் கசக்கி எழுதுவதற்கு அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. அத்தகைய தருணங்களில் ஒன்று தமக்குக்கீழ் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களை விட்டு எழுதித்தரச் சொல்லுவார்கள் அல்லது மற்றவர்களுடைய படைப்பை எடுத்துத் தங்களுடையது என்று போட்டுக் கொள்வார்கள்.

முன்னோர்களுடைய மொழிகளையும் பொருள்களையும் எடுத்தாள்வதில் தவறில்லை. ஆனால், எடுத்தாள்கின்ற பொழுது, "இன்னாடமிருந்து இக்கருத்தைப் பெற்றேன்' என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

சீத்தலைச் சாத்தனார் திருக்குறளிலிருந்து ஓர் செய்தியை எடுக்கின்றபோது, ""அறம் பாடிற்று அன்றே ஆயிழை கணவ'' என்றார். மகாகவி பாரதி, பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையிலேயே ""எனது சித்திரம் வியாசர் பாரதக் கதையைத் தழுவியது... அதாவது கற்பனை, திருஷ்டாந்தங்களில் எனது சொந்தச் சரக்கு அதிகமில்லை. தமிழ்நடைக்கு மாத்திரமே நான் பொறுப்பாளி'' என நாணயமாகவும், நேர்மையாகவும் குறிப்பிட்டுச் செல்கிறார்.

கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலுக்குச் "சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே நில்லென்று எனைக்கூறி, நிறுத்தி வழிச் சென்றவரே' எனும் வகளைப் பல்லவியாக அமைத்தபோது, "இதனை நான் நாட்டுப்புறப் பாடலிலிருந்து எடுத்தேன்' எனக் கம்பீரமாக ஒப்புக்கொண்டார். ஒரே பாடுபொருளை மையமாக வைத்துக் கம்பர் பாடிவிட்டார் எனக் கேட்ட ஒட்டக்கூத்தர், தாம் பாடிய இராமாயணத்தில் உத்தரகாண்டத்தைத் தவிர மற்றவற்றை எத்துவிட்டார். கண்ணகி கதையைச் சீத்தலைத் சாத்தனார் தாம் பாடத் திட்டமிட்டிருந்தார்; ஆனால், அத்துயரக் கதையைக் கேட்ட இளங்கோவடிகள், "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்' எனத் தொடங்கிவிட்டதால், சீத்தலைச் சாத்தனார், மாதவி மகள் மணிமேகலை காப்பியத்திற்கு மாறிவிட்டார். இவ்வாறெல்லாம் நம் முன்னோர்கள் காத்த கண்ணியம் இன்று எங்கே? அறவுணர்வு இன்று எங்கே?

உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படம் உடலைத்தான் பாதிக்கும்; ஆனால், உணர்வுப் பொருள்களில், அறிவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படம் ஆன்மாவைப் பாதிக்கும்; அடுத்த தலைமுறையைப் பாதிக்கும்.

"திறமையான புலமையெனில், அதனை வெளிநாட்டார் வணக்கம் செய்திடல் வேண்டும்'' என்றான் மகாகவி பாரதி. ஆனால், இன்று நம்மவர் சிலடத்துக் காணப்படும் கலப்படத்தையும் களவாணித்தனத்தையும் கண்டு அவர்கள் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்; கை கொட்டிச் சிரிக்கிறார்கள்.

கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமன்று; ஏட்டுக்கும் எழுத்துக்கும் கூடத்தேவை!

கட்டுரையாளர்: தாகூர் கலை அறிவியல் கல்லூயின் முன்னாள் முதல்வர்
நன்றி:தினமணி

7.8.08

தமிழ்த் தேர் உலகெங்கும் ஓடித் தமிழரின் பெருமை காட்ட தேரிழுக்கவாரீர்

தமிழ் மொழி வளர்ச்சியென்பது அதன் பயன்பாட்டிலும் பாதுகாப்பிலும் தான் உள்ளது. அத்தகைய காத்தலிலும், பயன்பாட்டிற்காகவும் அயராதுழைக்கும் எத்தனையோ மாமனிதர்களின் வரிசையில் திரு பொள்ளாச்சி நசன் அவர்கள் விளங்குகிறார். அவர் தம் தமிழம்.வலை யில் ஏராளமான தமிழம் சார்ந்த தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாது சிற்றிதழ் வளர்ச்சியிலும் அவர் தம் பங்களிப்பை அளித்துவருகிறார்.

அண்மையில் அவருடன் உரையாற்றும் போது, நல்ல திட்டமொன்றை கூறியிருந்தார். அதாவது,

"சங்க இலக்கியப் பாடல்களை,காட்சி வடிவாக, ஒலி ஒளிப் படமாக, இசையுடன் - நிகழ்த்து கலையாக - இக்கால வாழ்வியலோடு பொருந்திய காட்சியாக - படமாக்கிப் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் இன்றைய இளைஞர்கள் படிக்கும் நிலையிலிருந்து பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். சூழலுக்கு ஒட்டிய வகையில் சுவைகூட்டுகிற வடிவில் செறிவாக, நுட்பமாக, இலக்கியமாக காட்சிப் பதிவு செய்தால் அது உயர் செயலாக அமையும். இதுவும் நம் முன் உள்ள மாபெரும் பணியாகும்."

அவர் இணையத்தில் உலவும் தமிழ் ஆர்வலர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறார்......

சங்ககாலம் முதல் நாயக்கர்காலம் வரை தமிழில் வெளியான நூல்களைப் பட்டியலிட்டுள்ளேன். இந்த நூல்களைத் தேடுவதோ அல்லது வாங்கி வைத்துப் பாதுகாப்பதோ இடர்பாடுடையது. ஆனால் இந்த நூல்கள்தான் நமது வரலாற்றை, வாழ்முறையை, எடுத்துச் சொல்லும் ஆவணங்களாக உள்ளன. ஒவ்வொரு தமிழரும் இவை பற்றி அறிந்து கொண்டிருப்பது உயர்வானது, பெருமைபடத்தக்கது.
அனைத்து நூல்களையும் இணையத்தில் வைத்தால், எந்த மூலையிலிருந்து வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் படிக்க, பயன்படுத்த இயலும்.

இந்த நோக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாக மதுரைத்திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, 200 க்கும் மேற்பட்ட நூல்களைப் pdf வடிவில் உருவாக்கி இணையத்தில் வைத்துள்ளது. மதுரைத்திட்டத்தின் இயக்குநர் அவர்களும் அவரோடு இணைந்து செயல்படுகிற அனைத்துப் பொறுப்பாளர்களும் வணங்குதற்குரியவர்களே. புறநானூறு, கலித்தொகை, பத்துப்பாட்டு, என அனைத்துத் தமிழ் நூல்களையும் இணையத்திலிருந்து மிக எளிமையாக வலையிறக்கிப் படிக்க முடியும், அச்சாக்கமுடியும் என்ற நிலையை மதுரைத்திட்டம் உருவாக்கியுள்ளது. உலகத்தமிழர்களே இந்தச் செயலுக்காக வாழ்த்துவார்கள். தமிழம் வலையும் தனது நெஞ்சார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இது மட்டும் போதுமா ?
மதுரைத்திட்டம் அனைத்து நூல்களின் மூலப்படியையும் அப்படியே pdf வடிவில் அமைத்துவிட்டது. இந்த நூல்கள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வகையான உரை நூல்கள் வந்து விட்டன. பழங்காலத்திலிருந்து இந்தக்காலம் வரை பலரும் உரைகளை எழுதியுள்ளனர். தரமான, விளக்கமான, எளிமையான, நுட்பமான உரைகளைத் தேர்ந்தெடுத்துப் பதியவைப்பதும் நம் முன் உள்ள தவிர்க்க முடியாத பணியாகும்.
உரை மட்டும் இருந்தால் போதுமா ?
சங்க இலக்கியப் பாடல்களை, காட்சி வடிவாக, ஒலி ஒளிப் படமாக, இசையுடன் - நிகழ்த்து கலையாக - இக்கால வாழ்வியலோடு பொருந்திய காட்சியாக - படமாக்கிப் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் இன்றைய இளைஞர்கள் படிக்கும் நிலையிலிருந்து பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். சூழலுக்கு ஒட்டிய வகையில் சுவைகூட்டுகிற வடிவில் செறிவாக, நுட்பமாக, இலக்கியமாக காட்சிப் பதிவு செய்தால் அது உயர் செயலாக அமையும். இதுவும் நம் முன் உள்ள மாபெரும் பணியாகும்.
இவற்றோடு......
தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள உதவுகிற அடிப்படையை உருவாக்கவும், பாடத்திட்டங்களை வடிவமைக்கவும், கற்றல் கற்பித்தல் கருவிகள் செய்யவும், வளருகிற தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு ஒளி ஒலிக் காட்சிகளை அமைக்கவும் திட்டமிட வேண்டும். இவை இளம் நாற்றுகளைத் தமிழியத்தோடு தமிழ் கற்று வளர அடித்தளம் அமைப்பதாக உருவாக்கப்பட வேண்டும்.
உருவாக்கப்படுகிற இந்தத் தொழில்நுட்பக் கற்றல் கற்பித்தல் கருவிகளும் பாடத்திட்டங்களும் - மழலையர்களைத் தமிழ்ப் படிக்க வைக்கிற ஆற்றலோடு - பன்முகத் தன்மையோடு, பல்வேறு வகையினதாக கொட்டிக் கிடக்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை, தரமானவற்றைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தெரிவு செய்து எடுப்பதாக இருக்கவேண்டும்.
கணினித் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்த வகையில் சிந்தித்து பல்வேறு நுட்பங்களையெல்லாம் இத்துறையில் திசை திருப்பி மாணவர்களை ஆற்றலோடு வளர்ப்பதற்கான அடித்தளம் அமைப்பதற்கு வழிகோல வேண்டும்.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எவருக்கும் எளிமையாக, குறைந்த விலையில் கிடைப்பதற்கான திட்டத்தோடு இவை உருவாக்கப்பட வேண்டும். ( தற்பொழுது கணினி உலகில் நம் தமிழர்கள் உருவாக்குகிற பல்வேறு மென்பொருள்கள் வியக்கத்தக்கதாகவும், இலவசமாக பெறத்தக்கதாகவும் இருப்பது நம்மவர்களின் உயர்நத நோக்கினையும், பயன்கருதாத் தன்மையையும் காட்டுகிறதல்லவா?)
இந்த நோக்கத்திற்காக...
இந்தச் சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன ?

அ) கணினித் தொழில் நுட்பத்தில் புதுமைகாண விரும்புபவர்களை நம்மோடு இணைப்போம்.

ஆ) ஒவ்வொருவரது தனிப்பட்ட ஆற்றலையும் தமிழின் வளர்ச்சிக்கு எவ்வாறு ஆற்றுப்படுத்துவது எனத் திட்டமிடுவோம்.

இ) கல்வி, தொழில் நுட்பம் இரண்டையும் - மொழிகற்பித்தல், மொழி வளர்ச்சி, மொழி பாதுகாப்பு என்கிற நோக்கில் எவ்வகையிலெல்லாம் செயற்படுத்தலாம் எனப் பகிர்ந்து கொள்வோம்.

ஈ) தமிழுக்காகப் பொருளையும், உழைப்பையும், நேரத்தையும் ஒதுக்க விரும்புபவர்களை ஒன்றிணைப்போம்.

திரு. பொள்ளாச்சி நசன் அவர்களின் முகவரி:
திரு. பொள்ளாச்சி நசன்.
1.சம்பத்நகர், சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 642 006
தொலைபேசி : (04259) 221278. , 98420 02957
மின் அஞ்சல் : pollachinasan@gmail.com
வலைதளம்: www.thamizham.net

பெரியார் விழிப்புணர்வு இயக்கம்

பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா அமைப்பின் மூலம் செயல்படும் இணைய வானொலி பெரியார் குரல்.

அதன் நோக்கங்களாவன...

* முதன் முதலாக உலக தமிழர்களுக்காக பகுத்தறிவு கருத்துக்களை இணைய வானொலி மூலமாக வழங்க பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா அமைப்பின் மூலம் செயல்படும் இணைய வானொலி பெரியார் குரல் ஜெர்மன் நாட்டு அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றது.

* தமிழர்களின் பாரம்பரியத்தை தமிழ் மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வரும் நோக்கத்தோடும், தந்தை பெரியாரின் கருத்துக்களையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்தோடும் உருவாக்கப்பட்டது இணைய வானொலி பெரியார் குரல்.

* பெரியார் குரல் இணைய வானொலியில் செயல்படும் உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் சார்பற்ற எந்த அமைப்பையும் சாராத சுயசிந்தனையாளர்கள்..

* எமது குழுவின் நோக்கம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இனத்தின் சுய சிந்தனைகளை கூர் தீட்டும் நோக்கத்தோடு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும், பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களை மருத்துவ நிபுணர்கள் குழு மூலமும் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முனைகிறோம்.

* பெண்ணீயம் சார்ந்த விடயங்கள் குறித்த ஆலோசனைகளுக்கு பெண் மருத்துவர்கள் உங்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க இருக்கிறார்கள்.

* மனநலம், உடல் நலம், குழந்தை வளர்ப்பு மற்றும் பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும்.

4.8.08

நெல் காலாண்டிதழ்

நெல் கடந்த திருவள்ளுவராண்டு 2038 சுறவம் 1 (சனவரி 2007) அன்று முதல்,
மூன்று திங்களுக்கு ஒரு முறை பல புதிய கலைஞர்களை,பாவலர்களை உருவாக்கும் விதமாகவும்,
அவர்தம் எழுத்துகள் மூலம் பண்பாடு, அதை சார்ந்த சமுகம் ஆகியவற்றை பிரதிப்பலீக்கவும், பண்படுத்தவும்,
எழுத்தைக் கொண்டு சமூக முன்னேற்றம்/மாற்றம் காணவும்,
தமிழ் என்றும் இளமையோடு இனிமையோடு தமிழர் தம் நாவில் தவழவும்,
இனிய தமிழில் சிற்றிதழாக உங்கள் ஒவ்வொருவர் மனதிலும் நல்லதொரு(நாளைய) அறுவடைக்காக விதைக்கப்படுகிறது......!
நூல் வடிவில் நெல்லை பெற உங்கள் மேலான சிந்தனைகளோடு எழுதுங்கள்...
ஆசிரியர்: வெ.யுவராசன்
பொறுப்பாசிரியர்:அ.ம.அப்துல் மஜீத்
நெல் இதழ்
52,ஆரணி சாலை,
வந்தவாசி.604 408.
திருவண்ணாமலை மாவட்டம்.
தமிழ் நாடு. இந்தியா.

மின்னஞ்சல்: NelIthazh@Gmail.com
மின்னிதழ்: www.nelithazh.blogspot.com

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...