25.7.08

தமிழ்99 விசைப்பலகை

தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு


கணினியில் தமிழ் எழுத பலவிதமான தட்டச்சு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றில் அஞ்சல் அல்லது ரோமன் எனப்படும் தமிங்கில தட்டச்சுமுறை, இந்தியாவில் தட்டச்சுப் பயிற்சி மையங்களில் பயிற்றுவிக்கப் படும் தட்டெழுத்து முறை, இலங்கை முதலிய நாடுகளில் பயிற்றுவிக்கப் படும் பாமினி, ஆகியவற்றோடு தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் செய்யப் பட்டு தமிழக அரசால் தரப் படுத்தப் பட்ட விசைப்பலகையாக அங்கீகரிக்கப் பட்டு இலங்கை, சிங்கப்பூர், அரசுகளாலும் அங்கீகரிக்கப் பட்ட தமிழ்99 விசைப்பலகை முறை போன்றவை அதிகம் புழக்கத்தில் உள்ளவை. இவற்றை எழுத கணினிக்கு பலவிதமான தட்டச்சு செயலிகளும் கிடைக்கின்றன.

அவற்றில் முரசு அஞ்சல், அழகி, குறள் தமிழ்ச்செயலி போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்தச் செயலிகளில் மேற்கண்ட எல்லா முறைகளும் இணைந்தே இருக்கின்றன. தேவையான தட்டச்சு முறையில் தட்டச்சு செய்ய இயலும். தமிழா குழுவினரால் உருவாக்கப் பட்ட எகலப்பை என்னும் திறமூல விசைப்பலகை இயக்கி தமிழ்99, அஞ்சல், பாமினி தட்டச்சு முறைகளுக்கு தனித்தனியாக கிடைக்கிறது. இதைப்பயன்படுத்தி விண்டோஸ் இயங்குதளத்தில் அனைத்துச் செயலிகளிலும் தமிழில் உள்ளீடு செய்ய இயலும்.
தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு

அஞ்சல் முறையில் ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ,ஔ போன்ற உயிர்நெடில்களை எழுத இருவிசைகள், கா,கீ,கூ,கே,கை,கோ,கௌ போன்ற உயிர்மெய் நெடில்களை எழுத 3 அல்லது 4 விசைகள் அவசியம். ங,ஞ, த, ண,ள போன்ற குறில் எழுத்துக்களைக்கூட 3 விசைகள் பயன்படுத்தியே எழுத வேண்டியுள்ளது.

பாமினியில் ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ போன்ற உயிர் நெடில் எழுத்துக்களை எழுத shift உடன் 2 எழுத்து அவசியம். கீ,ஙீ,சீ….வரிசை, கே,ஙே,சே,ஞே…வரிசை போன்ற எழுத்துக்களை எழுத 3 விசைகள் அழுத்த வேண்டும். கோ,ஙோ,சோ,ஞோ….வரிசை எழுத்துக்களுக்கு 4 விசைககள் அழுத்த வேண்டியதாக உள்ளது.

தமிழ் தட்டெழுத்து முறையிலும் பாமினியைப் போலவே அதே விசைகள் அவசியம். கூடவே ழ வரிசை எழுத்துக்களை எழுத ழ=2, ழொ,ழோ,ழௌ=4, பிற ழ வரிசை எழுத்துக்கள்=3 என அதிகமான விசைகளைப் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது.

தமிழ்99 அனைத்து உயிர் எழுத்துக்கள் 1 விசை, க,ங,ச,ஞ வரிசை 1விசை, என 31 எழுத்துக்களை ஒரு விசையிலும், மீதமுள்ள 216 எழுத்துக்களையும் இருவிசையில் எழுதலாம். தமிழ் எழுத்துக்கள் 247 ல் எந்த தமிழ் எழுத்தை எழுதவும் இரண்டுக்கு மேற்பட்ட விசைகள் அவசியமில்லை. shift அல்லது வேறு துணைவிசைகளும் அவற்றுக்கு அவசியமில்லை. கிரந்த எழுத்துக்களான ஸ,ஷ,ஜ,ஹ போன்றவற்றை மட்டுமே shift உபயோகித்து எழுத வேண்டும்.

விஞ்ஞானப் பூர்வமான இந்த தமிழ்99 தட்டச்சு முறையால் குறைந்த விசையழுத்த முறைகளில் விரல்களுக்கு எளிமையான வரிசையமைப்பில் அதிக பக்கங்களை அதிக வேகத்தில் அதிக நேரம் கைகளுக்கு களைப்பின்றி தொடர்ச்சியாக தட்டச்சு செய்ய முடியும்…

இம்முறையை கற்றுக் கொள்வதும் எளிமையானது. விசைகளை நினைவில் வைப்பதும் மிகவும் எளிது. விளக்கமான ஒப்பீடு மற்றும் பயிற்சி முறைகளை கணிச்சுவடி மின்னூலில் காணலாம்.

நன்றி: தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு தளம்

******

ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?தமிழ்99 விசைப்பலகையின் அறிவியல், இலக்கண அடிப்படை நிறைகளை அறியும் முன் தமிங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு அடிப்படையின் போதைமையைப் பார்ப்போமா?

தமிங்கில விசைப்பலகைக்கு அடிப்படையாக இருக்கும் asdf அல்லது qwerty விசைப்பலகையில் ஆங்கில எழுத்துக்கள் அமைந்திருக்கும் வரிசைக்கு காரணம் சொல்ல முடியுமா? தட்டச்சுப் பொறிகள் முதலில் உருவாக்கப்பட்ட காலத்தில் அவற்றில் வேகமாகத் தட்டச்சினால் அவை பழுதடைந்து விடுகின்றன என்ற காரணத்துக்காக, எழுத்துக்களைக் கலைத்துப் போட்டுத் தட்டச்சும் வேகத்தைக் குறைக்க உருவாக்கபட்டத்தே இப்போது உள்ள ஆங்கில விசைப்பலகை. ஆங்கில எழுத்து வரிசைக்கே அடிப்படை இல்லாத போது அதை அடிப்படையாகக் கொண்டு தமிங்கில விசைப்பலகை உருவாக்குவது எப்படி பொருந்தும்? தவிர w = ந போன்ற முட்டாள்த்தனமான விசை அமைப்புகள் மனதில் பதிவதால் weenga wallaa irukkengkaLaa என்று தமிங்கில மடல் எழுதுவோரைப் பார்த்திருக்கிறேன். இருக்கிற தமிழ் எழுத்துகளுக்கே விசைப்பலகையில் இடம் இல்லை என்று இருக்கிற போது p, b = ப்; t, d = ட்; s, c = ச்; k, g = க என்று ஒரே எழுத்துக்களுக்கு இரண்டு விசைகளைத் தந்து இடத்தை வீணாக்குகிறோம். q, x, f விசைகளுக்கு வேலையே இல்லை! அதிகம் பயன்படாத ஜ போன்ற எழுத்துக்களுக்குத் தனி விசையாக j. அந்த இடத்தை ள, ழ, ண, ற போன்ற எழுத்துக்களுக்குத் தந்திருந்தால் ஒவ்வொரு முறை அவற்றை எழுதும்போதும் shift அடிக்கத் தேவை இல்லையே?

இந்தத் திறம் குறைந்த qwerty விசைப்பலகைக்கு மாற்றாகத் திறம் கூடிய dvorak விசைப்பலகை 1936லேயே பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், வணிகக் காரணங்களுக்காக அதைப் பரவலாக்காமல் செய்து விட்டார்கள்.

தமிழுக்கும் அப்படி நேராமல் இருக்கவும் உலகெங்கும் சீர்தரமாக ஒரு விசைப்பலகை இருக்கவும் தமிழ்99 முறை அறிஞர்களின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக அரசால் 1999ல் பரிந்துரைக்கப்பட்டது. இதில் என்ன இலக்கணச் சிறப்பு என்றால்,மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.

உயிர் குறில்கள் - இட நடு வரிசை
உயிர் நெடில்கள் - இட மேல் வரிசை.
அதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.

அதிகம் பயன்படும் க ச த ப - வல நடு வரிசை.

அடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் பக்கம் பக்கமாக உள்ளன.

ஞ ச வரிசையாக அடித்தால் அதுவே ஞவுக்குப் புள்ளி வைத்து ஞ்ச என்று எழுதி விடும். ஏனென்றால் தமிழ் இலக்கணப் படி ஞவும் சவும் அடுத்தடுத்து வரும்போது கண்டிப்பாக ஞ்ச என்று தான் வரும். எனவே, பயனர் தனியாக ஞவுக்குப் புள்ளி வைக்கத் தேவை இல்லை. ன்ற, ங்க, ஞ்ச, ந்த, ம்ப, ண்ட எல்லாமே இப்படித் தானாகப் புள்ளி வரும். ட ட என்று இரு முறை அடித்தால் ட்ட ஆகி விடும். ன்ன, க்க, ப்ப, த்த, ண்ண, ட்ட எல்லாமே தானாகவே புள்ளி வைத்துக் கொள்ளும். தமிழ்ச் சொற்களைக் கூர்ந்து கவனித்தால் இது போன்ற விசை வரிசைகள் எவ்வளவு அடிக்கடி வருகின்றன என்று உங்களுக்குத் தெரியும். இப்படி புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் தட்டச்சுவதில் 40% மிச்சப்படும். ஓரிரு சொற்களில் பின்னூட்டம் போடும் போது இதன் அருமை தெரியாது. ஆனால், பக்கம் பக்கமாகப் புத்தகம் எழுதுகிறவர்கள், மணிக்கணக்கில் விக்கி தளங்களில் கட்டுரை எழுதுகிறவர்களுக்கு இது தட்டச்சு வேகத்தை அதிகரிக்கும் வரப்பிரசாதம்.

தமிங்கில விசைப் பலகையில் கவனக்குறைவால் ர வர வேண்டிய இடத்தில் ற வும் ன-ண-ந, ல,ழ,ள குழப்பங்களும் தட்டச்சுப் பிழைகளும் மலிய வாய்ப்பு உண்டு. தமிழ்99ல் எல்லாமே தனித்தனி விசைகள் என்பதால் தவறுதலாக ஒன்றுக்குப் பதில் இன்னொன்றை அழுத்தி விட வாய்ப்பில்லை.

தமிங்கிலத்தில் த என்று எழுது tha என்று மூன்று விசைகளை அழுத்த வேண்டும். தமிழ்99 த என்று ஒரு விசை அழுத்தினால் போதும். த்+உ =து போன்ற இலக்கண அடிப்படையில் தான் எல்லா உயிர்மெய் எழுத்துக்களும் தமிழ்99ல் வருகின்றன.

தமிழில் அ, க, ச, ப, வ என்று அகரங்கள் அடிக்கடிப் பயன்படுவது வாடிக்கை. தமிழ்99ல் இவற்றை ஒரே விசையில் அழுத்தி விடலாம். அடுத்து அதிகம் பயன்படும் நெடில் ஒலிகளையும் ஒரே விசையில் அழுத்தலாம். தமிங்கிலத்தில் தோ என்று எழுத thoo அல்லது th shift o என்று நான்கு விசைகள் தேவை. தமிழ்99ல் த ஓ இரண்டு விசைகளில் எழுதி விட முடியும். எல்லா நெடில்களுக்கும் இப்படியே.

தமிங்கிலம், தமிழ்99 இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களின் key strokes per minute rate ஒன்றாக இருந்தாலும் கூட letters written per minute rate நிச்சயம் தமிழ்99ல் 40% கூடுதலாக இருக்கும்.

நம் விரலகள் இலகுவாகச் சென்று வரக்கூடிய விசைகளில் நாம் அடிக்கடி பயன்படும் எழுத்துக்கள் இருப்பதாலும், அவை இடம், வலம், மேல், கீழ் என்று முறையாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் கை வலிக்காது.

தவிர, தமிங்கிலப் பலகையால் ஆங்கிலமும் குழம்பலாம். ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்கும் நம் மனதில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறோம். ஆங்கிலத்தில் e (ஈ, இ) அதுவே தமிழில் எ. அங்கே i (ஐ) நமக்கு இ, ஈ என்று குழப்பிக் கொள்ள வேண்டாம். தமிழ்99ல் இந்த ஆங்கில எழுத்துக்கு இந்தத் தமிழ் எழுத்து என்று கொள்ளாமல் அனைத்து விசைகளையும் தமிழ் எழுத்துக்களாத் தான் மனதில் பதிகிறோம். அதனால் எந்த குழப்பமும் வராது.

முக்கியமாகத் தமிங்கிலத்துக்குப் பழகியவர்கள் மனதில் தமிழ் ஒலிகள் ஆங்கில எழுத்துக்களாகவே பதிந்திருக்கும். நன்றி என்ற சொல் w a n shift r i என்று மனதில் பதிவது நல்லது ந ன் றி என்று மனதில் பதிவது நல்லதா? தமிழ்99ஐப் பரிந்துரைப்பது வேகம், திறம், போன்ற காரணங்களைத் தாண்டி இந்தத் தமிழ்ச் சிந்தனையை முன்மொழியும் கொள்கையும் முக்கிய காரணம். இதே காரணத்துக்காகவே பாமினி போன்ற பிற விசைப்பலகை அமைப்புகளை நான் எதிர்ப்பதுமில்லை.

சிந்திக்கத் தெரியாத தட்டச்சுப் பலகைக்குத் தான் ஒவ்வொன்றையும் சொல்லித் தர வேண்டும். கணினி என்றாலே வேலைகளை இலகுவாகச் செய்யத் தானே? நம் மொழியின் எழுத்து இலக்கணத்தை அதற்குச் சொல்லித் தந்து விட்டால், அது நம் வேலையை மிச்சப்படுத்தி விடும். எளிதான உவமை சொல்வது என்றால், செல்பேசியில் dictionary modeலும் no dictionary modeலும் சொற்களை எழுதுவதற்கு உள்ள வேறுபாடு போல் தான் இது.

தமிழ்99ல் விசையின் இடங்களை நினைவில் கொள்வது எளிது. தமிழ் மட்டும் தெரிந்து கணினிக்கு வரும் ஒருவர் முதலில் ஆங்கில விசைப்பலகை எழுத்துக்கள் எங்கிருக்கு என்று பார்த்து , அப்புறம் அதில் எந்த எழுத்து தமிழுக்கு என்று புரிந்து மனதுக்குள்ளேயே map செய்து அடிப்பதற்குள், நேரடியாகத் தமிழைத் தட்டச்சும் முறையைப் புரிந்து கொள்ளவும் நினைவில் கொள்ளவும் பழகவும் அவருக்கு எளிது. ஆங்கில விசைப்பலகை அறிந்த ஒருவருக்கு தமிழ் விசைப்பலகைக்கு மாற எவ்வளவு தயக்கம் இருக்குமோ அவ்வளவு தயக்கம், சுணக்கமும் தமிழ் மட்டுமே அறிந்தவருக்கு ஆங்கிலப் பலகையைக் கற்று பிறகு தமிழில் தட்டச்ச வேண்டி இருப்பதால் வரலாம். தமிழ் மட்டும் அறிந்த பெரும்பாலான தமிழர்களை கணினியிடம் இருந்து அன்னியப்படுத்தவே இது வழிவகுக்கும். ஆங்கிலம் அறிந்த தலைமுறையை மட்டும் கணக்கில் கொள்ளலாகாது. கணித்தமிழைப் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல தமிழ் மட்டும் போதுமானதாக இருக்கும்போது, இன்னொரு விசைப்பலகை எதற்கு? தமிழில் தட்டச்ச வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் பழகு என்று சொல்வது எப்படி நியாயம்? நம்முடைய மொழியின் தேவை, சிறப்புக்கு ஏற்ப ஒரு இலகுவான விசைப்பலகையைக் கூட வடிவமைத்துக் கொள்ள இயலாத ஆங்கிலச் சார்பை, அடிமை மனப்பான்மையைத் தான் தமிங்கில விசைப்பலகை வெளிப்படுத்துகிறது. புதிதாக நமக்காக ஒன்றாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள,முயல விரும்பாத சோம்பலை என்னவென்று சொல்வது?

ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தும் ஜெர்மன், பிரெஞ்சு விசைப்பலகைகளில் கூட எழுத்துகள் இடம் மாறி இருக்கும். ஜெர்மனில் zம் yம் இடம் மாறி இருக்கும். ஏனெனில் அதில் zன் பயன்பாடு அதிகம். பிரெஞ்சு மொழியில் இன்னும் ஏகப்பட்ட எழுத்துக்களை இடம் மாற்றிப் போட்டு வைத்திருப்பார்கள். அருகருகே உள்ள மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரே எழுத்துக்களைப் பயன்படுத்தும் மொழிகள் கூட தங்கள் மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப விசைப்பலகையை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். தொடர்பே இல்லாத தமிழ் ஏன் ஆங்கிலத்துக்கே திறமற்ற ஒரு விசைப்பலகை அமைப்பைப் பின்பிற்றித் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்?

விசைப்பலகை தொடங்கி பல அறிவியல் கண்டுபிடிப்புகள், நடைமுறைகளிலும் உலக அல்லது இன்னொரு குழுவின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம் தேவைகள், சிறப்புகளுக்கு ஏற்ப localized ஆக சிந்திப்பது தான் சிறந்தது. எல்லார் காலுக்கும் ஒரே செருப்பு பொருந்துமா? இருக்கிற செருப்பை வைத்து ஒப்பேற்றுவோம் என்று நினைப்பதுண்டா?

தமிழ்99க்கு மாறவே முடியாத அளவுக்கு பழக்கம்,மனத்தடை இருக்குமானால், குறைந்தபட்சம் புதிதாகத் தமிழ்த் தட்டச்சை அறிமுகப்படுத்தி வைப்பவர்களுக்காவது தமிழ்99 சொல்லிக் கொடுக்கலாமே? இப்பொழுது விழித்துக் கொண்டால் தான் ஆயிற்று. இல்லாவிட்டால், காலம் கடந்து விடும்.

நன்றி: இரவி-தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு
********


தமிழ்99 விசைப்பலகை ஒட்டிகள் விற்பனைக்கு...தமிழ்99 விசைப்பலகை ஒட்டிகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்திய ரூபாய் 6/- என்ற விலைக்கு இதைப் பெற்றுக் கொள்ளலாம். இத்தொக்கைக்கு இரண்டு முழுமையான விசைப்பலகை ஒட்டிகள் கிடைக்கும். இந்த ஒட்டிகளை உங்கள் கணினியில் ஒவ்வொரு விசையின் மூலம் ஒட்டிக் கொள்வதன் மூலம் தமிழ் எழுத்துக்களைப் பார்த்து தட்டச்சு செய்து பழகிக் கொள்ள உதவும்.

கருப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துகள், வெள்ளைப் பின்னணியில் கருப்பு எழுத்துகள் என்று இரு வகை ஒட்டிகள் கிடைக்கின்றன.

ஒட்டிகள் கிடைக்கும் இடங்கள்:

சென்னை குரோம்பேட்டை
Kaviiz Computronix
87, இராசேந்திர பிரசாத் சாலை,
காயத்திரி நகர்,
அஸ்தினாபுரம்,
குரோம்பேட்டை -44.

தொடர்புக்கு
கே.மகேஷ் குமார் - 9445142862

தஞ்சாவூர்,பட்டுக்கோட்டை
SANS Computers sales and service
(opp : videocon showroom)
தலையாரி தெரு
பட்டுக்கோட்டை - 614601

தொடர்புக்கு
எஸ். ராஜா - 9865068465

சென்னையில் உள்ளோர் பாலபாரதி (9940203132), மா.சிவக்குமார் (9884070556) ஆகியோரை நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒட்டிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

சிங்கப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாரி. அரசுவைத் தொடர்பு கொள்ளலாம். அவரது மின்மடல் முகவரி pktPari.Arasu at gmail dot com

மலேசியா பகுதியைச் சேர்ந்தவர்கள் TBCDஐத் தொடர்பு கொள்ளலாம். அவரது மின்மடல் முகவரி velaiilley at gmail dot com

வட அமெரிக்கா, கனடா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நா. கணேசனைத் தொடர்பு கொள்ளலாம். அவரது மின்மடல் முகவரி naa.ganesan at gmail dot com
ஒட்டிகளை இந்திய ரூபாய் 6/- என்ற தொகைக்கு மொத்தமாகப் பெற்று சில்லரையாகவும் நீங்கள் விற்பனை செய்யலாம். இது இலாப நோக்கற்ற முயற்சி என்பதால் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை இந்திய ரூபாய் 10/-க்குள் வைத்து பலரையும் இந்த ஒட்டிகள் சென்றடைய உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு சில ஒட்டிகளைப் பெற்றுக் கொள்ளும் அன்பர்கள், இந்த இலாப நோக்கற்ற முயற்சிக்குத் தொடர் ஆதரவு தர விரும்பினால் கூடுதல் தொகையை நன்கொடையாகத் தர பாரி. அரசுவைத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு அமைப்பு.

*************
பாரி. அரசுவிடமிருந்து......

வணக்கம்!

தமிழ்99 பயன்பாட்டை அதிகரிக்கும் ஆர்வத்துடனும்... புதிதாக தமிழை கணினியில் பயன்படுத்துகிறவர்களாவது தங்கிலீஸை விட்டுவிட்டு முழுமையான தமிழ்விசைப்பலகையை பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலும்...

தமிழ்99 விசைப்பலகைகளை உற்பத்தி செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்....

இது தொடர்பான உரையாடலை இந்த குழும முகவரியில் பார்க்கவும்....

http://groups.google.com/group/tamil99/topics?hl=en

KL-RF007
US$5.4
1000PCS
Attan:Multimedia keyboard (Optional USB HUB)
"Windows keyboard,compatible with windows
NT/98/ME/2000/XP
PC/AT/PS-2 compatible
High-quality membrane key switch
Multiple language versions available
Multi-color available (Silver),(Dark blue),(Blue),(Purple),(Red)
21 Hot keys for easily a"KL-RF008
USD7.00/pc
1000pcs
Normal WIRELESS KEYBAORD+USB
Receiver
1.104 keys + 13 hot keys
keyboard,
2,27Mhz, 1.0-1.5M operation
distance
3, USB port for
receiver
4,Multiple language versions
available
5, Use life:over 10million
times
6,High quality membrane tactile key switch

PS2 Weired Keyboard - ரூ230-ரூ250
Wireless Keyboard - ரூ330-ரூ350 வரை உற்பத்தி செலவு ஆகலாம்....


ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் 10 விசைப்பலகைக்கான பொறுப்பேற்றுக்கொண்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் உற்பத்தியை உறுதிச்செய்ய வேண்டுகிறேன்.
இரண்டாவது மிகப்பெரிய அளவில் ஆர்வலர்கள் கிடைக்கும் பட்சத்தில் நமக்கு குறைந்த விலையில் விசைபலகைகள் கிடைக்கும்.

சந்தையை விட தரமான அதே நேரத்தில் விலைகுறைவாக உற்பத்தி செய்ய முயற்சிக்கிறோம். உலகின் பல மூலைகளில் இருப்பவர்களும் அவர்களுக்குள் குழுவாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ஆர்வலர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்.

நன்றி

2 comments:

thamizham said...

Dear Friend
I add tamil 99 - learning lesson in our web www.thamizham.net in the free download pdf area - with in one month one can learn tamil 99
- coacing lessons
yours
pollachi nasan

Yuvaraj said...

நன்றி அய்யா !
தங்களின் பயிற்சி கையேடு மிகுந்த பயனளிக்கும் என்பதில் உறுதி.அந்த பக்கத்தின் தொடுப்பு இணைத்துள்ளேன்.
நன்றி அய்யா..!

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...