25.7.08

தமிழ்99 விசைப்பலகை

தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு


கணினியில் தமிழ் எழுத பலவிதமான தட்டச்சு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றில் அஞ்சல் அல்லது ரோமன் எனப்படும் தமிங்கில தட்டச்சுமுறை, இந்தியாவில் தட்டச்சுப் பயிற்சி மையங்களில் பயிற்றுவிக்கப் படும் தட்டெழுத்து முறை, இலங்கை முதலிய நாடுகளில் பயிற்றுவிக்கப் படும் பாமினி, ஆகியவற்றோடு தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் செய்யப் பட்டு தமிழக அரசால் தரப் படுத்தப் பட்ட விசைப்பலகையாக அங்கீகரிக்கப் பட்டு இலங்கை, சிங்கப்பூர், அரசுகளாலும் அங்கீகரிக்கப் பட்ட தமிழ்99 விசைப்பலகை முறை போன்றவை அதிகம் புழக்கத்தில் உள்ளவை. இவற்றை எழுத கணினிக்கு பலவிதமான தட்டச்சு செயலிகளும் கிடைக்கின்றன.

அவற்றில் முரசு அஞ்சல், அழகி, குறள் தமிழ்ச்செயலி போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்தச் செயலிகளில் மேற்கண்ட எல்லா முறைகளும் இணைந்தே இருக்கின்றன. தேவையான தட்டச்சு முறையில் தட்டச்சு செய்ய இயலும். தமிழா குழுவினரால் உருவாக்கப் பட்ட எகலப்பை என்னும் திறமூல விசைப்பலகை இயக்கி தமிழ்99, அஞ்சல், பாமினி தட்டச்சு முறைகளுக்கு தனித்தனியாக கிடைக்கிறது. இதைப்பயன்படுத்தி விண்டோஸ் இயங்குதளத்தில் அனைத்துச் செயலிகளிலும் தமிழில் உள்ளீடு செய்ய இயலும்.
தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு

அஞ்சல் முறையில் ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ,ஔ போன்ற உயிர்நெடில்களை எழுத இருவிசைகள், கா,கீ,கூ,கே,கை,கோ,கௌ போன்ற உயிர்மெய் நெடில்களை எழுத 3 அல்லது 4 விசைகள் அவசியம். ங,ஞ, த, ண,ள போன்ற குறில் எழுத்துக்களைக்கூட 3 விசைகள் பயன்படுத்தியே எழுத வேண்டியுள்ளது.

பாமினியில் ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ போன்ற உயிர் நெடில் எழுத்துக்களை எழுத shift உடன் 2 எழுத்து அவசியம். கீ,ஙீ,சீ….வரிசை, கே,ஙே,சே,ஞே…வரிசை போன்ற எழுத்துக்களை எழுத 3 விசைகள் அழுத்த வேண்டும். கோ,ஙோ,சோ,ஞோ….வரிசை எழுத்துக்களுக்கு 4 விசைககள் அழுத்த வேண்டியதாக உள்ளது.

தமிழ் தட்டெழுத்து முறையிலும் பாமினியைப் போலவே அதே விசைகள் அவசியம். கூடவே ழ வரிசை எழுத்துக்களை எழுத ழ=2, ழொ,ழோ,ழௌ=4, பிற ழ வரிசை எழுத்துக்கள்=3 என அதிகமான விசைகளைப் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது.

தமிழ்99 அனைத்து உயிர் எழுத்துக்கள் 1 விசை, க,ங,ச,ஞ வரிசை 1விசை, என 31 எழுத்துக்களை ஒரு விசையிலும், மீதமுள்ள 216 எழுத்துக்களையும் இருவிசையில் எழுதலாம். தமிழ் எழுத்துக்கள் 247 ல் எந்த தமிழ் எழுத்தை எழுதவும் இரண்டுக்கு மேற்பட்ட விசைகள் அவசியமில்லை. shift அல்லது வேறு துணைவிசைகளும் அவற்றுக்கு அவசியமில்லை. கிரந்த எழுத்துக்களான ஸ,ஷ,ஜ,ஹ போன்றவற்றை மட்டுமே shift உபயோகித்து எழுத வேண்டும்.

விஞ்ஞானப் பூர்வமான இந்த தமிழ்99 தட்டச்சு முறையால் குறைந்த விசையழுத்த முறைகளில் விரல்களுக்கு எளிமையான வரிசையமைப்பில் அதிக பக்கங்களை அதிக வேகத்தில் அதிக நேரம் கைகளுக்கு களைப்பின்றி தொடர்ச்சியாக தட்டச்சு செய்ய முடியும்…

இம்முறையை கற்றுக் கொள்வதும் எளிமையானது. விசைகளை நினைவில் வைப்பதும் மிகவும் எளிது. விளக்கமான ஒப்பீடு மற்றும் பயிற்சி முறைகளை கணிச்சுவடி மின்னூலில் காணலாம்.

நன்றி: தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு தளம்

******

ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?தமிழ்99 விசைப்பலகையின் அறிவியல், இலக்கண அடிப்படை நிறைகளை அறியும் முன் தமிங்கில விசைப்பலகையின் வடிவமைப்பு அடிப்படையின் போதைமையைப் பார்ப்போமா?

தமிங்கில விசைப்பலகைக்கு அடிப்படையாக இருக்கும் asdf அல்லது qwerty விசைப்பலகையில் ஆங்கில எழுத்துக்கள் அமைந்திருக்கும் வரிசைக்கு காரணம் சொல்ல முடியுமா? தட்டச்சுப் பொறிகள் முதலில் உருவாக்கப்பட்ட காலத்தில் அவற்றில் வேகமாகத் தட்டச்சினால் அவை பழுதடைந்து விடுகின்றன என்ற காரணத்துக்காக, எழுத்துக்களைக் கலைத்துப் போட்டுத் தட்டச்சும் வேகத்தைக் குறைக்க உருவாக்கபட்டத்தே இப்போது உள்ள ஆங்கில விசைப்பலகை. ஆங்கில எழுத்து வரிசைக்கே அடிப்படை இல்லாத போது அதை அடிப்படையாகக் கொண்டு தமிங்கில விசைப்பலகை உருவாக்குவது எப்படி பொருந்தும்? தவிர w = ந போன்ற முட்டாள்த்தனமான விசை அமைப்புகள் மனதில் பதிவதால் weenga wallaa irukkengkaLaa என்று தமிங்கில மடல் எழுதுவோரைப் பார்த்திருக்கிறேன். இருக்கிற தமிழ் எழுத்துகளுக்கே விசைப்பலகையில் இடம் இல்லை என்று இருக்கிற போது p, b = ப்; t, d = ட்; s, c = ச்; k, g = க என்று ஒரே எழுத்துக்களுக்கு இரண்டு விசைகளைத் தந்து இடத்தை வீணாக்குகிறோம். q, x, f விசைகளுக்கு வேலையே இல்லை! அதிகம் பயன்படாத ஜ போன்ற எழுத்துக்களுக்குத் தனி விசையாக j. அந்த இடத்தை ள, ழ, ண, ற போன்ற எழுத்துக்களுக்குத் தந்திருந்தால் ஒவ்வொரு முறை அவற்றை எழுதும்போதும் shift அடிக்கத் தேவை இல்லையே?

இந்தத் திறம் குறைந்த qwerty விசைப்பலகைக்கு மாற்றாகத் திறம் கூடிய dvorak விசைப்பலகை 1936லேயே பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், வணிகக் காரணங்களுக்காக அதைப் பரவலாக்காமல் செய்து விட்டார்கள்.

தமிழுக்கும் அப்படி நேராமல் இருக்கவும் உலகெங்கும் சீர்தரமாக ஒரு விசைப்பலகை இருக்கவும் தமிழ்99 முறை அறிஞர்களின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக அரசால் 1999ல் பரிந்துரைக்கப்பட்டது. இதில் என்ன இலக்கணச் சிறப்பு என்றால்,மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.

உயிர் குறில்கள் - இட நடு வரிசை
உயிர் நெடில்கள் - இட மேல் வரிசை.
அதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.

அதிகம் பயன்படும் க ச த ப - வல நடு வரிசை.

அடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் பக்கம் பக்கமாக உள்ளன.

ஞ ச வரிசையாக அடித்தால் அதுவே ஞவுக்குப் புள்ளி வைத்து ஞ்ச என்று எழுதி விடும். ஏனென்றால் தமிழ் இலக்கணப் படி ஞவும் சவும் அடுத்தடுத்து வரும்போது கண்டிப்பாக ஞ்ச என்று தான் வரும். எனவே, பயனர் தனியாக ஞவுக்குப் புள்ளி வைக்கத் தேவை இல்லை. ன்ற, ங்க, ஞ்ச, ந்த, ம்ப, ண்ட எல்லாமே இப்படித் தானாகப் புள்ளி வரும். ட ட என்று இரு முறை அடித்தால் ட்ட ஆகி விடும். ன்ன, க்க, ப்ப, த்த, ண்ண, ட்ட எல்லாமே தானாகவே புள்ளி வைத்துக் கொள்ளும். தமிழ்ச் சொற்களைக் கூர்ந்து கவனித்தால் இது போன்ற விசை வரிசைகள் எவ்வளவு அடிக்கடி வருகின்றன என்று உங்களுக்குத் தெரியும். இப்படி புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் தட்டச்சுவதில் 40% மிச்சப்படும். ஓரிரு சொற்களில் பின்னூட்டம் போடும் போது இதன் அருமை தெரியாது. ஆனால், பக்கம் பக்கமாகப் புத்தகம் எழுதுகிறவர்கள், மணிக்கணக்கில் விக்கி தளங்களில் கட்டுரை எழுதுகிறவர்களுக்கு இது தட்டச்சு வேகத்தை அதிகரிக்கும் வரப்பிரசாதம்.

தமிங்கில விசைப் பலகையில் கவனக்குறைவால் ர வர வேண்டிய இடத்தில் ற வும் ன-ண-ந, ல,ழ,ள குழப்பங்களும் தட்டச்சுப் பிழைகளும் மலிய வாய்ப்பு உண்டு. தமிழ்99ல் எல்லாமே தனித்தனி விசைகள் என்பதால் தவறுதலாக ஒன்றுக்குப் பதில் இன்னொன்றை அழுத்தி விட வாய்ப்பில்லை.

தமிங்கிலத்தில் த என்று எழுது tha என்று மூன்று விசைகளை அழுத்த வேண்டும். தமிழ்99 த என்று ஒரு விசை அழுத்தினால் போதும். த்+உ =து போன்ற இலக்கண அடிப்படையில் தான் எல்லா உயிர்மெய் எழுத்துக்களும் தமிழ்99ல் வருகின்றன.

தமிழில் அ, க, ச, ப, வ என்று அகரங்கள் அடிக்கடிப் பயன்படுவது வாடிக்கை. தமிழ்99ல் இவற்றை ஒரே விசையில் அழுத்தி விடலாம். அடுத்து அதிகம் பயன்படும் நெடில் ஒலிகளையும் ஒரே விசையில் அழுத்தலாம். தமிங்கிலத்தில் தோ என்று எழுத thoo அல்லது th shift o என்று நான்கு விசைகள் தேவை. தமிழ்99ல் த ஓ இரண்டு விசைகளில் எழுதி விட முடியும். எல்லா நெடில்களுக்கும் இப்படியே.

தமிங்கிலம், தமிழ்99 இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களின் key strokes per minute rate ஒன்றாக இருந்தாலும் கூட letters written per minute rate நிச்சயம் தமிழ்99ல் 40% கூடுதலாக இருக்கும்.

நம் விரலகள் இலகுவாகச் சென்று வரக்கூடிய விசைகளில் நாம் அடிக்கடி பயன்படும் எழுத்துக்கள் இருப்பதாலும், அவை இடம், வலம், மேல், கீழ் என்று முறையாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் கை வலிக்காது.

தவிர, தமிங்கிலப் பலகையால் ஆங்கிலமும் குழம்பலாம். ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்கும் நம் மனதில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறோம். ஆங்கிலத்தில் e (ஈ, இ) அதுவே தமிழில் எ. அங்கே i (ஐ) நமக்கு இ, ஈ என்று குழப்பிக் கொள்ள வேண்டாம். தமிழ்99ல் இந்த ஆங்கில எழுத்துக்கு இந்தத் தமிழ் எழுத்து என்று கொள்ளாமல் அனைத்து விசைகளையும் தமிழ் எழுத்துக்களாத் தான் மனதில் பதிகிறோம். அதனால் எந்த குழப்பமும் வராது.

முக்கியமாகத் தமிங்கிலத்துக்குப் பழகியவர்கள் மனதில் தமிழ் ஒலிகள் ஆங்கில எழுத்துக்களாகவே பதிந்திருக்கும். நன்றி என்ற சொல் w a n shift r i என்று மனதில் பதிவது நல்லது ந ன் றி என்று மனதில் பதிவது நல்லதா? தமிழ்99ஐப் பரிந்துரைப்பது வேகம், திறம், போன்ற காரணங்களைத் தாண்டி இந்தத் தமிழ்ச் சிந்தனையை முன்மொழியும் கொள்கையும் முக்கிய காரணம். இதே காரணத்துக்காகவே பாமினி போன்ற பிற விசைப்பலகை அமைப்புகளை நான் எதிர்ப்பதுமில்லை.

சிந்திக்கத் தெரியாத தட்டச்சுப் பலகைக்குத் தான் ஒவ்வொன்றையும் சொல்லித் தர வேண்டும். கணினி என்றாலே வேலைகளை இலகுவாகச் செய்யத் தானே? நம் மொழியின் எழுத்து இலக்கணத்தை அதற்குச் சொல்லித் தந்து விட்டால், அது நம் வேலையை மிச்சப்படுத்தி விடும். எளிதான உவமை சொல்வது என்றால், செல்பேசியில் dictionary modeலும் no dictionary modeலும் சொற்களை எழுதுவதற்கு உள்ள வேறுபாடு போல் தான் இது.

தமிழ்99ல் விசையின் இடங்களை நினைவில் கொள்வது எளிது. தமிழ் மட்டும் தெரிந்து கணினிக்கு வரும் ஒருவர் முதலில் ஆங்கில விசைப்பலகை எழுத்துக்கள் எங்கிருக்கு என்று பார்த்து , அப்புறம் அதில் எந்த எழுத்து தமிழுக்கு என்று புரிந்து மனதுக்குள்ளேயே map செய்து அடிப்பதற்குள், நேரடியாகத் தமிழைத் தட்டச்சும் முறையைப் புரிந்து கொள்ளவும் நினைவில் கொள்ளவும் பழகவும் அவருக்கு எளிது. ஆங்கில விசைப்பலகை அறிந்த ஒருவருக்கு தமிழ் விசைப்பலகைக்கு மாற எவ்வளவு தயக்கம் இருக்குமோ அவ்வளவு தயக்கம், சுணக்கமும் தமிழ் மட்டுமே அறிந்தவருக்கு ஆங்கிலப் பலகையைக் கற்று பிறகு தமிழில் தட்டச்ச வேண்டி இருப்பதால் வரலாம். தமிழ் மட்டும் அறிந்த பெரும்பாலான தமிழர்களை கணினியிடம் இருந்து அன்னியப்படுத்தவே இது வழிவகுக்கும். ஆங்கிலம் அறிந்த தலைமுறையை மட்டும் கணக்கில் கொள்ளலாகாது. கணித்தமிழைப் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல தமிழ் மட்டும் போதுமானதாக இருக்கும்போது, இன்னொரு விசைப்பலகை எதற்கு? தமிழில் தட்டச்ச வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் பழகு என்று சொல்வது எப்படி நியாயம்? நம்முடைய மொழியின் தேவை, சிறப்புக்கு ஏற்ப ஒரு இலகுவான விசைப்பலகையைக் கூட வடிவமைத்துக் கொள்ள இயலாத ஆங்கிலச் சார்பை, அடிமை மனப்பான்மையைத் தான் தமிங்கில விசைப்பலகை வெளிப்படுத்துகிறது. புதிதாக நமக்காக ஒன்றாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள,முயல விரும்பாத சோம்பலை என்னவென்று சொல்வது?

ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தும் ஜெர்மன், பிரெஞ்சு விசைப்பலகைகளில் கூட எழுத்துகள் இடம் மாறி இருக்கும். ஜெர்மனில் zம் yம் இடம் மாறி இருக்கும். ஏனெனில் அதில் zன் பயன்பாடு அதிகம். பிரெஞ்சு மொழியில் இன்னும் ஏகப்பட்ட எழுத்துக்களை இடம் மாற்றிப் போட்டு வைத்திருப்பார்கள். அருகருகே உள்ள மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரே எழுத்துக்களைப் பயன்படுத்தும் மொழிகள் கூட தங்கள் மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப விசைப்பலகையை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். தொடர்பே இல்லாத தமிழ் ஏன் ஆங்கிலத்துக்கே திறமற்ற ஒரு விசைப்பலகை அமைப்பைப் பின்பிற்றித் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்?

விசைப்பலகை தொடங்கி பல அறிவியல் கண்டுபிடிப்புகள், நடைமுறைகளிலும் உலக அல்லது இன்னொரு குழுவின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் நம் தேவைகள், சிறப்புகளுக்கு ஏற்ப localized ஆக சிந்திப்பது தான் சிறந்தது. எல்லார் காலுக்கும் ஒரே செருப்பு பொருந்துமா? இருக்கிற செருப்பை வைத்து ஒப்பேற்றுவோம் என்று நினைப்பதுண்டா?

தமிழ்99க்கு மாறவே முடியாத அளவுக்கு பழக்கம்,மனத்தடை இருக்குமானால், குறைந்தபட்சம் புதிதாகத் தமிழ்த் தட்டச்சை அறிமுகப்படுத்தி வைப்பவர்களுக்காவது தமிழ்99 சொல்லிக் கொடுக்கலாமே? இப்பொழுது விழித்துக் கொண்டால் தான் ஆயிற்று. இல்லாவிட்டால், காலம் கடந்து விடும்.

நன்றி: இரவி-தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு
********


தமிழ்99 விசைப்பலகை ஒட்டிகள் விற்பனைக்கு...தமிழ்99 விசைப்பலகை ஒட்டிகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்திய ரூபாய் 6/- என்ற விலைக்கு இதைப் பெற்றுக் கொள்ளலாம். இத்தொக்கைக்கு இரண்டு முழுமையான விசைப்பலகை ஒட்டிகள் கிடைக்கும். இந்த ஒட்டிகளை உங்கள் கணினியில் ஒவ்வொரு விசையின் மூலம் ஒட்டிக் கொள்வதன் மூலம் தமிழ் எழுத்துக்களைப் பார்த்து தட்டச்சு செய்து பழகிக் கொள்ள உதவும்.

கருப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துகள், வெள்ளைப் பின்னணியில் கருப்பு எழுத்துகள் என்று இரு வகை ஒட்டிகள் கிடைக்கின்றன.

ஒட்டிகள் கிடைக்கும் இடங்கள்:

சென்னை குரோம்பேட்டை
Kaviiz Computronix
87, இராசேந்திர பிரசாத் சாலை,
காயத்திரி நகர்,
அஸ்தினாபுரம்,
குரோம்பேட்டை -44.

தொடர்புக்கு
கே.மகேஷ் குமார் - 9445142862

தஞ்சாவூர்,பட்டுக்கோட்டை
SANS Computers sales and service
(opp : videocon showroom)
தலையாரி தெரு
பட்டுக்கோட்டை - 614601

தொடர்புக்கு
எஸ். ராஜா - 9865068465

சென்னையில் உள்ளோர் பாலபாரதி (9940203132), மா.சிவக்குமார் (9884070556) ஆகியோரை நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒட்டிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

சிங்கப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாரி. அரசுவைத் தொடர்பு கொள்ளலாம். அவரது மின்மடல் முகவரி pktPari.Arasu at gmail dot com

மலேசியா பகுதியைச் சேர்ந்தவர்கள் TBCDஐத் தொடர்பு கொள்ளலாம். அவரது மின்மடல் முகவரி velaiilley at gmail dot com

வட அமெரிக்கா, கனடா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நா. கணேசனைத் தொடர்பு கொள்ளலாம். அவரது மின்மடல் முகவரி naa.ganesan at gmail dot com
ஒட்டிகளை இந்திய ரூபாய் 6/- என்ற தொகைக்கு மொத்தமாகப் பெற்று சில்லரையாகவும் நீங்கள் விற்பனை செய்யலாம். இது இலாப நோக்கற்ற முயற்சி என்பதால் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை இந்திய ரூபாய் 10/-க்குள் வைத்து பலரையும் இந்த ஒட்டிகள் சென்றடைய உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு சில ஒட்டிகளைப் பெற்றுக் கொள்ளும் அன்பர்கள், இந்த இலாப நோக்கற்ற முயற்சிக்குத் தொடர் ஆதரவு தர விரும்பினால் கூடுதல் தொகையை நன்கொடையாகத் தர பாரி. அரசுவைத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு அமைப்பு.

*************
பாரி. அரசுவிடமிருந்து......

வணக்கம்!

தமிழ்99 பயன்பாட்டை அதிகரிக்கும் ஆர்வத்துடனும்... புதிதாக தமிழை கணினியில் பயன்படுத்துகிறவர்களாவது தங்கிலீஸை விட்டுவிட்டு முழுமையான தமிழ்விசைப்பலகையை பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கிலும்...

தமிழ்99 விசைப்பலகைகளை உற்பத்தி செய்யலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்....

இது தொடர்பான உரையாடலை இந்த குழும முகவரியில் பார்க்கவும்....

http://groups.google.com/group/tamil99/topics?hl=en

KL-RF007
US$5.4
1000PCS
Attan:Multimedia keyboard (Optional USB HUB)
"Windows keyboard,compatible with windows
NT/98/ME/2000/XP
PC/AT/PS-2 compatible
High-quality membrane key switch
Multiple language versions available
Multi-color available (Silver),(Dark blue),(Blue),(Purple),(Red)
21 Hot keys for easily a"KL-RF008
USD7.00/pc
1000pcs
Normal WIRELESS KEYBAORD+USB
Receiver
1.104 keys + 13 hot keys
keyboard,
2,27Mhz, 1.0-1.5M operation
distance
3, USB port for
receiver
4,Multiple language versions
available
5, Use life:over 10million
times
6,High quality membrane tactile key switch

PS2 Weired Keyboard - ரூ230-ரூ250
Wireless Keyboard - ரூ330-ரூ350 வரை உற்பத்தி செலவு ஆகலாம்....


ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் 10 விசைப்பலகைக்கான பொறுப்பேற்றுக்கொண்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் உற்பத்தியை உறுதிச்செய்ய வேண்டுகிறேன்.
இரண்டாவது மிகப்பெரிய அளவில் ஆர்வலர்கள் கிடைக்கும் பட்சத்தில் நமக்கு குறைந்த விலையில் விசைபலகைகள் கிடைக்கும்.

சந்தையை விட தரமான அதே நேரத்தில் விலைகுறைவாக உற்பத்தி செய்ய முயற்சிக்கிறோம். உலகின் பல மூலைகளில் இருப்பவர்களும் அவர்களுக்குள் குழுவாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

ஆர்வலர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்.

நன்றி

18.7.08

உலக தமிழ் மக்கள் அரங்கம்

(ஆர்குட்)இணையக்குழு உலகில் அரிய சாதனை !!!!
ஒரே ஆண்டில் 2443 உறுப்பினர்களைக் கொண்டு ஒரு மிகப்பெரிய கொள்கை ஒருங்குடன் கூடிய உலக அமைப்பை ஒருங்கிணைத்து, முதலாமாண்டு விழாவையும் சென்னையில் கொண்டாட உள்ளனர்.
அதன் முகவரி: உலக தமிழ் மக்கள் அரங்கம்
அதன் விவரம்...
--------------------------------------------------------------------

வாருங்கள் தமிழர்களே..

தமிழன் என்ற உணர்வு மூலம் உறவானவர்களே...

பேச்சில்..எழுத்தில்..மட்டுமல்ல...களத்திலும் இறங்கி பணியாற்றும் தோழமைகள் இங்கே....

உலகத்தின் அனைத்து நிகழ்வுகளையும் இந்த ஒரே கூரையின் கீழ் அமர்ந்து நம் தமிழில் கண்ணியமாக உரையாட உரிய உன்னத அரங்கம் இது...

உயிர்ப்புடன்..விழிப்புடன்..உணர்வுடன் இயங்கும் நம் அரங்கத்தில் இதயத்தால் இணைவோம்.....நட்பால் நனைவோம்...உறவுகளாய் உருவாவோம்....

வீரியமும் விவேகமும் உடைய நம் விவாதங்கள் சமூக மாற்றத்திற்கான விதைகளாக மாறட்டும்....

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்..?


என தனது அமைப்பின் விளக்கமாக கொண்டு, ஆர்குட் எனும் இணையக்குழுவில்உலக தமிழ் மக்கள் அரங்கம் அமைப்பு இயங்கிவருகிறது.

அதைப் பற்றி அதன் நிருவாகி, திரு சசிக்குமார் கூறுகையில்.........


இப்போது தான் ஆரம்பித்த்து போல் இருக்கிறது ‘உலகத்தமிழ் மக்கள் அரங்கம்’. ஓராண்டு உருண்டோடியதே தெரியவில்லை.

ஆர்குட் பகுதியில் எவ்வளவோ குழுக்கள் (Communities) இருக்கின்றன. நம்மைவிட பலமடங்கு உறுபினர்கள் கொண்ட குழுமங்களும் இருக்கின்றன. ஆனால் இவைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு நமது உலகத்தமிழ் மக்கள் அரங்கத்திற்க்கு உண்டு…..

ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளங்களில் தமிழ் மொழியின் பங்களிப்பை பெருக்குவதில் நமது குழுமம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் நமது குழும்ம் இலக்கியத்தையும் , வரலாற்றையும் அன்றாட உலக நடப்புகளையும் அலசும் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது.இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர இணையத் தளமும் , கருத்துகளத்திற்க்காக Forum வரும் ஆண்டு விழா அன்று அறிவிக்கப்படும்…
நமது உறுப்பினர்களின் துடிப்பான செயலுக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், முதல் கலந்தாய்வு கூட்டம் (சென்னை வி.ஜி.பி – பிப் 3, 2008) என்று அறிவித்தவுடன் தமிழ் மாநிலம் மற்றும் இந்திய நாட்டில் இறுந்து மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருந்தும் வருகை தந்தார்கள்.மேலும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் இருக்கிறோம் நீங்கள் நல்ல முறையில் நடத்துங்கள் என்றும் ஊக்கப்படுத்தி அதற்கான வேலைகளையும் அவர்கள் செய்தனர். இது இணையதளத்திலும் ஆர்குட் குழுமங்களிலும் இன்று வரை அதிசியமாக பேசப்பட்டு வருகின்றது, “உலகத்தமிழ் மக்கள் அரங்க உறுப்பினர்களால் மட்டும் இது எப்படி சாத்தியமாயிற்று” என்று.

ஆகவே இனிமையானவர்களே, பிப்ரவரியில் நாம் சந்தித்த அந்த நினைவுகள் இன்னும் நம் நெஞ்சங்களில் இனித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த இனிமைக்கு தயாராகியிருக்கிறோம் நாம். ஆம், ஆகஸ்ட் மாதம் 10 -08-2008 அன்று அதே விஜிபி கடற்கரையில் (VGP GOLDEN BEACH RESORT ) நமது முதலாம் ஆண்டு விழாவிற்க்காக மீண்டும் கூட இருக்கிறோம்.

இம்முறையும் மிகச்சிறப்பாக நடத்த திட்டம் தயாராக உள்ளது.
அவைகளில் சில
*உலகத் தமிழ் மக்கள் அரங்கத்தின் பெயரில் இணையதளம், விழா அன்று தொடங்கப்பட உள்ளது.

*முதலில் நமது அரங்கம் அரசாங்க பதிவு செய்து சான்றிதழ் உடன் நடைபெறமுயற்ச்சிகள் நடைபெற உள்ளது.

*பிறகு டிரஸ்ட் ஆரம்பிப்பத்ற்க்கான வேலைகளும் தொடங்கப்பட உள்ளன.(சான்றிதழ்கள் கிடைக்க சில ஆண்டுகள் ஆகும் அது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்) தொடர்ந்து நமது பணியை செய்வோம்

* நமது அரங்கத்தின் பெயரில் ஒரு Current Account ஓபன் செய்ய உள்ளோம்
இது Net Banking மூலம் நமது குழு நிர்வாகிகளுக்கு Password கொடுத்து அனைவரும் கண்கானிக்கும் படி இருக்கும்

Cheque Transaction மூலம் அதிகம் நடைபெறுமாறு பார்த்துகொள்வோம்… ஒரு சில சந்தர்பங்களில் பணம் எடுத்து செலவு செய்யும் போது அதற்க்கான ரசிதுகளை ஸ்கேன் செய்து இணையதளத்திலும் வெளியிடபடும்….

நமது பொது நல தொண்டு முதல் ஆண்டு கூட்டத்த்தொடரிலேயே அறிமுகபடுத்தப்படுகிறது நமது அரங்கத்தில் இருக்கும் திரு.ஆறுமுகம் (இவரும் பொது நல மன்றம் வைத்து செயல்படுத்திகொண்டு இருக்கிறார்)

அவர்கள் ஒரு கோரிக்கையை வைத்து இருக்கிறார்….அதிக மதிப்பெண்கள் பெற்றும் படிக்க வசதியில்லாத மாணவர்கள் இருவர் இருக்கிறார்கள் அவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும் என்று….

அவரின் கோரிக்கையே ஏற்று ஒரு தொகையை நமது முதலாம் ஆண்டு சந்திப்பு நிகழ்சியிளேயே அவரிடம் கொடுத்து நமது பொது நல தொண்டையும் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம்….
அனைவரும் பங்கேற்கும் வண்ணம் போட்டிகள் பல நடத்த திட்டமிட பட்டுள்ளது. நமது அரங்கத்தில் இது வரை எழுதிய மற்றும் இனி எழுதும் அனைவருக்கும்

போட்டிகளின் விபரங்கள் வருமாறு:

இலக்கியப் போட்டிகள்

• சிறுகதை,
• கவிதை, மரபுக் கவிதை, புதுக்கவிதை, பின் நவினத்துவ கவிதை
• கட்டுரை
• நகைச்சுவை
• பகுத்தறிவு சிந்தனைகள்…..

ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பெறலாம்.

இந்த போட்டிகளுக்குகான உள்ளடக்கம் என்ன? எந்த தலைப்பில் எழுத வேண்டும் என்பதை படைபாளர்களின் சுதந்திரத்திற்க்கே விட்டுவிடுகிறோம்…

ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் ஆண்டு விழா அன்று வழங்கப்படும்.நீங்கள் போட்டிகளை நமது ஆர்குட் தளத்திளேயே பதியலாம்..
இப்போட்டிக்கான விபரங்கள் தயாள்,பாலா,மணி செந்தில்,யுவன் பிரபாகரன்,பார்த்துக்கொள்வார்கள்.

டிரஸ்ட் ஆரம்பிப்பத்ற்க்கான வேலைகளும் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பெயர் சேர்ப்பதை உமாசங்கர் அவர்கள் செய்வார்,அவறுடன் நமது அரங்க உறுப்பினர் அனைவரும் அந்த பனியை செய்வார்கள்..

நிழற்படங்கள் & வீடியோ பதிவு மற்றும் சில பொறுப்புகளை பிரின்ஸ் பெரியார் பார்த்துக்கொள்வார்

அழைப்பிதழ்கள், அடையாள அட்டை பேனர் மற்றும் இதர வேலைகளை தமிழ் பார்த்துக்கொள்வார்.

மேலும் சில வேலைகளை நம் அரங்க உறுப்பினர்களுக்கு பிரித்து அளிக்கப்படும்.

முதலாம் ஆண்டு சந்திப்பின் விபரம் & சிறப்பு விருந்தினர்கள், நிகழ்ச்சியை பற்றிய முழுவிபரமும் வரும் ஜீலை 15-07-2008 அன்று அழைபிதழையுடன் அரங்கத்தில் தெரிவிக்கப்படும்.

மேலும் நம் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஒருவருக்கு ஆகும் செலவு ரூபாய் 300+
(300 ரூபாய் கட்டாய கட்டணம் அல்ல விருப்பப்பட்டு கொடுப்பவர்கள் கொடுக்கலாம் 300 செலுத்தாவர்களுக்கும் அனுமதி உண்டு நமது நோக்கம் அனைவரும் வரவேண்டும் என்பதே…)

கொடுப்பவர்கள் 300 ரூபாய் மற்றும் அதற்க்கு மேலும் தங்கள் பங்களிப்பை செலுத்தலாம்….மற்ற திட்டங்களுக்கு அது உதவியாக இருக்கும்.

பணம் செலுத்த K.SASIKUMAR Account No.714247960,INDIAN BANK, ANNA NAGAR WEST, ASIAD COLONY BRANCH, CHENNAI - 101

விழா அழைப்பு இதழ்:

தமிழ் குறித்த சில கேள்விகள்.......................

தமிழிற்கினிய நண்பர்களுக்கு அன்பு வணக்கம்.

தங்களிடம் தமிழ் மொழிக் குறித்த சில வினாக்கள் ...................

கணியத்தமிழ் மென்பொருள் நிறுவனத்தலைவர் திரு சி.கபிலன் அவர்களிடமிருந்து......

1. ஒரு சொல் தமிழ்ச் சொல்லா அல்லது பிற மொழிச் சொல்லா என்று தீர்மானிப்பது எப்படி?

2. ஒரு சொல் தமிழிலும்,வடமொழியிலும் வழுங்குமாயின் அது தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றதா, வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்ததா எனத் தீர்மானிப்பது எப்படி?

3. 'நட்டம்' எனும் சொல் 'நடனம்' எனும் பொருளில் தமிழில் உள்ளது.இதை 'நஷ்டம்' எனும் சொற்பொருளில் பயன்படுத்துவது தவறு என்கிறார்கள். இது போல் தமிழில் வழங்கும் ஒரு சொல்லின் மேல் புதிய பொருளை ஏற்றி வழங்குவது தவறா..?

4. இலக்கண நெறிகளை காலந்தோறும் மாறுபட்டு வருவது இயல்பு. படைப்பாளரே மொழி வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றுகின்றனர்.அவ்வாறு இருக்கையில் இலக்கணம் என்ற பெயரில் புதியன தோன்றுவதையும் தமிழ் மொழி விரிவடைவதையும் எவ்வளவு தூரம் மறுப்பது தகும்...?

5.புறச்சந்தி எனும் ஒற்று அவசியமா? அவசியம் எனில் , எங்கே போட வேண்டும் , எங்கே போடக்கூடாது, எங்கே விரும்பினால் போடலாம் என்பதை வரையறுக்கும் ஓர் இலக்கணத்தை வெளியிட வேண்டும்?

6.கிரந்த எழுத்துகள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் பயின்று வருகின்றன.ஆயினும் அது தமிழின் தன்மையை சிதைத்துவிடக்கூடாது என்பதற்காக ஊருக்குவெளியே உள்ள சேரியில் வைப்பதுப்போல் தமிழ் இலக்கணத்தில் சேர்க்காது வைக்கப்பட்டுள்ளது . இந்த மரபு தொடர்வதால் ஏற்படக்கூடிய பெருந்தீங்கு என்ன?

7.கலைச்சொற்களைத் தேடுவதில் காலத்தைக் கழிக்காமல் ஏதோ ஒரு தமிழ்ச் சொல்லைப்பயன்படுத்தி அறிவியல் கருத்துகளைத் தமிழ் நெஞ்சில் விதைத்தால், காலப்போக்கில் உரிய கலைச்சொற்களைத் தமது சிந்தனையின் போக்கிற்கும் தேவைக்கும் ஏற்ப தமிழர்கள் தாமே உருவாக்கிக் கொள்ளமாட்டார்களா..? கலைச்சொல் என்ற பெயரில் ஆங்கில மொழிச்சொற்களுக்கு இணைச்சொல் தேடுகிறார்களே..., இது தமிழ் மொழியை ஆங்கிலம் போலாக்கி அதன் தனித்தன்மையை அழித்துவிடாதா..?

8. ஒரு மொழிக்கு இலக்கணம் செய்வது எப்படி என்பது பற்றி தமிழறிஞர்கள் கருத்தினை வெளிப்படுத்துவது, ஒரு குறிப்பிட்ட இலக்கண விதிகளை வலியுறுத்துவதை விட ஆரோக்கியமானதாக இருக்கும் அல்லவா..?


முன்னைப்பழம் பொருட்டு முன்னைப்பழம் பொருள்
பின்னைப் புதுமைக்குப் பேர்த்தும் அப்பெற்றியனே...
எனச் சிவத்தைப்போல் தமிழும் இருமுனைச் சிறப்புகளிலும் ஓங்கி இருக்க வேண்டுமென்றே இந்த வினாக்களை எழுப்புகிறேன். தயவு செய்து விரிவான பதிலை அளிக்கவும்.

என்றும் மறவா அன்புடன் , சி.கபிலன்.
கணியத்தமிழ்
வழிநிலை - வெ.யுவராஜ்

7.7.08

தாய்மொழியில் கல்வி

(பாதிரி வெ.யுவராசன் எனும் பெயரில் 7-7-08 தமிழ் ஓசை நாளேட்டில் இடம்பெற்ற எனது கட்டுரை)

மொழி

கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமைவாய்ந்த சூரியக்குடும்பத்தின் புவிக்கோளிலே மனித இனத்தின் பிறப்பு புல்லின் நுனித்தொலைவே எனலாம். இத்தகைய குறுகிய பதிவினைக் கொண்ட மனித இனம் சாதாரணத் தோற்றமல்ல. நீண்டப்பயணதிற்கு ஓடிக்கொண்டிருக்கும் பரிணாம வளர்ச்சியின் நடப்புநிலையே. இந்த மனித இனம் மற்ற உயிரினத்தைப்போன்றே பிறத்தல்,உணவுத்தேடல்,உயிர்வாழ்தல்,சாதல் என வழக்கமான செயல்களினூடெ பகுத்தறியும் குணம் கொண்டிருக்கிறது. அதாவது, சிந்திக்கக்கூடிய உயிரினமாக உள்ளது. இருவேறு மனிதர்களுக்கிடையேயான எண்ணப்பகிர்வுக்கு ஊடகமாக மொழியானது உருவாக்கப்பட்டு,வடிவமைக்கப்பட்டு,வழிநடத்தப்படுகிறது.

அறிவியல் கண்ணோடு உட்நோக்கினால்,சிந்தனை என்பது மொழியாலே அமைந்திருப்பதை நாம் அறிய முடியும். தொடர்புக்கு மட்டுமல்லாமல், சிந்திப்பதற்கும் மொழி தேவையென்பதால்,மனிதன் சிந்திப்பதற்கு முன்னரே மொழி உருவானதா என்கிற வினாவும் எழுகிறது.ஆய்ந்துட் நோக்கினால்,ஒரு கருதுகோல் புலப்படும்.

மொழியானது ஒரு வித 'ஒலி' அல்லது 'சைகையே'. ஆரம்பகாலத்தில், வரிவடிவம் பெறாத ஒலியாலே குறிப்புகளை கொண்டு பின்னர்,ஒலிகளுக்கான அடையாளமாக வரிவடிவம் ஏற்படுத்தி,அதனை எல்லாரும் ஏற்று,பழகி,பொதுவான பயன்பாட்டுக்கு வருவதற்கே மிகநீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். அதன் பின்னரே,தொல்காப்பியர் போன்றோர் இலக்கண நூல்களை அமைத்து,மொழியை வழி நடத்தியிருக்கலாம். அந்தக்கோட்பாடுகளைக் கொண்டு, இன்றுவரை மொழியானது ஒழுங்குமுறைகளோடு பேணிக்காத்து வரப்படுகிறது.

இக்காத்தல் பணி யாருடையது?

மொழியை பயன்படுத்தும் பயனாளரே மொழிக்காத்தலுக்கு பொறுப்பாகிறார்.

தாய்மொழி

உலகமயமாக்க பணிகளில் தீவிரமடைந்திருக்கும் உலகநாடுகளில் பெருநாடுகள் தத்தம் ஆதிக்க வலைக்குள் உலகத்தை அடக்க நினைத்து,முன்னர் அரசியலாதிக்கம் புரிந்து, பின்னர் மொழியாதிக்கத்திற்கு படையெடுத்திருக்கின்றனர்.

இப்படையெடுப்பில்,அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் போர்க்கருவி புரிதலுக்குண்டான,எல்லா தகுதிகள் உள்ளடங்கிய,எதையும் எடுத்தியம்பக்கூடிய,தரமான மொழியே தம்மொழியெனவும்,வாழ்தலுக்குரிய மொழி தம்மொழியெனவும் மறைமுக பரப்புரைகளோடு செயல்படக்கூடியதாகும்.

மொழியால் இயலமுடியாதது என்று ஏதேனும் இருக்குமேயானால்,உயர்தனிசெம்மொழியாம் தமிழ்மொழி இன்றுவரை நீடித்திருக்கமுடியாது. மொழியின் வாழ்வு அதன் பயன்பாட்டிலும்,பயிற்றுவித்தலிலும் தான் உள்ளது. மொழியை காக்க வேண்டிய நாம் பயன்பாட்டிற்குட்படுத்தாமல் பயன்படாத மொழியென புறந்தள்ளுதல் நடப்புப்போக்காக உள்ளது. இக்கருதுகோல் நம்முள்,நம் சிந்தனையில் ஏற்படக்காரணம் பயிற்றுவித்தலின் பிழையே எனலாம்.

தாய்மொழியெனப்படுவது பிறந்ததிலிருந்து ஐம்புலன்களில் உணரக்கூடிய உண்ர்வுகளோடு ஊறிய , சிந்திக்கக்கற்றுக்கொடுக்கும் மொழியேயாகும்.ஆக, தாய்மொழி என்பது சிந்தனைமொழியாகும். தாய்மொழிவழிக்கல்வியானது,சிந்திக்கின்ற மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்ற கல்வி.

தாய்மொழிவழிக்கல்வி

சிந்திக்கின்ற மொழியில் பயிற்றுவிக்கப்படுகின்றக் கல்வி சிந்தனையைக் கூட்டுகிறது.நுணுக்கங்களையும்,அறிவியல் படைப்புகளையும் உருவாக்க தயார்படுத்துகிறது.

பட்டறிவாக , ஆதிக்கம் செலுத்தும் மொழியாக கருதப்படும் ஆங்கிலமொழியின் வளர்ச்சியின் காரணம், தம்மொழியிலேயே சிந்தித்து, தம்மொழியிலேயே அறிவியல் சிந்தனைகளை பதிந்து பரப்புவதனால்,பிறமொழிகள் மீதான மதிப்பு ஆங்கிலத்திற்கு ஈடிணையற்றது என்றும், நம் தாய்மொழி வாழ்க்கைக்குதவாததென்றும் கருதக்கூடியளவில் நம்மிளைய சமுகத்தின் மனங்களில் கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. இந்த மனமாற்றத்தை,நாம் வெளிக்காரணிகளால் ஒருபுறம் பெற்றாலும், நம் கல்வி நிலையங்களாலும் ஏற்படுத்தி வருகிறோம்.

முதலில் கல்வியானது,

கற்றலை முதன்மைப்படுத்தியதா,கற்பித்தலை முதன்மைப்படுத்தியதா,

கருத்துருக்களை முதன்மைப்படுத்தியதா,ஊடகத்தை (பயிற்று மொழி) முதன்மைப்படுத்தியதா,

அறிதலை முதன்மைப்படுத்தியதா,வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்தியதா

என்பதை சிந்திக்கவேண்டும்.

கல்வியில் கருத்துருக்களை அறிந்துக்கொள்ள,கற்றலை ஊக்கப்படுத்தவே முதன்மை குறிக்கோளாய் அமைய வேண்டும்.இக்கற்றல்முறை தாய்மொழியில் அமைந்தால் மட்டுமே முழுமைப்பெறும்.அதாவது,சிந்தனைமொழியில் கற்றலமைதல் வேண்டும்.ஆனால், சிந்தனைமொழியொன்றாகவும்,கற்றல்மொழியொன்றாகவும் இருக்குமெனில் கல்வியின் குறிக்கோளான 'அறிதலை' எவ்வாறு அடைய முடியும்?

கற்றல் மொழியானது கற்பித்தல் மொழியிலேயே அமையுமென்பதால் 'கற்றலில் தாய்மொழி' என்பதுப்போல் 'கற்பித்தலில் தாய்மொழி'யை முதலில் வலியுறுத்தப்படவேண்டும்.

இங்கு கற்பித்தலை இருவழியில் குறிப்பிடலாம்.

அவை,நூல் வழி கற்பித்தல் , நூலறிவுடையோர் வழி கற்பித்தல்.

தமிழ்மொழியில் பலத்துறை சார்ந்த நூல்கள் கிடைப்பது அரிதாகவேயுள்ளது.அப்படி இருந்தாலும், அதன் மீதானப் பார்வை தாழ்ந்தேயுள்ளது. இந்த தாழ்வுநிலைப்போக்க, நூலறிவுடையோர் நூலையியற்றவும் ,படிக்கவும் ஊக்குவிக்க முன்வர வேண்டும். இத்தகைய மாற்றங்களல்லாமல் தமிழ்மொழிவழிக் கல்வியை முழுமைப்படுத்துவது எளிதன்று.

தாய்மொழிவழிக்கல்வியின் தேவை

வளர்ந்துவரும் அறிவியலும் ,தொழில்நுட்பமும் மக்கள் தேவைகளை நிறைவேற்றவே செயல்படுகின்றன என்பது அடிப்படையுண்மை.ஆனால்,மக்களுக்காகத்தான் அறிவியலும், தொழில்நுட்பமும் எனும்போது, அதைப்பற்றி சிந்திக்கவும், ஆராயவும், கருத்துப் பறிமாற்றத்துக்குமான தேவைகளுக்கு மக்கள் மொழியிலே அவை இருக்க வேண்டுமே தவிர, கண்டுப்பிடிப்புகளின் மொழிகளிலிலேயே ,கண்டுப்பிடிப்பாளர்களின் மொழிகளிலிலேயே அமைய வேண்டும் என்பதல்ல. ஆனால், பெரும்பான்மையான கண்டுப்பிடிப்புகள் வட்டார மொழிகளில் அமைக்கப்படவில்லை.

சரி. தாய்மொழிவழிக் கல்வி இந்நிலையை எங்ஙனம் மாற்றும் ?

பிறமொழி வழி க் கல்வியை விட தாய்மொழிவழி வழங்கப்படும் கல்வியால், தானாக புதுமைகளை சிந்திக்கக்கூடிய ஆற்றலை வழங்க முடியும். சிந்தனை மொழியில் கல்வித்தரும்போது சிந்தனை வலுவூட்டப்படும்.ஆனால்,பிற மொழிக் கல்வியினால் அம்மொழியறிந்து பின்னர்,அம்மொழியில் அறிவு பெருக்குதல் என்பது கால விரயம்.ஆகையால், ஆங்கில மொழியறிந்து, பின் ஆங்கிலமொழி வழியறிவியலறிந்து அறிவுப் பெறுவதைவிட, கருவறையிலிருந்து தாயின் மடியில் தவழ்ந்ததிலிருந்து,இயற்கையாய் படிப்படியாக எவ்வாறு அறிந்துக்கொள்ளல் நிகழ்கிறதோ அவ்வாறு தாய்மொழி வழி அறிவியலறிவது முழுமையான , பல புதுமைகளை படைக்கும் தமிழர்களாய் உருவாக்கிட வழி செய்யும்.

இன்று, அறிவுத்துறைகளில் மிளிரும் வளர்ந்த நாடுகளில் கல்வியானது தத்தம் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுகிறது.அவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே முன்னிலை வகிக்கின்றனர் என்பது காணும் உண்மை.

இதனையுணராத நம்மில் பலர் ஆங்கில வழிக்கல்விக்கு முதன்மையளிப்பதால்,இன்றளவில் தமிழகத்தைப் பொறுத்தவரை ஆங்கிலம் மிகப்பெரியளவில் பயிற்றுமொழியாகவும், விருப்பத்தின் பேரில் மட்டுமே தமிழில் பயிலும் நிலையும் காணப்படுகிறது.

தாய்மொழிவழியில் தொடக்கக்கல்வியளிக்கும் போது,குழந்தைகள் தாம் நினைக்கும் எண்ணங்களையும்,தெரிந்த தகவலை தமக்கு தெரிந்த மொழியில் உடனே வெளிப்படுத்துகின்றனர்.ஆனால்,பிறமொழிக் கல்வி மோகத்தால் குழந்தைகளுக்கு ஆங்கில வழியில் தொடக்கக்கல்வியை தரும்போது ,தன்சிந்தனையும் ,உடனே தம்மை வெளிப்படுத்துகின்ற தன்மையும் குறைவாகவே உள்ளது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. தாய்மொழியின் மூலம் படிக்கும்போது தான் முழுமையானப் பொருளை மாணவர்களால் அறிந்துக்கொள்ள இயலும்.தாம் உணர்ந்தவற்றை தங்குதடையின்றி வெளிப்படுதும் வாய்ப்பும் அவர்களுக்கு ஏற்படும். இதனால் தன்னம்பிக்கையுடன் பலப் புதுச் சிந்தனைகள்,கண்டுப்பிடிப்புகள்,ஆய்வுகள் என தம்மை ஈடுப்படுத்திக்கொள்ளமுடியும்.

பொதுக்கல்வி

தமிழகத்தில் இருக்கின்ற கல்வி நிலையங்கள் ஆளுக்கொரு பாடத்திட்டதை கையில் எடுத்துக்கொண்டு கல்விப்புகட்டுவதால் சமச்சீரான கல்வியை எல்லாருக்கும் தருவது என்பது சாத்தியமற்றது. பொதுக்கல்வி முறையை நடைமுறைப்படுத்தி தரமான கல்வியை தரும்போது மட்டுமே அனைவருக்குமான சரியான அறிவுப்புகட்டல் சாத்தியப்படும். அந்தவகையில் அரசுப்பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, பயிற்றுவித்தோமேயானால் பொதுக்கல்விக்குறித்தான வரவேற்பு எல்லவகை மக்களிடமிருந்து இருக்கும்.

அதுமட்டுமல்லாது, தமிழ்வழி கல்வி என பள்ளிப்படிப்பில் அளித்துவிட்டு , மேற்படிப்புக்கு செல்லும்பொது, அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,மருத்துவம் போன்ற படிப்புகள் முழுமையாக ஆங்கிலமயமாக்கப்பட்டிருக்குமானால், துறை சார்ந்த தேடலிலும்,கற்றலிலும்,மாணவர்களுக்கு நெருக்கடியை தான் தரும். அத்தகைய நெருக்கடியை தடுக்க ஆரம்பக்கல்வியிலிருந்து,மேற்படிப்பு வரையிலும் தாய்மொழிவழிக்கல்வி நிறைவேற்றவேண்டும்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கல்வியை தரும்போது மட்டுமே அதன் மீதான பற்றும், பின்பற்றலும் அதிகரிக்கும். ஆக,தாய்தமிழ் மொழிவழிக் கல்வியை தந்துவிட்டு,அதனை வாழ்க்கைக்கு உதவாதப்படி அதை பயன்பாட்டுக்குட்படுத்தாமலிருந்தால் வீணான முயற்சியே. ஆகையினால், துறைதோறும் தமிழை பயன்படுத்தவேண்டும். மக்களின் அன்றாட பயன்பாட்டில் தமிழ் சரளமாக இயங்கவேண்டும்.

கணினியில் தமிழ்,அறிவியலில் தமிழ்,சட்டத்தில் தமிழ், ஆட்சியில் தமிழ் ,ஊடகத்தில் தமிழ், என முழுமையான வடிவமைப்புக்குட்படுத்தி,சிறந்த முறையில் நிறைவேற்றுவோமேயானால் நிச்சயமாக விரைவிலேயே "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" காணும் நிலையுண்டாகும்.

இணைவோம் தமிழர்களாய்,இயற்றுவோம் தமிழால்.

[ (7-7-08) தமிழ் ஓசை நாளேட்டில் கருத்துப்பெட்டகம் பகுதியில் வெளியான தாய்மொழியில் கல்வி எனும் கட்டுரையின் மூல வடிவம். பக்க ஒருங்கிணைப்புக் காரணமாக சில வரிகள் நாளேட்டில் இடம்பெறவில்லை.]

5.7.08

அறிவியல்தமிழ்

திருவள்ளுவராண்டு 2038,தை 2ம் நாள்(சுறவம் 2) செவ்வாய் அன்று, தமிழ் மொழியில் அறிவியல் படைப்புகளை ஊக்குவிக்கவும்,அறிவியல் நூல்கள் படைக்கவும், படிக்கவும்,அறிவியல் மக்களுக்கானது, மக்களுடைய மொழியில் அறிவியல் இருக்கவேண்டியதான முன் வரையறைகளோடு, ஆர்வலர்களோடு இணைந்து , வந்தவாசியில் 'அறிவியல்தமிழ் மன்றம்' தொடங்கப்பட்டது.ஆனால் நடைமுறை சிக்கல்கள் காரணமாக இயக்க முடியாமல் போன இம்மன்றம்,இணையத்தில் மீண்டும் மலர்கிறது....
காணவும்..........

அறிவியல்தமிழ்


தமிழ்த்தோட்டம் இதற்கான பணியில் முழுவதுமாக இறங்கியுள்ளது.


இணைவோம் தமிழர்களாய்!!! இயற்றுவோம் தமிழால்!!!

உங்கள் மேலான கருத்துகளை வேண்டுகிறோம்.

1.7.08

அறிவியலால் வெல்வோம்

ஓயாத மழை, வெள்ள பெருக்கு, தங்கமுடியாத குளிர், பனிச்சீற்றம், சூறாவெளிகள், நில நடுக்கம், ஆழிபேரலை என்று எதிர்பாராத இயற்கை சீற்றங்களால் பல்வேறு பகுதிகள் அழிவுகளை அனுபவித்து வருகின்றன. ஜனவரி பாதியில் சீனாவின் தென்பகுதிகள் கடுமையான பனி மழையால் அல்லலுற்றன. உள்ளுர் அரசுகள், பொது மக்கள், சீன விடுதலை படையினர் அனைவரும் இணைந்து போராடி, இயல்பு நிலையை மீட்டனர்.

பனி மழை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பாதைகள் மற்றும் தாவரங்கள் அனைத்திலும் பனி மூடிக்கொள்வதால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலையை அது ஏற்படுத்தும். பாதையில் நடந்தால் வழுகிவிழத்தான் நேரிடும். மேலும் கடும் குளிர் உடலை தாக்கும். இவ்வாறு பன்முக இடர்களை பனி மழை கொண்டு வருகிறது. பனி மழை எப்படி உருவாகிறது என்று அறியும் ஆவல் ஏற்படுகிறது அல்லவா! பனியும் மழையை போல வழி மண்டலத்தில் தான் உருவாகின்றது. ஆனால் வழி மண்டத்திலுள்ள ஈரபதத்தை ஒன்றுக்கூட்டி மழையாகவும், பனியாகவும் பெய்யச் செய்வது எது என்று நீண்டகாலமாக வானிலை ஆய்வாளர்களுக்கு கேள்விக்குறியாகவே இருந்து. கடந்த திங்கள் கடைசி வாரத்தில் வெளியான அறிவியல் இதழின் புதிய பதிப்பில் பாக்டீரியா என்கிற நுண்ணுயிரியே அதற்கு காரணமாக இருக்கின்றது என்ற அறிவியலாளர்களின் புதிய ஆய்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.


லுசியான மாநில பல்கலைக்கழக உயிரின அறிவியல் துணை பேராசிரியர் ஃபெர்ன்டு சி. கிறிஸ்னரும், அவரது சகாக்களும் அண்டார்டிகா, பிரான்ஸ், மென்டானா மற்றும் யுன்கோன் உள்ளிட்ட இருபது இடங்களிலிருந்து பனிமாதிரிகளை பெற்று இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். வழிமண்டலத்திலான ஈரப்பதத்தை பாக்டீரியா நுண்ணுயிரி தான், தனது செயல்பாட்டால் ஒன்றுகூட்டி பனிமழையாக பொழிய செய்கிறது என்பதை அவர்கள் ஆய்ந்து அறிந்துள்ளனர்.
பனியில் இவ்வகை நுண்ணுயிரி மிகவும் செயல்திறன் மிக்கதாய் உள்ளதாகவும், உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட தாவரங்களை பாதிக்கும் Pseudomonas Syringae இன நுண்ணயிரி தான் ஈரபதத்தை பனியாக உருவாக்குகின்றது என்றும் கண்டுபிடித்துள்ளனர். எனவே பனி மழை ஏற்படும் பகுதியிலுள்ள தாவரங்கள் வேகமாக பாதிப்படைந்து வேளாண் இழப்பு அதிகம் ஏற்படும். இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் முன்பு இதே நுண்ணுயிரி தான் உலர்ந்த வானிலையை ஏற்படுத்தி பனி மழை உருவாகாமல் தடுக்க உதவியதாம். தற்போது அதே நுண்ணுயிரி வகை தான் பனி மழையை தூண்டுகின்ற உயிரியாகிவிட்டது. இவ்வகை நுண்ணுயிரிகளில் மேற்கொள்ளப்படும் தொடர் ஆய்வுகள் பனி மழையை கட்டுபடுத்தும் முறைமைகளை கொண்டு வருமா? அறிவியல் தீர்வுகளை தருமா? என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
பருவகாலங்கள் சீராய் வந்து
நெல்லும் பயிரும் விளைந்தது எல்லாம்
அந்தக்காலம் ஒஒஒ அந்தக்காலம் - இப்போ
இயற்கை சீற்றமே மக்களை வாட்டுது
வழி தெரியாமல் விழி பிதுங்குகிறோம்
இந்தக்காலம் ஒஒஒ இந்தக்காலம்
சீனாவில் ஏற்பட்ட இந்த பனிசீற்றம் கடந்த 15 ஆண்டுகளில் காண்டிராத கடுமையான பனிசீற்றமாகும். இது காலநிலை மாற்றம் ஏற்படுத்திய விளைவாகவும் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சீனா மாசுபாடுகளை அகற்றி பசுங்கூட வாயுக்களின் வெளியேற்ற அளவை குறைக்கும் கடப்பாடுகளை மேற்கொண்டு திட்டமிட்ட இலக்குகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே நனவாக்கி வருகிறது. உலகில் காலநிலை பிரச்சனைக்கு தகுந்த தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் நாடாக சீனா மாறியுள்ளது. தொழிற்சாலைகள், போக்குவரத்து, விமானச்சேவை, தொடர் வண்டி மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு எரியாற்றல் மிக முக்கியமாகும். இவை வெளியேற்றும் மாசுபாடுகளை, பசுங்கூட வாயுக்களை குறைத்து கட்டுபடுத்துவது என்பது காலநிலை மாற்றத்திற்கு ஆக்கபுர்வ பங்காற்றுவதாகும். எனவே பல்வேறு மாற்று எரியாற்றல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காற்று, நீர், சூரிய, உயிரின வள ஆற்றல்கள் இதற்கு சில எடுத்துக்காட்டுகள்.
சூரிய ஆற்றலை பயன்படுத்துவதற்கான தாயாரிப்பு முறைகளில் அதிகமான மாசுபாடுகள் வெளியேற்றப்படுகின்றன என்ற எண்ணம் பரவலாக உள்ளது. ஆனால் எண்ணெய் எரியாற்றலை விட சூரிய எரிகலன் தயாரிப்பு மிக அதிகமான மாசுபாட்டை உருவாக்கும் என்பதை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையான நான்கு முக்கிய வியாபார நோக்கிலான நிறுவனங்கள் உள்ளிட்ட 13 தொழில் நிறுவனங்கள் வெளியேற்றிய மாசுபாட்டு தரவுகளை அவர்கள் சேகரித்தனர். அவற்றை ஆய்வு செய்து பார்த்த போது சூரிய எரிகலன் தயாரிப்பால் குறைவான மாசுபாடு தான் உருவாகிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.


சூரிய எரிகலன் காரீயம், பாதரசம், மற்றும் நீலீயம் போன்ற உலோக வகைகளால் தயாரிக்கப்படுவதால் உலக வெப்பமேறலுக்கு அடிப்படையான கரியமில வாயுவை வெளியேற்றுகிறது என்பதை அறிவியலாளர்கள் மறுக்கவில்லை. ஆனால் எண்ணெய் எரியாற்றலை விட 90 விழுக்காடு குறைவான மாசுபாட்டை தான் சூரிய எரிகலன் உருவாக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். சூரிய எரிகலன் தயாரிக்க நீலீயம் பயன்படுத்தப்படுவதால் வரும் அமில வெளியேற்றம் நிலக்கரியை எரியாற்றலாக பயன்படுத்தும் மின்சார நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் 300 மடங்கு குறைவாகும் என்று நியுயார்க் அப்டனிலுள்ள புரூக்காவன் தேசிய ஆய்வகத்தின் சுற்றுச்சூழல் பொறியல் ஆய்வாளர் வாசிலீஸ் ஃபிதனாகிஸ் தெரிவிக்கிறார்.
சூரிய ஒளியாற்றல் இல்லாதபோது சூரிய எரிகலன் தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணெய் எரியாற்றலை தான் நம்பியுள்ளன. சூரிய ஆற்றலிலான மின்சாரத்தை பெருமளவு சேமித்து வைத்து தற்சார்பாக செயல்படக்கூடிய முயற்சிகளை அறிவியலாளர்கள் ஆய்வுகள் மூலம் தெடர்ந்து வருகின்றனர். சூரிய ஆற்றல் பெருமளவு சேமிக்கப்பட்டால் காலநிலை மாற்றதிற்கான மாற்று ஆற்றலாக, மாசுபாடுகள் மிகவும் குறைந்த ஆற்றலாக மாறும். இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகள் வருங்கால தலைமுறையின் நலமான வாழ்வை வளர்க்க வேண்டும். காலநிலை மாற்ற தடுப்பிற்கான அறிவியல் ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் தற்கால பலவீனங்களை வெல்லும். வளரும் தலைமுறையினருக்கு புலரும் நல்லக்காலம்.
காடுகள் வளர்த்து இயற்கையை காத்து
மாசுபாட்டை இல்லாமல் செய்து
தலைமுறை காப்போம் வளரும்
தலைமுறை காப்போம் – மனிதன்
தனது பொறுப்பை உணர்ந்து கொண்டு
இயற்கையோடு வாழ்ந்து விட்டால்
வருங்காலம் இனி நல்லக்காலம்
வருங்காலம் இனி நல்லக்காலம்

நன்றி: சீன வானொலி இணையதளம்.

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...