வறுமை எனும் நிலை மாற ஒன்றிணைய உறுதி ஏற்போம்

புதிய ஆண்டின் தொடக்கத்திற்கு முதல் நாள்,
மது போதையில் என்ன செய்கிறோம் என்பதில் நிதானம் இல்லாமல் உர்... உர்.. என்று வாகனங்களில் பறக்கும் சாலையில் சில காட்சிகள் என் கண்களை கசியவிட்டன...

அந்த சாலை கடற்கரையை நோக்கி செல்லும் சாலை..
அவ்வழியாக கார்களும், பைக்குகளும் அணிவகுத்து சென்றுக்கொண்டிருந்தன.

நள்ளிரவு நெருங்கும் அதேசமயம், ஊர்ந்து செல்லும் வாகனங்களுக்கிடையே சிறுவர்கள் முகத்தில் சோர்வுடன் குல்லாக்களையும், பலூன்களையும் விற்று கொண்டிருந்தது பார்வைக்குள் ஆழ நுழைந்தது...
அதனை வாங்க யாரும் முன்வராத நேரத்தில் என்னையும் கடந்து சென்ற அந்த காட்சி இன்னமும் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறது.

இதே நேரத்தில்.. மற்றொருபுறம் சொகுசு மது விடுதியின் வாசலில் பிச்சை எடுக்கும் சில வயதான உருவங்கள் கையேந்தி நின்றிருந்தன.
சென்னையின் முக்கிய இடங்களில் நான் கவனிக்க நேர்ந்த அந்த காட்சிகள் மறையாத தருணத்தில்..

விடியற்காலை , சாலையில் நடக்கும் போது நம்மை கடந்து சென்ற மூன்று இளம்பெண்கள் (சிறுமிகள்) ஹான்ஸ் புகையிலையை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டு சென்றது பேரதிர்ச்சி ஏற்படுத்தியது.

என் கண்கள் அந்த பெண்களின் மீதே இருந்தது.

அவர்கள் விலைமாதர்களாக கூட இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அவர்கள் உருவத்தோற்றத்தில் வறுமை படிந்திருந்தது. பரிதாபத்தை ஏற்படுத்தியது.

இதற்கு மேல் ஆராய்ச்சியில் இறங்க என் மனம் செல்லவில்லை.

மகிழ்ச்சி பொங்கும் மனிதர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களால் தங்களை புதுப்பித்துகொள்வதாய் உறுதி மொழிகள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

நான் கண்ட அந்த காட்சிகள் தினமும் நடப்பதுதான் என்றாலும் என்றாவது ஒருநாள் அது மாற வேண்டும் என்பதுவே எண்ணம்.

வறுமை எனும் நிலை மாற ஒன்றிணைய உறுதி ஏற்போம்.

புத்தாண்டு...!

புதிய ஆண்டு என்பதெல்லாம்.. கால ஓட்டத்தின் வெறும் அடையாளங்கள் தான்...

கிறித்து பிறப்பு அடிப்படையில் தோன்றிய ஒரு கால அலகினை உலகளாவிய கொண்டாட்டமாய் மக்கள் களித்துக்கொள்கிறார்கள்..

ஓர் ஆய்வு சொல்கிறது... உலகின் மொழிகளை அழிக்கும் கொடுங்கொல்லியாக ஆங்கிலம் இருந்து வருகிறது என்று.

தொழில்நுட்ப வளர்ச்சியில் கண்கூடாகவே நாம் அதை கண்டு வருகிறோம்..
மொழி அழிவு என்பதில் இனத்தின் அழிவையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இன அழிப்புக்கு போர் மட்டுமல்ல.. மொழி மீதான ஆதிக்கமும் தான் காரணமாகிறது.
கிறித்து சமயத்தவரின் ஆண்டு முறை இன்று உலக மக்களின் தவிர்க்க முடியாத நாட்காட்டியாகிவிட்டது.

ஆனால், தமிழ் சமயம் / சமூகம் தனக்கான அடையாளங்களை இழப்பதையும், இனத்தார் சற்று கருத்தில் கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் தற்போது என்னுள் மேலோங்கி இருக்கிறது.

உலக பொதுமறை எழுதிய பொய்யா புலவன் வள்ளுவ பெருந்தகை பிறப்பையொட்டி, சுறவம் (தை) முதற்கொண்டு ஆண்டு பிறப்பையும், தொடர்முறையையும் பின்பற்ற வேண்டும் என தமிழ் அறிஞர் பெருமக்கள் வகுத்தனர்.

ஆனால், தமிழ் மரபு, மாண்பு, பண்பு, அறிவியல் ஆகியவற்றுக்குப் பொருத்தமாகதவையும், பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழினத்தின் காலத்தை வரையறுக்க இயலாத ஆண்டுமுறையை பின்பற்றி வருகின்றனர்.

இது போன்ற தமிழர் தம் ஒருமைக்கொள்ளாத சூழலும், நம் இனத்தின் அடையாளங்களை, பண்பாட்டு சுவடுகளை நாமே ஐயத்திற்காளாக்க காரணமாகிறது.

தமிழர் பெருமைகளை பேச தமிழர் திருநாளாம்.. தைப்பொங்கல், தமிழ் புத்தாண்டை சிறப்புற கொண்டாடுவோம்...

யாகாவாராயினும் நாகாக்க... நாகாக்க..

ராசா...

அப்படி என்ன தான்
உங்க கிட்ட கேட்டாலும்
உங்களுக்கு ஏன் கோபம் வருது...

அறிவு இருக்கா உங்களுக்கு...
நீங்க கேட்ட அதே கேள்வியை நானும் கேட்கிறேன்
அறிவு இருக்கா உங்களுக்கு...

பொது இடத்தில் ஊடகங்கள் முன்னிலையில்
"என் கிட்ட பேச உனக்கு என்ன..."-ன்னு பேசினால்..
உங்க கிட்ட கேட்க என்ன தகுதி வேணும்னு நினைக்கிறீங்க..
இடம் பொருள் ஏவல் வேண்டாமா..

எங்க வந்து என்ன கேட்கிறேன்னு நீங்க கேட்டதும் சரிதான்.

உங்க துறை சார்ந்த சக கலைஞன் பற்றிய சர்ச்சைக்கு
உங்களின் எதிர்வினையை கேட்க முற்பட்ட செய்தியாளன்
கேட்பதில் என்ன தவறாகி விட்டது..

பொதுவாழ்வில் வந்தாச்சு பொதுஜன ஊடகத்தில் இருக்கிறீங்க..
ஒருதுறையின் அடையாளமா உருவாகிட்டீங்க..

நீங்க உயர்ந்த இடத்தில் இருக்கீங்கன்னு
மிதப்பில் இருந்தா..
உங்க மிதப்புக்கு மதிப்பு தரனுமா என்ன..

ஏய் ஊய்ன்னு பேசுறீங்க..

இப்ப பாருங்க வீதியில வெளிப்பட்டு முகம்சுழிக்க வைத்து சிறுமைப்பட்டு போறீங்க..

குப்பையோடு குப்பையா இருந்ததை கிளறி,
அது என்னன்னே தெரியாதவனையெல்லாம் கேட்க தூண்டி,
பாதி பேருக்கு "பீப்"க்குள்ள இருந்த சொல்லுக்கு பொருளே தெரியாது...
மிச்ச பேர் அந்த சொல்லையே இதுவரைக்கும் கேட்டது கிடையாது..
இதை எதிர்க்க ஒரு கூட்டம்..
இருக்குற பிரச்சனைகளை மறைக்க இது தான் இப்ப ஊட்டம்.
கதைநாயகிகளாக
பெண்களை எந்த நோக்கில் வைத்திருக்கிறார்கள்..?
பெண்களை "இழி" பொருளாக தான் திரைப்படங்கள் காட்டுகின்றன.
நாயகனின் இன்பகிழத்தியாகதான் இருக்கிறாள்
நாயகி...
மார்பகங்களும்..
மற்ற பாகங்களும் மிகைப்படுத்தி பார்க்கும் ஆண்களை வசைப்படுத்திட
நாயகிகள் தானே தசையாட்டம் ஆடுகிறார்கள்.
இதையெல்லாம் பெண்கள் கூட்டம்
வீதியிலிறங்கி கண்டித்திருந்தால்

ராசாவுக்கு பீபி ஏற்றிவிட்ட
பீப் எல்லாம் வந்திருக்குமா..?

பீப்பை பாடினவனும் திட்டுவாங்குறான்...
அதை ஏன்டா என்கிட்ட கேட்கிறேன்னு ராசாவும் திட்டு வாங்குறாரு..

ஆக... யாகாவாராயினும்
நாகாக்க... நாகாக்க..

(Beep) பீப்-க்கு ஒரு காரணம் இருக்கு !

பீப்-க்கு ஒரு காரணம் இருக்கு !

நல்ல வாயை விட நாற வாய் தான் ஸ்மார்ட்டாம்..!

புரியலையா?
எவன் ஒருத்தன் சாபமிட்டு கண்டபடி திட்டி பேசுறானோ...
அவன் நல்லவாய்களை விட ஸ்மார்ட்டானவர்களாக அண்மைய ஆய்வு சொல்கிறது...

கடுப்பேத்துற சூழலில் ஒருவர் உடனே தன்னை வெளிப்படுத்தி, நாயே, பன்னி, எருமை, ம..., ப.., பி.., பு.., பீப் பீப் பீப் ன்னு குறுகிய நேரத்தில் தன்னிடம் உள்ள சொல்வளத்தை வெளிக்கொட்டுகிறாராம்...

இது எல்லாராலும் முடியாது...

அதனால் தான் சொல்வளம் இல்லாத சிலர் பொறுமைசாலி என்ற போர்வையில் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்களாம்...
இங்கதான் கவனிக்கனும்...

பெரும்பாலும் கேவலமான சொல்லைதான் பயன்படுத்துதாகவும், அதுவும் பெண்களை இழிவுபடுத்தும் சொல்லைதான் பயன்படுத்துவதாகவும்... ஆய்வு சொல்கிறது.

இது என்ன கேடுகெட்ட ஆய்வுன்னு நினைக்காதீங்க...

ல்லூரி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தான் இந்த திறமைசாலிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுல முக்கியமா கவனிக்க வேண்டியது..

ஆண்களுக்கு இணையா பெண்களும் பொது இடம் கூட பார்க்காம கண்ட வார்த்தைகளால் திட்டுகிறார்களாம்....

இருந்தாலும் சிம்பு பண்ணது தப்புதானேன்னு சொல்றவங்களுக்கு..

என்ன (பீப்)-க்கு லவ் பண்றன்னு சிம்பு திட்டுற இடமும்..
உனக்கு அறிவு இருக்கான்னு இளையராசா திட்டுற இடமும்..
ஒத்து போகுது..
இரண்டு பேருமே பாதிக்கப்படுறாங்க..
சூழல் வேற.. நபர்கள் வேற..

திட்டுவதுதான் காட்சி..

பயங்கர சொல்வளம் கொண்ட சிம்பு பீப்ன்னு சொன்னாரு..
தயங்குற சொல்வளம் கொண்ட ராசா அறிவு, அறிவுக்கு அறிவுன்னு கடுப்பேறி போனாரு..

வரலாற்றில் இடம்பிடித்த யாஷினிக்கு வாழ்த்துகள் !

தொடர்வண்டியில் பயணிப்போருக்கு திருநங்கைகள் என்றால் ஒரு புரிதல் இருக்கும்...

தாம்பரத்தில் இருந்து எழும்பூர் வரை பயணிப்பது என்று வைத்துக்கொள்வோம்.. எல்லா நிறுத்தங்களிலிருந்தும், பார்வை மாற்றுத்திறனாளிகள் கைவினை பொருட்கள் அல்லது தின்பண்டம் விற்பது, வயதானோர் பிச்சை எடுப்பது, சிறுவர்கள் வறுத்த நிலக்கடலை விற்பது போன்ற காட்சிகள் காணாமல் சென்று விட முடியாது.

இவர்களுக்கிடையில் திருநங்கைகளையும் யாரும் தவிர்த்திருக்க முடியாது.

மேற்சொன்ன எல்லோரையும், எளிதாக புறக்கணித்திருப்போம்.
ஆனால், திருநங்கைகள் தூரத்தில் தெரியும் போதே, சிலர் தூங்குவது போன்றும், செல்பேசியில் பேசுவது போன்றும், வழி ஓரத்தில் உட்கார்ந்திருப்போர் எழுந்து வாசல் நோக்கி செல்வதும் என அவர்களை தவிர்க்க முயற்சிக்கும் காட்சிகள் சற்று அச்சத்தையும் உருவாக்கி விடுகின்றன.

திருநங்கைகள் பிச்சை எடுப்பது, அவர்களின் வாழ்வாதரத்திற்கான வழி என்றாலும்.. மேனிலை என்பது அவர்கள் வாழ்வில் இனி இருக்கப்போவதில்லை என்று தான் கடந்த காலம் காட்டியிருக்கிறது.

இன்று மேற்படிப்புகள் படித்த, அறிவில் தெளிந்த, சமூகத்தை புரிந்த மனதளவில் யாரையும் எதிர்கொள்கிற பக்குவத்தில் திருநங்கைகள் இருப்பதை காண முடிகிறது,

குறிப்பாக முகநூலில் பலர் தங்கள் துயரங்களை, உரிமைகளை உரக்க பேசுகிறார்கள்.

சிலர் நன்கு படித்து பணியில் இருப்பதும் காண முடிகிறது.

அந்தவகையில், பிரித்திகா யாஷினி காவல்துறையில் பொறுப்புள்ள பதவியில் நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்தி திருநங்கை சமூகத்தில் ஏற்றமிக்க வழியை உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளதாகவே எண்ணுகின்றேன்.


இது யாஷினிக்கு எளிதாக கிடைத்த பதவி அல்ல. கடும் போராட்டங்கள், புறக்கணிப்புகளை தாண்டி நீதித்துறையின் துணையால் கிடைத்த வெற்றி.

இது அடுத்த கட்ட பயணத்திற்கும், திருநங்கையர் மீதான சமூக பார்வையை சீராக்கும் முக்கிய கட்டம் என்றே சொல்லலாம்.

பாலியல் தொழிலாளர்களாகவும், பிச்சை எடுப்போராகவும் இழிஉருவமாக காண்பிக்கப்பட்ட காட்சிகள் யாஷினி போன்ற இளம்திருநங்கையரின் முயற்சியிலும், நோக்கத்திலும் மாற போகிறது என்றே சொல்லலாம்.

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கத் தேவையான சட்டதிருத்தங்களை கொண்டுவரும்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, கல்வியிலும் வேலையிலும் திருநங்கையர்களுக்கு உரிய வாய்ப்புகள் கிட்ட தொடங்கியுள்ளன.

ஆனால், அது போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாகின்ற என்ற நிலை கண்டால் வருத்தமாகவே உள்ளது.

எனினும் தடைகளை தகர்த்து, வரலாற்றில் இடம்பிடித்த யாஷினிக்கு வாழ்த்துகள்.. !


நடிகர்களை மிகைப்படுத்துவது ஊடகமா? ஊர்மக்களா?

நடிகர்களை ஊடகங்கள் மிகைப்படுத்தியதில் தவறு ஒன்றுமில்லை..

சமூக உளவியலை புரிந்துக்கொள்ள வேண்டும்.

நடிகனும், நடிகையும், திரைப்படங்களும் என் பொழுது போக்காக... மன்னிக்கவும்... களிப்பு கருவிகளாக மாற்றியது யார்?

நான் வாங்கி படிக்கும் பல்சுவை இதழில் அவர்களையே பக்கம் பக்கமாக நிரப்ப அனுமதிப்பது யார்?, அப்படி நிரப்பும் போதெல்லாம் அவை விற்று தீருவதையும் யார் செய்வது..

நான் மகிழ்ந்து கிடக்க சில நூறு செலவானாலும், திரைக்கூடம் செல்ல பணித்தது யார்?

நடிகன் வெறும் நடிகன்...

அவனை கண்டு வியப்பு கொள்வதும், அருகில் வந்தால் நெருங்கி படம் எடுத்து பகிர்வதும் பொதுபுத்தியாகி போனது.

ரசித்தல்.....

நடிகனும், நடிகையும் திரையில் கண்ணுக்கு குளிர்ச்சியாகிறார்கள்...

நான் வாழ முடியாததை, வாழ நினைப்பதை திரையில் வாழ்ந்து காட்டுகிறார்கள்...

உதாரண மனிதர்களாகிறார்கள்...
என் ரசனைக்குரியவராகிறார்கள்....

இவர்கள் திரையில் இப்படியென்றால், நிஜவாழ்க்கையில் எப்படியிருப்பார்கள்...

அவரைப்போல் வாழ நானும் தயாராக மனம் விரும்பி, அவர்களின் சொந்த நடவடிக்கையில் கவனம் கொள்கிறது..

இதற்கு அப்பப்ப தீனிப்போட்ட ஊடகங்களை நான் ஒருநாளும் உதாசீனப்படுத்தியதில்லை..

அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க நானும் அனுமதிக்கிறேன்..

ஒருநாள் அதையே காட்டும் போது என்னடா வம்பாப்போச்சு, அப்பப்ப களிப்பூட்டாமல் அப்படியே திணிக்கிறார்களே...
என்று கோபம் வருகிறது...

இப்ப திட்டி தீர்க்கிறேன்...

அவர்கள் என்ன செய்வார்கள்...

இதுபோன்ற நிகழ்ச்சிகளும், நிகழ்வுகளும் தான் அதிகம் பார்க்கப்படும் பட்டியலில் இருக்கிறது.

இதை பார்த்த நம்மை, பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். திட்டினாலும் நம்மக்கள் அதை பார்ப்பார்கள்.. என்றே வணிகம் செய்கிறார்கள்.

ரசிப்பு நமக்கு போதை எனும்போது, நம்ம போதை அவர்களுக்கு போதையோ போதை.

வேறொன்றும் இல்லை இப்ப ரெண்டு பேருக்குமே போதை தலைக்கேறிப்போச்சு.....

என் பொழுதுப்போக்கை தீர்மானிப்பதை வேறொருவருக்கு அகிகாரம் கொடுப்பதை எதிர்க்க வேண்டும்.

மதுக்கடைக்கு எதிராக போராடிய கூட்டம், மதுவை விட மோசமான திரைக்கூத்தை மட்டுப்படுத்த வேண்டும்.
குறைந்த கட்டணத்தில் திரைப்படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.

எவ்வளவு கொடுத்தாலும் பார்ப்பேன் என்றால், அது லட்சங்களாகி , அந்த லட்சம் நடிகனுக்கு ஊதியமாகி, அவன் நம்மை லட்சியமற்றவனாக்கி...

புலம்ப வேண்டியதுதான்.

இவர்களை நம்பியே தொலைக்காட்சியில் பிழைப்பு நடத்துபவர்களுக்கு போய் இதை காட்டாதே என்றால்... செய்வார்களா..?

அதுவும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். எல்லோரும் உட்கார்ந்து குடும்பத்தோடு செய்தியா பார்ப்பீங்க.. அதான் பொழுதுப்போக்கு நிகழ்ச்சியை செய்தி தொலைக்காட்சியில் நேரலையில் காட்டிட்டாங்க..

நடிகர்களுக்கு வேண்டும் என்றால் இது தேர்தலாக இருக்கலாம். நமக்கு வித்தியாசமான பொழுது போக்குதானே...

அப்புறம், நீ பார்கிறாய் நான் காண்பிக்கிறேன் என்பார்கள்.
நீ காண்பிப்பதால் நான் பார்க்கிறேன் என்பீர்கள்.

பரஸ்பரம் சண்டை போட்டு, சமூக வலைதளங்கள் என்ற புது எதிரியை, பொழுது போக்கியை உருவாக்கி கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல்...


- யுவராசன் வெ

சோறும், சொகுசும் என் வாழ்வின் இலக்கு


சோறும், சொகுசும் என் வாழ்வின் இலக்கு
இது தான் ஒட்டுமொத்த மனித குலமே ஆசை படுகிற வாழ்க்கை முறை...
சோற்றுக்காக...
பணம் வேண்டும்.
பணம் ஈட்ட பணி வேண்டும்..
பணி செய்ய படிப்பு வேண்டும்...
படிக்க (மட்டுமே) வாய்ப்புகள் இருப்பதால்...
வசதிக்கேற்ப எல்லோரும் படிக்கிறோம், படித்த பின் பணிக்கு செல்கிறோம், பணம் ஈட்டுகிறோம், ஏறக்குறைய சொகுசு சேர்க்கிறோம்..
சோறு உண்கிறோம்...
இந்த சொகுசும், சோறும் பெற போய்....
இப்ப உண்மையா மனதுக்கும் உடலுக்கும் சொகுசு தரும் இயற்கையை இழந்து வரோம்...
சோறு போடுற உழவை துறந்தோம்...
பட்டணம் போய் குளிரூட்டப்பட்ட அறையில் பணம் பயிரிட்டுக்கொண்டிருக்கிறோம்..
மழை காலமான புரட்டாசி, ஐப்பசியில் கோடையை உணர்கிறோம்...
விசிறி சுழலில் மூச்சு வாங்குகிறோம்...
கிராமத்தில் கழனிகள் கட்டாந்தரையாகிவிட்டன..
நீர்நிலை இல்லை..
உழைக்க ஆள் இல்லை..
காணுமிடமெல்லாம் கடைசி தலைமுறை உழவர்கள்...
இதை வெம்பி வெட்கமில்லாமல் எழுதி ஆதங்கபடுற என் உள்ளத்தின் இன்னொரு மூலை பணம் ஈட்டு , பணம் ஈட்டு , பணம் ஈட்டு... உழவால் பட்ட கடனை, இழந்த மதிப்பை ஈடுகட்ட பணம் ஈட்டு, பணம் ஈட்டு , பணம் ஈட்டு என்கிறது...
என்ன செய்வது...
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்...
என்று சொன்ன வள்ளுவன் தான்,
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு...
என்றும் சொல்லி இருக்கான்...

மனித உறவுகள் மேம்படட்டும்

ஒவ்வொரு மனிதனும் , சகமனிதர்களுடனான உறவை சரிவர மேற்கொள்ளாததால் தான் பொறாமை, வன்மம், ஆணவம், சகிப்பின்மை, அது இதுன்னு மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்குகிற பேரில் மனிதத்தை தொலைக்கிறார்கள்...

யாரை பார்த்தாலும், முகநூல் பதிவில் மனித உறவுகளில் உள்ள சிக்கல்களை மையமாக கொண்ட பொன்மொழிகளை பகிர்கிறார்கள் அல்லது தாங்களாகவே தத்துவங்களை எழுதி வைக்கிறார்கள்...

குறிப்பாக மனித உறவில் சிக்கல் , காதல், நட்பு ஆகியவற்றை தாண்டி, பணியிடங்களில் தான் அதிகமாக இருக்கிறது.

சக பணியாளர் படிக்கவே , தத்துவ பொன்மொழிகளை பதிந்து விடுவதாக ஆய்வில் தெரியவருகிறது.
அதனை சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கிறாரோ இல்லையோ, அதே கருத்துடைய வேறொருவர் பார்த்து பகிரப்படும் போது , இந்த உறவு சிக்கல் எவ்வளவு வீரியமாக பரவி கிடக்கிறது என்பது அடையாளப்பட்டு விடுகிறது.

இது சமூக சிக்கலாக்கி விடும் என்பதும் இன்னொரு அதிர்ச்சி...
இருந்தபோதும், சமூக வலைதளங்கள் இத்தகைய உளவியல் சிக்கல்களை கொட்டி தீர்க்கும் இடமாக அமையும் போது ஆறுதலான பகிர்வும், கருத்தும் மனமாற்றத்தை உண்டாக்கும்...

ஆனால் , இது எல்லா சூழலிலும் வேலை செய்யாது...
ஆக, இன்னா செய்யாமையை கடைபிடிக்கும் போது, எந்தஒரு இன்னலும் உறவுகளில் ஏற்படாது...
மனிதம் காக்க மனித உறவுகள் மேம்படட்டும்.. மனிதாபிமானம் மேலோங்கட்டும்.

திரிஷா இல்லைன்னா நயன்தாரா

அண்மையில் திரிஷா இல்லைன்னா நயன்தாரா திரைப்படத்தினை பார்க்க நேர்ந்தது.

அது அப்படியே இருக்கட்டும்.

கீழ்காண்பதை முதலில் படித்து விட்டு தலைப்புக்கு வருவோம்.
திரைப்படங்கள் பொழுதுப்போக்கு என்று கூறப்பட்டாலும், மக்கள் அதனை வெறும் பொழுதுப்போக்காக மட்டும் நுகர்வதில்லை....
திரைப்படம் - ஓர் ஊடகம்
அது மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கண்ணாடி..
அங்கு காட்டப்படும் காட்சிகள் கற்பனைகளாக இருந்தாலும், கதையோட்டம் சிறிதேனும் நடைமுறை வாழ்வியலோடு ஒன்றிகிடக்கும் என்பதில் அய்யமில்லை.
சமகால வாழ்க்கைமுறைகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணப்பட்டு போக திரைப்படங்கள் உதவுகின்றன.
செயல்பாடுகளில், பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் செய்ய, சீர்த்திருத்திக் கொள்ள, சரியானவற்றை அடையாளங்காண திரைப்படங்கள் உதவுகின்றன.
நாகரிக மாற்றங்களும், திரைப்படங்களோடு சம்பந்தப்பட்டுதான் இருக்கின்றன.
கதாபாத்திரங்களின் உடை, நடைகள் யதார்த்த மனிதர்களுக்கு தொற்றிக்கொள்கின்றன.
கற்பனைகள் காட்சியாக்கப்பட்டாலும், மீண்டும் அந்த காட்சி நிஜமாக்கப்படுகிறது என்பதும் மறுக்க இயலாது..
ஆக, இந்த காட்சி ஊடகத்தை கையாளும் கலைஞர்கள் சற்று நடப்பு சமூகவியலின் ஓட்டத்தை கருத்தில் கொண்டு காட்சிப்படுத்த வேண்டும்.
இப்போது நான் தலைப்பில் சொல்ல வந்ததை திரைப்படம் பார்த்தவர்கள் கண்டுபிடித்து இருப்பார்கள்.
இளையோர் காதல் வயப்படுவது, அது ஏற்கபடாமல் அல்லது முறிந்து போவது, மது பழக்கத்திற்கு ஆளாவது..
இதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கவே இருக்கின்றன.
இந்த திரைப்படத்தில் பதின்பருவ உணர்வுகளுக்கு தீனி போட்டு இருக்கிறார்கள்.
ஏதோவொரு வடிவில் உடலுறவுக்குள் காதலை அழைத்து செல்வதையே காணமுடிகிறது.
சமயத்தில் பெண்ணுடனான உறவை, குறிப்பாக பதின்பருவத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தி, இயல்பானதாகவே கொண்டு செல்கிறார்கள்.
வார்த்தைகளால் நிறைய ஆபாசம் பேசி இருக்கிறார்கள்..
அரங்கில் உள்ள இளைய கூட்டம் ஒலி எழுப்பி, தன் மனதில் உள்ளதை பிரதிபலிப்பதை கண்டு அங்கீகாரம் தேடிக்கொள்கிறார்கள்.
இவற்றிற்கெல்லாம் மேல் நம்முள் எழும் அச்சம்..
ஒரு பெண்ணை காதல் கொண்டு, திருமணம் வரை நீடிக்க, அவளுடன் உறவுகொள்வதை நியாயப்படுத்த முயற்சிக்கிறது இந்த திரைப்படம்..
அதே சமயம், ஓர் ஆணிடம் உறவு கொள்வதும், அவன் பிடிக்கவில்லை என்று உதறிவிட்டாலும், அந்த உறவு ஒரு பொருட்டல்ல என்பதையும் சொல்ல வருகிறது.
நாம் கற்பு என்பதையோ, கலாசாரம் என்பதையோ வலியுறுத்தவில்லை...
பாதையறியா பதின்பருவ உணர்வுகளுக்கு மடை கட்ட தவறும் ஊடகத்தை சீரமைக்க வேண்டும் என்பதுவே எண்ணம்.
மேற்குறிப்பிட்ட படம் வயதுவந்தோருக்கானது என்று சான்றிதழ் பெற்றாலும், குடும்பத்தோடு சிறார்களோடு வந்து படம் பார்த்து சென்றதை காண முடிந்தது திரையரங்கில்..
இது தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப எவ்வளவு காலம் ஆகிவிட போகிறது...

தலைநிமிர்வு கொண்டேன்..!


இரண்டரை ஆண்டு காலம் இருக்கும்...

தலைகுனிவு வாழ்க்கை..
பெரும்பாலும் பொது இடத்தில்
தனிமையில் இருந்தாலே தலைகுனிவு தான்...

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்பட்ட தொடர்பு...
காலத்தின் அவசியம், பணி நிமித்தம்...
தலைகுனிவு நிரந்தரமாகிவிட்டது...

ஜூலை 25, 2015 பகல் 1.30 மணி..
தலைகுனிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வரப்போவதை அந்த நொடி வரை அறிந்திருக்கவில்லை...

மாநகர பேருந்து வருகைக்காக காத்திருந்த அந்த பொழுதிலும்..
தொடர்பு நெருக்கமாகவே இருந்தது...

பேருந்து வந்தது..
முதல்படி ஏறும் அந்த கணமும் என் இதயத்தோடுதான் ஒன்றிகிடந்தது...

மூன்று படி ஏறி சமதளத்தில் நின்று
இதயத்தை தடவினேன்....

உறவு அற்றுப்போனது...
அல்ல அல்ல உறவு களவாடப்பட்டது.
தொடர்பு திருடப்பட்டது..

அப்போது தான் இதயத்தை வெகுநேரம் தொட்டப்படியே உணர்ந்துக்கொண்டேன்..
சென்னையில் திருடர்கள் இருப்பதை....

தலை நிமிர்ந்தது...
தலை நிமிர்வு என் சிந்தனைக்கு தீணிப்போட்டது...

அன்றைய நாளிலிருந்து..

பொது இடத்தில் தனிமையில் இருக்கும் போதெல்லாம்...
உலகை கவனித்தது என் கண்கள்..
மூளைக்குள் சிந்தனை, கற்பனை...
கவிதைகள்... அக்கறை கீற்றுகள்...
அசைபோட்டன எண்ணற்ற எண்ணங்கள்...

ஸ்மார்ட்டாக உணர்ந்தேன்...
ஸ்மார்ட்போன் தொலைத்த நிமிடத்தில் இருந்து...

ஸ்மார்ட்போன் தொலைந்ததாலோ, திருடப்பட்டதாலோ என் மனம் பதறவில்லை...
என் மனம் மீண்டது என்பதில் எனக்குள் திருப்தி...

இது எத்தனை காலம் என்பது தான்
எனக்குள் இன்னொரு கேள்வியும்...

ஆனாலும்...
தலைநிமிர்வுக்கொண்டேன்....

இது எத்தனை காலம் என்பது தான்
எனக்குள் மீண்டும் மீண்டும் கேள்வி...

அதுவரையிலும்...
தலைநிமிர்வுக்கொள்வேன்....

உங்கள் விவரம்